குதிரை சவாரி செய்து ஓட்டப்பந்தையத்தில் வென்ற காம்ரேட்டுகள்!

  பாரதி பித்தன்   | Last Modified : 27 May, 2019 06:02 pm
what-to-do-for-survival-of-cpi-and-cpm-in-india

இடதுசாரி இயக்கங்கள், குறிப்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 93 ஆண்டு பாரம்பரியம் மிக்கது. சுந்திர இந்தியாவில் எதிர்கட்சியாக இருந்தது கம்யூனிஸ்ட்கள். மேற்கு வங்கம், திரிபுரா மாநிலங்களில் சமீப காலம் வரை ஆட்சி செய்தவை. கேரளாவில் மட்டும் தற்போது ஆளுங்கட்சியாக உள்ளது. 

அதே நேரத்தில் தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில், குறிப்பிட்ட அளவிலான தொண்டர்களை கொண்டதாகவும் உள்ளது. ஆனாலும், தேர்தல் அரசியல் என வந்துவிட்டால், ஓட்டை குடத்தில் நிரப்பிய நீர் போலத்தான். தனித்து போட்டியிட்டால் டெபாசிட் கிடைப்பதே சந்தேகம் என்ற நிலை தான் இன்று. 

ஆங்கிலேயேர் ஆட்சிக்காலத்தில், உலகிலேயே வருமானத்தில் முதலிடத்தில் இருந்த  வங்காளம், இடதுசாரிகளின் தொடர் ஆட்சியில், கடும் வீழ்ச்சியடைந்தது. இதை ஏற்காத அவர்கள், மக்களுக்கு எதிரான அடக்குமுறையை கையாண்டு ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார்கள்.

மம்தா என்ற பெண் களம் இறங்கியதும், மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் ஆட்சியை இழந்தனர். இந்த தேர்தலில், பாஜக களம் இறங்கியதும், மம்தா, பாஜக என்று மாறிவிட்டது. இடதுசாரிகள் தடம் தெரியாமல் அகற்றப்பட்டுள்ளனர்.

கேரளாவில் வழக்கம் போலவே காங்கிரஸ் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த மாநிலத்தில் இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியும் மாறி மாறி வெற்றி பெற்றால் கூட, இடது சாரிகள் 1984 ம் ஆண்டுக்கு பிறகு இந்த அளவிற்கு படுதோல்வியை சந்தித்துது கிடையாது. ஐயப்பன் கோயில் விவகாரம் உட்பட பல விஷயங்களில், இடதுசாரி தலைவர்களின் பிடிவாதம் தான் அந்த கட்சியின் தோல்விக்கு காரணமாகிவிட்டது.

ஆனால் இந்த முறை, நாடுமுழுவதும் இடது சாரிகள் துடைத்து எறியப்படாமல் காப்பாற்றியவர் திமுக தலைவர் ஸ்டாலின். பெயர் ராசியோ என்னவோ, இரு கம்யூனிஸ்ட்களுக்கும் தலா 2 இடங்களை வழங்கி, அவற்றில் வெற்றி பெறவும் வைத்துள்ளதார். குறிப்பாக, தொழில்வளம் மிக்க கோவையில் இடதுசாரிகள் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் திமுக தான். 

மதுரையில் கூட எழுத்தாளராக பார்க்கப்பட்ட வெங்கடேசன் வெற்றி என்பது நினைத்துபார்க்க முடியாத சூழ்நிலைதான். ஏற்கனவே தேசிய கட்சி அந்தஸ்தை இழந்த இடது சாரிகள், தமிழகத்தில் அதுவும் கூட்டணி கட்சியின் தயவால் 4 இடங்களில் வெற்றிபெற்றதை அவமானமாக கருதி சிந்திக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

ஆனாலும், இப்போதும் அதைப் பற்றி சிந்தித்காமல், தாங்கள் ஏதோ வானத்தில் ஏறி, வானவில்லை பறித்துவிட்டது போல், அந்தக் கட்சித் தலைவர்கள் பெருமை பேசி வருகின்றனர். அகில இந்திய அளவில் துடைத்தெறியப்பட்ட கட்சி, திமுக தயவால் நான்கு இடங்களிலும், தன் சொந்த கட்சியின் ஆட்சி நடக்கும் மாநிலமான கேரளாவில் வெறும் ஒரு இடத்திலும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 

நாட்டின் பிற பகுதிகளில் கம்யூனிஸ்ட்டுகளா? யார் அவர்கள், அப்படி ஒரு கட்சி இருந்ததா? என்ற வகையில் மக்கள் கேள்வி கேட்கும் நிலை தான் உள்ளது. 


1950களில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட்  என்று பிரிந்தவர்கள் இனியும் அவ்வாறு தொடர வேண்டுமா என்று யோசிக்க வேண்டும். மனம் திறந்த விவாதங்கள் மூலம் 2 கட்சிகளும் நெருங்கி வந்து மீண்டும் இணைய வேண்டியது காலத்தின் கட்டாயம். 


அதற்காக தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி, கேரளாவில் எதிர்ப்பு என்று சந்தர்ப்பவாத அரசியல் செய்யாமல், தங்களின் கொள்கையை சொல்லி தனித்து நிற்க வேண்டிய நிலைப்பாட்டை இடதுசாரிகள் எடுக்க வேண்டிய கட்டாயம்.


இடதுசாரி தலைவர்கள் தங்கள் தன்முனைப்பை விட்டு விட்டு ஒன்று சேர முயற்சிக்க வேண்டும். தா. பாண்டியன் கூட இதே கருத்தை தான் முன்வைத்துள்ளார். அது நடக்குமா என்பதை காலம் தான் முடிவு செய்யும். இனியும் சரியான கொள்கை அமைக்காமல், குதிரை சவாரி செய்து சீட் வாங்கி ஜெயிப்பதையே வாடிக்கையாக கொண்டிருந்தால், வெகு விரைவில், காங்கிரஸ் அல்லாத பாரதம் என்ற நிலை உருவாவதற்கு முன், காம்ரேட்டுகள் இல்லாத பாரதம் உருவாகும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close