சிவகங்கையில் ஒரு நாள் மட்டுமே செல்லுபடியான காங்கிரஸ் கட்சியின் கெத்து

  பாரதி பித்தன்   | Last Modified : 25 Mar, 2019 02:41 pm
does-congress-party-had-its-influence-just-for-one-day-alone-in-sivagangai-constituency

காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் தேர்வு சவாலான விஷயம். அனைத்து கோஷ்டிகளும் ஏற்கும் வேட்பாளர் என யாருமே அந்த கட்சியில் இல்லாத நிலை. இதனால் உச்சபட்ச தாமதமாகத்தான் அந்த கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.

வேட்புமனுத்தாக்கலின் கடைநாளில் கூட வேட்பாளர் பட்டியல் வெளியான சம்பவமும் உள்ளது. எதிர்ப்பாளர்கள் உஷாராகி வேட்பாளரை எதிர்த்து மனுத்தாக்கல் செய்வதை தடுக்க அந்த கட்சி இந்த ஏற்பாட்டை செய்யும். அதற்கு இணையாகத்தான் இந்த தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலும் வெளியானது.

திமுக கூட்டணியில் பெரிய கோஷ்டிக்கு ஒன்று என்ற அடிப்படையில் இடங்களை பெற்றால் கூட அவற்றை வெளிப்படையாக அறிவிக்க முடியாமல் தான் கடந்த 23ம் தேதி நள்ளிரவு வரை வேட்பாளர் அறிவிப்பு தள்ளிப் போடப்பட்டது. 

இத்தனை தாமதமாக வெளியான பட்டியலில் சிவகங்கை தொகுதி இடம் பெறவில்லை. இந்த தொகுதியில் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மகன் போட்டியிட விருப்பம் தெரிவித்திருப்பதால், அவரின் இன்றைய நிலையை கருத்தில் கொண்டு வேட்பாளர் அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல்கள் பரவின.

அது உண்மையாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் உட்பட பல கட்சியினர் விருப்பமாக கூட இருந்தது. ஆனால் ஒரே நாளில் எல்லோருடைய எண்ணத்திலும் மண்ணைப் போடும் விதமாக காங்கிரஸ் கட்சி அவருக்கே சிவகங்கை தொகுதியை ஒதுக்கி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழகத்தில் சமீபகாலமாக பத்திரிக்கை, ஊடகங்களின் வெளியான பெயர் சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், நளினி சிதம்பரம். இப்படி ஒரு குடும்பத்தி்ன் பெயர் அலைபோல வெளியே வர அவர்கள் செய்த ஊழலே காரணம். 

கார்த்தி சிதம்பரம் ஐஎன்எஸ் மீடியா நிறுவனம் சட்டவிரோதமாக அந்நிய முதலீடு பெற உதவியதாக சிபிஐ அவரை கைது செய்தது. தற்போது ஜாமீனில் உள்ளார்.  2004ஆம் ஆண்டில் இருந்து தொட்டுத் தொடரும் இந்த ஊழல் பாரம்பரியம் முடிவுக்கு வர வேண்டும் என்றால்  அவர் எம்பி ஆவது கட்டாயம். அதனால் தான் மொத்த குடும்பமும் முழுமையாக முயற்சி செய்து தற்போது கட்சிக்குள் வெற்றி கண்டு இருக்கிறார்கள்.

இது குறித்து காங்கிரஸ் பிரமுகர் சுதர்சன நாச்சியப்பன் கூறுகையில், சிவகங்கை தொகுதிக்கு எதையும் செய்யாமல் வெளிநாட்டில் சொத்து சேர்த்துள்ளார்கள் என மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள்‘‘ என்று கூறினார். 

கடந்த ஆண்டு மே மாதம் சிதம்பரம், அவர் மகன் கார்த்தி ஆகியோரை ஏர்செல் மேக்சிஸ் நிறுவன வழக்கில் கைது செய்வதற்கு நீதிமன்றம் தடைவிதித்தது. தொடர்ந்து இந்த தடை கடந்த ஜனவரி 11ம் தேதி வரை நீடித்தது. 

இன்னொருபுறம் சாரதா நிதி நிறுவன ஊழல் வழங்கில் நளினி சிதம்பரம் தொடர்பு குறித்து தனியே வழக்கு போய்க் கொண்டு இருக்கிறது. 
இப்படி அந்த குடும்பமே கோர்ட்டுக்கு அலைந்து கொண்டு இருக்கிறது. அதற்கு இடையில் பாராளுமன்றம் கூடும் நாட்களில் அங்கு சென்று ஆஜராகி வருகிறது சிதம்பரத்தின் குடும்பம். 

இப்படி ஊழல் தோளில் கிடக்கும் துண்டாக தொடரும் சிதம்பரத்தின் குடும்பத்திற்கு காங்கிரஸ் கட்சி இடம் ஒதுக்கி இருப்பதன் மூலம், அவர்கள் ஆட்சியில் ஊழல்கள் செய்பவர்கள் எப்படி தண்டிக்கப்படுவார்கள் என்று எடுத்துக்காட்டி இருக்கிறார்கள். 

2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி முறிவுக்கு 2 ஜி வழக்கு காரணமாக அமைந்தது. அந்த தேர்தலின் மையமாக இந்த பிரச்னை உருவெடுத்தது. 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் இதன் தாக்கம் இருந்தது.

இந்த இரண்டு தேர்தல்களிலும் 2ஜி வழக்கை சிறப்பாக மக்கள் மத்தியில் கொண்டு சென்று பாரதிய ஜனதா வெற்றி பெற்றது. 2016ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலிலும் இந்த வழக்கு எதிரொலித்தது. 

இந்த தேர்தல்களில் பல காரணங்களால் திமுக, காங்கிரஸ் தோற்றாலும் கூட அதில் 2ஜி வழக்கையும் காரணமாகக் கூற முடியும். 
அதே போன்ற வாய்ப்பைத் தான் காங்கிரஸ் கட்சி தற்போது ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரத்திற்கு இடம் இல்லை என்றதும், ஊழல் கரைபடிந்தவர்களை காங்கிரஸ் களம் இறக்காது என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

ஆனால் ஒரே நாளில் அந்த நம்பிக்கையை போட்டு உடைத்துவிட்டது. எதிர்கட்சிகள் 2ஜிக்கு இணையாக இந்த விவகாரத்தை பேசத் தொடங்கினால் பாதிப்பு சிவகங்கைக்கு மட்டும் அல்லாமல் ஒட்டு மொத்த தமிழகத்திலும் தொடரும். இதனை திமுக எப்படி சமாளிக்கப் போகிறது என்பது தான் இப்போதுள்ள கேள்வி.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close