பா.ஜ.,வுக்கு எதிராக பீஹாரிலிருந்து கிளம்பும் அடுத்த அஸ்திரம் 

  விசேஷா   | Last Modified : 07 Jan, 2019 01:00 pm
grand-alliance-against-bjp

 

வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான அணியை தோற்கடித்து, மத்தியில் அந்த கட்சியை மீண்டும் ஆட்சி அமைக்க விடாமல் தடுக்கும் முயற்சிகளில்,  நாட்டின் பல்வேறு அரசியல் கட்சித் தலைலர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.  அந்த வரிசையில், பீஹார் முன்னாள் முதல்வர் லாலுவின் மகன் தேஜஸ்வியும் மெகா கூட்டணி என்ற  அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார். 

வரும் மே மாதத்துடன், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., ஆட்சியின் பதவிக் காலம் நிறைவடைவதால்,  அதற்கு முன்பாக, லோக்சபா தேர்தலை நடத்த, தேர்தல் கமிஷன் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 

மிக விரைவில், தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் எனும் நிலையில், பா.ஜ.,வுக்கு எதிராக, தேசிய அளவிலான மெகா கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் பல்வேறு அரசியல் கட்சித் தலைலவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

பா.ஜ.,வுக்கு எதிரான ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என, முதன்முதலில், திரிணாமுல் காங்.,  தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி குரல் எழுப்பினார். 

மாநில அரசியலில் எலியும், பூனையுமான இருந்த கம்யூனிஸ்ட்டுகள், மம்தாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தன.  எனினும், மத்தியில், காங்கிரசுடன் இணக்கமாக உள்ள கம்யூனிஸ்ட்டுகள், திடீரென மம்தாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பியது, காங்., தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

மம்தாவின் கருத்து தேசிய அரசியலில் சற்று பரபரப்பை ஏற்படுத்தினாலும், அதன் பின் காலப்போக்கில் அவை காற்றில் கரைந்தன. 

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ., கணிசமான இடங்களை கைப்பற்றியதை தொடர்ந்து, அந்த மாநிலத்தில், பா.ஜ.,வின் செல்வாக்கு உயர்வதை கண்டு, மம்தா அதிர்ச்சி அடைந்தார்.

இதனால், மாநில அரசியலில் அதிக கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட மம்தா,  தேசிய அரசியல் பற்றி தற்போது வாய் திறக்க மறுக்கிறார். 

அவரை தொடர்ந்து, டி.ஆர்.எஸ்., தலைவரும், தெலுங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ், திடீரென தென் மாநிங்களை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து, பா.ஜ., - காங்கிரசுக்கு எதிராக தேசிய அளவில், மூன்றாவது அணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். 

இதனிடையே, தெலுங்கானாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராகியுள்ளார் ராவ். 

 அவர், அடுத்து நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட்டு, அதிக இடங்களை கைப்பற்றுவதன் மூலம், தேர்தலுக்குப் பின், மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சியுடன் கூட்டணி அமைத்து, மத்திய அமைச்சர் பதவிகளை பெறும் எண்ணத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. 

இதன் காரணமாகவே,  தேசிய அளவிலான கூட்டணி குறித்து அவர் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருப்பதாவும் அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அதற்கு அடுத்தபடியாக,  பா.ஜ., தலைமையிலான கூட்டணியில் நான்கரை ஆண்டு காலம் அங்கம் வகித்த, டி.டி.பி., தலைவரும், ஆந்திர முதல்வருமான, சந்திரபாபு நாயுடு,  திடீரென அந்த கூட்டணியிலிருந்து விலகினார்.

 மத்திய பா.ஜ., அரசை கடுமையாக விமர்சித்த அவர், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா, காங்., தலைவர் ராகுல் உள்ளிட்டோரை சந்தித்து மெகா கூட்டணி குறித்து ஆலோசித்தார்.  எனினும், அவரின் முயற்சிகளும் ஆரம்ப கட்டதை விட்டு இன்னும் தாண்டவில்லை. 

‛லோக்சபா தேர்தலுக்குப் பின், அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக,  ஸ்டாலின் செயல்படுவார்’ என சந்திரபாபு நாயுடு கூறினார். இதன் மூலம், தானும் பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் இருப்பதை, நாயுடு வெளிப்படுத்தியதாக பார்க்கப்பட்டது.

இந் நிலையில், எதிர்க் கட்சிகளின் ஒருங்கிணைந்த பிரதமர் வேட்பாளராக, காங்., தலைவர்  ராகுலை முன்னிறுத்த வேண்டும் என, ஸ்டாலின் பேசியது,  பிற மாநில கட்சித் தலைவர்களை முகம் சுழிக்க வைத்தது. 

பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதியை சேர்ந்த, உ.பி., முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ்,  மேற்கு வங்க முதல்வர் மம்தா, டி.டி.பி., தலைவர் நாயுடு, டி.ஆர்.எஸ்., தலைவர் ராவ் உள்ளிட்டோர் உள்ளனர். 

இவர்கள் யாருமே, ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்க விரும்பவில்லை.  அதன் அடையாளமாகவே லோக்சபா தேர்தலுக்கான, உ.பி., மாநில கூட்டணியில் இருந்து, காங்கிரஸ் கழற்றிவிடப்பட்டுள்ளது. இதில், மாயாவதி - அகிலேஷ் ஆகியோரின் கட்சிகள் பிற உதிரி கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. 

இந்நிலையில், பா.ஜ.,வுக்கு எதிரான மன நிலையில் உள்ள அனைத்து எதிர்க் கட்சிகளையும் ஒருங்கிணைத்து, தேசிய அளவில் மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில், லாலுவின் மகனும், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை சேர்ந்தவருமான,  தேஜஸ்வி யாதவ் களம் இறங்கியுள்ளார். 

முதலில், பீஹாரில் உள்ள, 40 தொகுதிகளுக்கான கூட்டணி பேச்சு வார்த்தையிலிருந்து தன் முயற்சியை துவக்கியுள்ள அவர், அதை தேசிய அளவில் முன்னெடுத்து செல்லவும் திட்டமிட்டுள்ளார். பாட்னாவில் உள்ள தேஜஸ்வியின் வீட்டில் இன்று நடக்க இருக்கும் கூட்டத்தில், எதிர்க் கட்சித் தலைவர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர். 

ஆர்.எல்.எஸ்.பி., தலைவர் உபேந்திர குஷ்வாஹா, ஹிந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சா தலைவரும், பீஹார் முன்னாள் முதல்வருமான ஜிதன்ராம் மஞ்ஜி, ஐக்கிய ஜனதாதளத்தில் இருந்து பிரிந்து தனி அமைப்பை துவங்கிய உள்ள சரத் யாதவ் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் என பலரும் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

பா.ஜ.,வுக்கு எதிராக, மத்தியில் பலமான கூட்டணி அல்லது மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில், பல அரசியல் தலைவர்கள் தோல்வி கண்டுள்ள நிலையில், தற்போது, பீஹாரிலிருந்து தேஜஸ்வி தலைமையில் புதிய அஸ்திரம் ஏவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்த முயற்சி எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பதை பாெறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close