சீசரின் மனைவி மட்டுமே சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டுமா? நம் நாட்டு அரசியல் கட்சிகள் அவ்வாறு இருக்க வேண்டாமா?

  பாரதி பித்தன்   | Last Modified : 26 Mar, 2019 02:07 pm
does-cesor-s-wife-alone-behave-beyond-doubt-why-the-same-could-not-be-applied-to-our-politicians

சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அதற்கு இணையாக நினைக்க வேண்டியவர்கள் தான் பொதுவாழ்க்கையில் களம் காண்பவர்கள்.

அவர்களின் ஒற்றைக் கையெழுத்து இந்த நாட்டின் தலையெழுத்தையே புரட்டிப்போட்டு விடும். இப்படிப்பட்டவர்களை தேர்ந்தெடுக்கும் போது மக்களாகிய நாம்தான் மிகுந்த ஜாக்கிரதையாக தேர்வு செய்ய வேண்டும். அறிவு ஜீவிக்கும் ஓர் ஓட்டுதான், அப்பாவிக்கும் ஓர் ஓட்டுதான். இங்கு அப்பாவிகள் எண்ணிக்கை அதிகம் என்ற போது அரசியல் கட்சித் தலைவர்கள் கறைபடித்த கரத்துக்கு சொந்தக்கார்களை தவிர்க்க வேண்டியது அவசியம்.

ஆனால் அவர்களோ எண்ணிக்கை மட்டும் தான் வெற்றியை நிர்ணயம் செய்கிறது என்பதால் நேர்மையாளர்கள் மீது கூட கரைபடிய வைத்து விடுகிறார்கள். இன்றும் கூட காமராஜர் ஆட்சியைக் கொண்டுவருவேன் என்று சவால் விட்டு, கோரிக்கைவிடுத்து ஆட்சியை பிடிக்கிறார்கள். ஆனால் இதே காமராஜர் மீதே பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளை மீண்டும் மீண்டும் பேசி அவரை தோற்கடித்த தமிழகம் இது. 

இந்த சூழ்நிலையில் மத்தியிலும் சரி மாநிலங்களிலும் சரி  தேர்தல்களத்தில் இருக்கும் பெரும்பாலான எதிர்கட்சியினர் பலர் ஊழல் குற்றச்சாட்டுகளை, வழக்குகளை சந்தித்து, ஜாமினில் வெளியே வந்து தேர்தலில் போட்டியிடுகின்றனர். நாளை இவர்கள் வெற்றி பெற்றால் இந்தியாவின் பல ஆயிரம் கோடி பொருளாதாரத்தை கையாளப் போகிறார்கள்.

இவர்கள் யாருக்காக தேர்தல் களத்தில் நிற்கிறார்கள்? இவர்கள் நிச்சயம் ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயர்த்தத்தான் போட்டியிடுகிறார்கள் என்று அந்த கட்சித் தொண்டர்களே கூட நினைக்க முடியாத நிலை தான் தற்போது உள்ளது. 

போஃபர்ஸ் பீரங்கி ஊழல் போல தீர்வு காண வேண்டிய பல ஊழல்கள் இருந்தால் கூட சோனியா, ராகுல் மீது நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை நிறுவத்தை வாங்கியதில் முறைகேடு செய்தாக குற்றச்சாட்டு உள்ளது. அரசியல் கட்சி அலுவலகத்திற்கு செல்லும் வழியிலேயே பிரியங்கா தன் கணவர் ராபர்ட் வாத்ராவை சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக இறக்கிவிட்டு செல்கிறார். இந்த குடும்பம் தான் நாளை இந்த நாட்டை ஆட்சி செய்யப் போகிறது. 

மேற்கு வங்கத்தை பல ஆண்டுகளாக தன் கையில் வைத்திருந்த இடதுசாரிகளை துாக்கி எறிந்து ஆட்சியை பிடித்தவர் மம்தா. ஆனால் அவர் மீதே சாரதா நிறுவன முறைகேடு பற்றிய குற்றச்சாட்டு உள்ளது. இது ஏதோ வளர்ச்சி திட்டத்தை அமல்படுத்தி அதில் நடந்த ஊழல் அல்ல. பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் சிரமத்தை அனுபவித்து எதிர்காலத்திற்கு தேவை என சேர்த்து வைத்த தொகையை திருடிவிட்டார்கள் என்ற குற்றச்சாட் அது. 

சந்திரபாபு நாயுடு, மகா கத்பந்தன் கூட்டணியை அமைக்க கடும் முயற்சியை மேற்கொண்டார். பாஜ அரசை வீழ்த்திவிட்டு அதைவிட சிறப்பான அரசை கொண்டு வந்து மக்களை வாழ வைக்க வேண்டும் என்பதைவிட மறைமுகமாக அவர் ஊழல் குற்றச்சாட்டுகளை விட்டு வெளியே வர வேண்டும் என்ற திட்டம் உள்ளது. கலப்பட பால் வழக்கு அவர் மீது கத்தி போல தொடங்கி கொண்டு இருக்கிறது. 

இப்படி ஒவ்வொரு மாநிலமாக எடுத்து ஆராய்சி செய்தால் ஊழல்குற்றச்சாட்டுகள் கொண்டவர்கள் தான் நேர்மையாளர்களாக அரிதாரம் பூசி வருகிறார்கள். 

தமிழகத்திலும் இதே நிலைதான். 

கனிமொழி, அ.ராசா, தயாளு மீதான 2 ஜி வழக்கு மீண்டும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கலாநிதி மாறன், தயாநிதிமாறன் மீதான வழக்கில் கைது செய்யப்படுவீர்கள் என்று கோர்ட்டே எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கருணாநிதி குடும்பம் மட்டும் அல்லாமல் திமுகவினர் பலர் மீது, நில அபகரிப்பு மற்றும் சொத்துகுவிப்பு வழக்கில் சிக்கிக் கொண்டு இருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் கோசி மணி மகனுக்கு சட்டவிரோத பணபரிமாற்ற குற்றச்சாட்டில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

இப்படிப்பட்டவர்கள் தான் இன்று தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.ஓட்டு வாங்கி ஊழலை ஒழித்து நாட்டை வளப்படுத்தப் போகிறார்கள். இவர்கள் மீது மட்டும் தான் ஊழல் குற்றச்சாட்டு உள்ளதா, குட்கா ஊழல் உட்பட பல கண்ணுக்கு தெரியவில்லையா என்ற கேள்வி எழுவது நியாயம் தான்.

ஆனால் மத்தியில் இருக்கும் அரசு வலிமையான அரசாக நேர்மையான அரசாக இருக்கும் என்றால் கட்டாயம் நடவடிக்கை எடுக்க முடியும். 

பாஜ அதிமுக கூட்டணியில் வாஜ்பாய் ஆட்சியில் ஜெயலலிதா வழக்கு கோர்ட்டில் தீவிரமாக நடைபெற்றது. இந்தியாவில் முதன் முதலில் முதல்வர் மீது வழக்கு செல்கிறது. அதில் எந்த தீர்ப்பு வரும் என்று யாருக்கும் தெரியாது. அந்த சூழ்நிலையில் மத்திய அரசு அந்த வழக்கில் தலையிட வேண்டும் என்று அப்போது பிரதமராக பதவி வகித்த அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு, தமிழக முதல்வரான ஜெயலலிதா அழுத்தம் கொடுத்தாக விபரம் தெரிந்தவர்கள் கூறினார்கள். ஆனால் அதற்கு இணங்காமல் மத்திய அரசே கவிழ்ந்தது என்பதுதான் நம் நாட்டு வரலாறு. 

அதே நேரத்தில் சமீபத்தில் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளரை அறிவிக்காமல் விட்ட அன்று, அந்த கட்சியின் மீது நேர்மையாளர்கள் மத்தியில் மிகப் அதிகமான மரியாதை ஏற்பட்டது. அதையெல்லாமல் மறுநாள் குழி தொண்டி புதைக்கும் வகையில் சமீபத்திய வேட்பாளர் அறிவிப்பு இருந்தது. இது தான் கட்சி தலைமையின் முடிவு என்றால் ஒட்டுமொத்த வேட்பாளர் பட்டியலை அறிவித்து இருக்கலாம். அல்லது அவருக்கு இடம் இல்லை என்று முடிவு செய்து இருந்தால் வேறு ஒருவரை அறிவித்து இருக்கலாம்.

இப்படி ஒரு நாள் நாடகம் நடத்தி இருக்க வேண்டாம். இதனால் அந்த நாளில் சம்பந்தப்பட்டவர்கள் எந்த விதத்தில் கட்சி தலைமையை பணிய வைத்தார்கள் என்பது கேள்விக்குறி. ஒரு தொகுதியின் வேட்பாளரை முடிவு செய்து அமல்படுத்த முடியாத காங்கிரஸ் கட்சி, ஊழல் தொடர்பான வழக்குகளை சந்தித்து வருபவர்களுக்கு, ஊழல் செய்தவர்களுக்கு அமைச்சம் பதவியை கொடுப்பதில், குறைந்த பட்டசம் தங்கள் ஆட்சியில் ஊழல் நடப்பதை  தடுக்க முடியும். 

இதையெல்லாம் வாக்களிக்கும் முன்பு மக்களாகிய நாம் கவனத்தில் கொள்வது அவசியம்

( என்னங்க நீங்கபாட்டுக்கு இப்படி எழுதுறீங்களே, காலையில கொடுத்த ரூ. 2 ஆயிரத்தை, நம்மிடமிருந்து திருப்பிவாங்க வந்துவிட மாட்டாங்களா என்று மனைவியின் அலறல் கேட்டதும் எதுவுமே எனக்குத் தோன்றவில்லை)

newtm.in

இந்த கட்டுரையில் இடம் பெறும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துக்களே.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close