டெல்லி காங்கிரஸின் புதிய தலைவர் ஷீலா தீட்சித்?

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 11:14 am
sheila-dikshit-will-be-next-congress-chief-of-delhi

டெல்லி மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த அஜய் மக்கான் நேற்று பதவி விலகிய நிலையில், புதிய தலைவராக முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தை நியமிக்க அக்கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள ஆம் ஆத்மி கட்சியுடன், காங்கிரஸ் கூட்டணி சேருவதை ஷீலா தீட்சித் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், அதன் காரணமாகவே தலைவர் பதவியில் அவரை நியமிக்க கட்சி மேலிடம் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஷீலா தீட்சித் கருத்து தெரிவிக்கையில், “புதிய தலைவர் யார் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும். ராகுல் காந்தியும், மற்ற தலைவர்களும் என்ன முடிவு செய்கிறார்களோ, அதை நாங்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வோம் என்று தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சியுடன், காங்கிரஸ் கூட்டணி சேருவதை விரும்பாத காரணத்தினால்தான் கட்சித் தலைவர் பதவியில் இருந்து அஜய் மக்கான் விலகியதாகத் தெரிகிறது. இதற்கு முன்பு, கடந்த ஆண்டில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று அஜய் மக்கான் பதவி விலகினார். ஆனால், ராகுல் காந்தி கேட்டுக் கொண்டதன் பேரில் அவர் மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். 

அதே சமயம், காங்கிரஸ் கட்சியில் தேசிய அளவிலான பதவிகளில் அஜய் மக்கான் நியமிக்கப்பட இருப்பதாகவும், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏதுவாக அவர் பதவி விலகியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close