நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு 'காவிரி' தந்த பின்னடைவு

  முத்துமாரி   | Last Modified : 06 Apr, 2018 04:59 pm

காவிரி பிரச்னையால் நாடாளுமன்றம் போராட்டக்களமாக மாறியதன் விளைவாக, கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத 'மோசமான கூட்டத் தொடர்' என்ற பெரும் பின்னடைவை 2018-19 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் சந்தித்துள்ளது.

2018-19ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 29 முதல் பிப்ரவரி 9ம் தேதி வரையிலும், இரண்டாம் அமர்வு மார்ச் 5ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரையிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி முதல் அமர்வு முடிவு பெற்ற நிலையில், இரண்டாம் அமர்வு மார்ச் 5ம் தேதி தொடங்கியது. இதற்கிடையே பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாம் அமர்வின் தொடக்கம் முதலே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து அ.தி.மு.க, தி.மு.க எம்.பிக்கள் போராடினர். அ.தி.மு.க எம்.பிக்களின் தொடர் போராட்டம்தான் அவை முடக்குவதற்கு முக்கிய காரணம் என எதிர்கட்சிகளால் விவாதிக்கப்பட்டது.

இதற்கிடையே, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் எனக்கூறி மத்திய அரசு அதை நிறைவேற்றாததைக் கண்டித்து தெலுங்கு தேசம் கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராடி வருகின்றனர். இதற்காக அக்கட்சி பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சியின் கூட்டணியில் இருந்து விலகியது. நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரவும் முயற்சி செய்து வருகிறது.

கூட்டத்தொடரின் இறுதிநாளான இன்று நாடாளுமன்றம் ஸ்தம்பிக்கும்அளவுக்கு போராட்டத்தை தீவிரப்படுத்துமாறு முதல்வர் சந்திரபாபு நாயுடு அக்கட்சியின் எம்.பிக்களுக்கு வலியுறுத்தியுள்ளார். அதே நேரத்தில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய அரசைக் கண்டித்து ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி.கள் 5 பேர் இன்று தங்களுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

அதே நேரத்தில் வடமாநிலங்களில் எஸ்.சி/எஸ்.டி சட்டத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிராக போராட்டம் வெடிக்கிறது. இதுமட்டுமின்றி பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட பிறக்கட்சிகளும் போராட்டம் நடத்துகின்றன.

நேற்று(ஏப்ரல்.5) காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து போராட்டம் நடத்தினர். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 17 கட்சிகளின் எம்.பி.க்கள் இதில் பங்கேற்றனர்.

அதே நேரத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தும் காங்கிரஸ் கட்சியை கண்டித்து பா.ஜ.க எம்.பிக்கள் வருகிற 12ம் தேதி டெல்லியில் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதாக அமைச்சர் அனந்தகுமார் தகவல் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தை நடக்கவிடாமல் காங்கிரஸ் தான் மற்ற கட்சிகளை தூண்டி விடுவதாக பா.ஜ.க குற்றம் சாட்டியுள்ளது.

அ.தி.மு.க எம்.பிக்களின் போராட்டத்திற்கு எதிராக கர்நாடக எம்.பிக்கள் போராட்டக்களத்தில் குதித்துள்ளனர். அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கையில் பதாகைகளுடன் கோஷம் எழுப்பினர்.

இன்று கூட்டத்தொடரின் இறுதி நாள் என்ற நிலையில் மசோதாக்கள் எதுவும் தாக்கல் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் நிகழும் பல்வேறு பிரச்னைகள் குறித்து அவையில் எந்தவித விவாதமும் முழுமையாக நடைபெறவில்லை.

இரண்டாம் அமர்வில் லோக்சபாவில் அதிகபட்சம் 114 மணி நேரம் நடக்க வேண்டிய கூட்டத்தொடர் வெறும் 4 மணி நேரம் 52 நிமிடங்களே நடந்துள்ளது. ராஜ்யசபாவில் 112.5 மணி நேரம் நடக்க வேண்டிய கூட்டத்தொடர் 9 மணி நேரம், 26 நிமிடங்களே நடைபெற்றுள்ளது. இதனால் லோக்சபாவில் 109.48 மணி நேரம், ராஜ்யசபாவில் 103.24 மணி நேரங்கள் வீணாகியுள்ளது. மொத்தமாக இரண்டு அமர்விலும் சேர்த்து லோக்சபாவில் 55.2 மணி நேரமும், ராஜ்யசபாவில் 33.6 மணி நேரம் மட்டுமே அவை நிகழ்ந்துள்ளது. கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான கூட்டத்தொடர் இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்றுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நம்பிக்கையில்லா தீர்மானத்தை மற்ற எதிர்க்கட்சிகள் கொண்டு வர முயற்சித்தபோது முட்டுக்கட்டையாக அ.தி.மு.க தான் இருந்ததாக அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றன. நாடாளுமன்ற முடக்கம் என்பது அ.தி.மு.கவினரின் வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், நாட்டிலேயே மூன்றாவது மிகப் பெரிய கட்சியாக நாடாளுமன்றத்தில் வலம் வரும் அ.தி.மு.க, நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வர ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு கொடுத்திருந்தால், அக்கட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை வந்திருக்கும் என்றும் ஒரு சில எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர். மேலும், அவர்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய முன்வராமல் நாடாளுமன்றத்தை முடக்குவதில் மட்டுமே குறியாக இருந்ததும் நாடகமே என்கின்றனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close