காங்கிரஸ் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்: மாயாவதி

  Newstm Desk   | Last Modified : 12 Jan, 2019 01:27 pm
akilesh-maya-alliance

 

'நாடு சுதந்திரம் அடைந்த பின், காங்கிரஸ் கட்சி, மத்தியில் பல ஆண்டுகள் ஆட்சி செய்தது.  அதனால் நாட்டு மக்களுக்கு எந்த பலனும் ஏற்படவில்லை. காங்கிரஸ் கட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். எனவே, இனியும், காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதால் எந்த பலனும் ஏற்படப்போவதில்லை' என, பகுஜன் சமாஜ்வாதி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். 

வரும் லோக்சபா தேர்தலில், உத்தர பிரதேசத்தில் உள்ள, 80 லோக்சபா தொகுதிகளில், அகிலேஷ்  யாதவின் சமாஜ்வாதி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.
இது குறித்து, மாயாவதி செய்தியாளர்களிடம் பேசியதாவது:

போபர்ஸ் ஊழலால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது; ரபேல் விவகாரத்தால், பா.ஜ.,வும் ஆட்சியை இழக்கும். சுதந்திரத்திற்கு பின், பல ஆண்டுகள் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரசால், நாட்டிற்கு எந்த பலனும் ஏற்படவில்லை. 

உத்தர பிரதேச மாநிலத்தின் நலனுக்காக காங்கிரஸ் தலைமையிலான எந்த அரசும், எந்த முயற்சியும் எடுக்கவில்லை. காங்கிரஸ் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர். இந்த நிலையில், பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி இடையிலான எங்கள் கூட்டணியில் காங்கிரசை சேர்க்க வேண்டிய அவசியம் கிடையாது. 
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதால், எங்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை.

காங்கிரஸ் ஆட்சியில், அறிவிக்கப்பட்ட அவசர நிலை பிரகடனம் அமலில் இருந்தது. தற்போதைய பா.ஜ., ஆட்சியில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலவுகிறது. காங்கிரஸ் மற்றும் பா.ஜ., ஆகிய இரு கட்சிகளும் ஊழல் கட்சிகள் தான்.

எனவே, வரும் லோக்சபா தேர்தலில், அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியும், எங்களின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடும். இந்த முறை, மத்தியில் ஆட்சி அமைப்பது யார் என்பதை, உத்தர பிரேதசம் முடிவு செய்யும். அதாவது எங்கள் கூட்டணியே முடிவு செய்யும். 
மத்தியில், ஊழலற்ற ஆட்சி மலர ஒன்றிரண்டு கட்சிகள் மட்டும் இணைந்தால் போதாது; ஒருமித்த கருத்துடைய கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும். 

வரும் தேர்தலில், உ.பி.,யில், பகுஜன் சமாஜ், 38 இடங்களிலும், சமாஜ்வாதி 38 இடங்களிலும் போட்டியிடும், மீதமுள்ள நான்கு தொகுதிகளில், 2 வேறு கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும். காங்., தலைவர் ராகுல் மற்றும் சோனியாவின் தொகுதிகளான, அமேதி மற்றும் ராய்பரேலியில்,  எங்கள் கூட்டணி போட்டியிடாது. இவ்வாறு அவர் பேசினார்.
இதை தொடர்ந்து, அகிலேஷ் யாதவும், கூட்டணி உறுதியானதை தெளிவுபடுத்தினார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close