காங்கிரஸ் தலைவர் ஆகிறார் சச்சின்? பெருகும் ஆதரவு!

  Newstm Desk   | Last Modified : 04 Aug, 2019 08:04 pm
who-is-the-next-presidnt-of-congress-party

அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவராக இருந்த ராகுல், தன் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பணியில், கட்சித் தலைமை தீவிரம் காட்டத் துவங்கியுள்ளது.

லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து, தோல்விக்கு பொறுப்பேற்று, அதன் தலைவர் ராகுல் கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார். ராகுல், தன் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, மன்மோகன் சிங், ப.சிதம்பரம் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் வலியுறுத்தினர். எனினும், ராகுல் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள மறுத்துவிட்டார்.

பார்லிமென்டில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சி, தேசிய தலைவர் இல்லாமல் தடுமாறி வருகிறது. இந்த நிலை அதிக நாட்கள் தொடர கூடாது என்பதால், அந்த கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பணியில், கட்சித் தலைமை ஈடுபட்டுள்ளது.

தேசிய அளவில் கட்சியை வழிநடத்த, இளம் தலைவர் ஒருவர் தேவை என, கட்சிக்குள் குரல் ஓங்கியுள்ளது. 'தேசிய அரசியல் அனுபவம், இளமை துடிப்பு, தீர்க்கமான முடிவு எடுக்கும் திறன் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் ஒருங்கிணைந்த இளம் தலைவர் ஒருவரே, கட்சியின் அகில இந்திய தலைவராக தேர்ந்தெடுக்கப்படவேண்டும்' என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், பஞ்சாப் முதல்வருமான அம்ரிந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார்.

மும்பை காங்கிரஸ் கமிட்டியின் தலைவரான, மலிந்த் தியோராவும்  இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். அந்த வகையில் 'காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களாகவும், மக்கள் மத்தியில் பிரசித்தம் பெற்றவர்களாகவும் திகழும், சச்சின் பைலட், ஜோதிராதித்ய சிந்தியா போன்றோர் கட்சி தலைவர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்றும் தியோரா கருத்து தெரிவித்துள்ளார்.

இதனால், காங்கிரஸ் தலைவர் பதவியை பிடிப்பதில், இவர்கள் இருவரிடையே கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. எனினும், சிந்தியாவை விட சச்சினுக்கு அதிக ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரில் யாரேனும் ஒருவர் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்த ஆலோசனைக்காக, வரும் 10 ஆம் தேதி, டெல்லியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close