தனிக் கூட்டணி வைக்கும் மாயாவதி, அகிலேஷ் யாதவ் - காங்கிரஸுக்கு கல்தா

  Newstm Desk   | Last Modified : 20 Dec, 2018 12:35 pm
samajwati-and-bsp-plainning-to-form-alliance-seperately-big-jolt-to-congress

பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து ‘மகா கூட்டணி’ என்ற மாபெரும் அணியை கட்டமைக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. ஆனால், உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்தக் கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் தனியாக கூட்டணி வைப்பது குறித்து பேசி முடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அகிலேஷ் யாதவ் -மாயாவதி கூட்டணி அமைந்தால், பலமான அணியை கட்டமைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டிலேயே மிக அதிகபட்சமான நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டது உத்தரப் பிரதேச மாநிலம். இங்கு மொத்தம் 80 தொகுதிகள் உள்ளன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இங்கு பா.ஜ.க. கூட்டணி 72 தொகுதிகளில் வெற்றி பெற்றதே நாடாளுமன்றத்தில் அக்கட்சி தனிப்பெரும்பான்மை பெறுவதற்கு காரணமாக அமைந்தது. அந்த அளவுக்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது உத்தரப் பிரதேச மாநிலம்.

இங்கு கட்சிகளின் செல்வாக்கின் அடிப்படையில் பா.ஜ.க., சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு அடுத்த 4ம் இடத்தில் காங்கிரஸ் இருக்கிறது. இந்நிலையில், தேசிய அளவிலான மகா கூட்டணியில் அகிலேஷ் யாதவும், மாயாவதியும் இணைந்தால், அது உத்தரப் பிரதேச மாநிலம் மட்டுமல்லாமல் அக்கட்சிகளுக்கு ஓரளவு செல்வாக்குள்ள ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களிலும் கை கொடுக்கும் என்று காங்கிரஸ் கருதுகிறது. அதே சமயம், சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் ஒன்றிரண்டு இடைத்தேர்தலில் கூட்டணி அமைத்து பா.ஜ.க.வை வீழ்த்தியுள்ளன. அந்த சமயங்களில் காங்கிரஸும் ஆதரவு அளித்திருந்தது.

இருப்பினும், காங்கிரஸுடன் தேர்தலுக்கு முன்பு அணி சேருவதை சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் விரும்பவில்லை எனத் தெரிகிறது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் இந்த உத்தியைத்தான் அக்கட்சிகள் கடைப்பிடித்தன. அதே பாணியில் நாடாளுமன்றத் தேர்தலிலும் தனிக் கூட்டணி அமைப்பது என அகிலேஷ் யாதவும், மாயாவதியும் பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளதாகத் தெரிகிறது.

குறிப்பாக, இரு கட்சிகளுக்குமான தொகுதிப் பங்கீடு வரையில் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அஜீத் சிங்கின் ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சியும் கூட்டணியில் இடம்பெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே வேளையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி போட்டியிடும் ரே பரேலி ஆகிய தொகுதிகளில் மானசீகமான ஆதரவை அளிக்கும் வகையில், சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close