ம.பி.,யிலும் ‛கூவத்துார் பார்முலா’: சொகுசு விடுதியில் காங்., எம்.எல்.ஏ.,க்கள்!

  விசேஷா   | Last Modified : 05 Jan, 2019 11:37 am
cong-mla-s-in-resorts

மத்தியப்பிரதேசத்தில், கடந்த மாதம் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்குப் பின், இம்மாதம் 7ம் தேதி, புதிய அரசின் முதல் சட்டசபை கூட்டத் தொடர் துவங்க உள்ளது. இதில், காங்., எம்.எல்.ஏ.,க்கள், பா.ஜ., பக்கம் அணி மாறாமல் தடுக்க, கூவத்துார் பார்முலாவை அமல்படுத்த, காங்., மேலிடம் திட்டமிட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில், கடந்த ஆண்டு இறுதியில் நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 230 இடங்களில், காங்., 114 இடங்களிலும், பா.ஜ., 109 இடங்களிலும் வெற்றி பெற்றன.  இதை தொடர்ந்து, பகுஜன் சமாஜ் 2; சமாஜ்வாதி 1 மற்றும் சுயேட்சைகள் 4 பேர் ஆதரவுடன், காங்., ஆட்சியை கைப்பற்றியது. 

இதையடுத்து, ம.பி.,யில், சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான 15 ஆண்டு கால பா.ஜ., ஆட்சி முடிவுக்கு வந்தது. புதிய முதல்வராக காங்கிரசை சேர்ந்த, கமல்நாத் பொறுப்பேற்றார். 

இதற்கிடையே, புதிய அரசு அமைத்த பின், இந்த அரசின் முதல் சட்டசபை கூட்டத் தொடர், வரும் 7ம் தேதி நடக்கிறது. காங்கிரசுக்கும், பா.ஜ.,வுக்கும் எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கையில் பெரிய வித்தியாசம் இல்லாததால், கமல்நாத் தலைமையிலான காங்.,  அரசு ஒரு வித பீதியுடனே செயல்பட வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில், முன்னாள் முதல்வர் ஜெ., மறைவுக்குப் பின், அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட பிளவின் போது, எம்.எல்.ஏ.,க்கள் அணி மாறுவதை தடுக்க, அந்த கட்சி எம்.எல்.ஏ.,க்கள், கூவத்துாரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். 

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலுக்குப் பின், எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் போனபோது, அங்குள்ள அரசியல் கட்சிகள் இதே பாணியை கடைபிடித்தன.

தற்போது, ம.பி.,யில் காங்., தலைமையிலான அரசுக்கு மிகப்பெரிய மெஜாரிட்டி இல்லாததால், ஆட்சியை காத்துக்கொள்ளவும், தங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அணி மாறுவதை தடுக்கவும், காங்., மேலிடம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 

சட்டசபை கூட்டம் துவங்கவுள்ளதால், காங்கிரஸ் மற்றும் அதன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை ஒரே இடத்தில் தங்க வைக்கும் வகையில், போபாலில் சொகுசு விடுதிகளில் ஏராளமான அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஏற்கெனவே, ம.பி., முன்னாள் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான திக்விஜய் சிங், காங்.,எம்.எல்.ஏ.,க்கள் விலை போக வாய்ப்புள்ளதாக கருத்து தெரிவித்த நிலையில், அந்த கட்சியின் இந்த நடவடிக்கை, அவரின் கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close