மகாராஷ்டிரா அரசியல் : உயிர்ப்புடன் வைத்திருந்தது சஞ்சய் ராவுத்-ன் கவிதைகளே!!!

  அபிநயா   | Last Modified : 23 Nov, 2019 03:01 pm
an-analysis-of-maharashtra-politics-in-the-last-few-weeks-through-sanjay-raut-s-poetry

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வந்த நிலையில், சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க தயாராகி வந்த காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், அம்மாநில முதலமைச்சராக பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸை சேர்ந்த அஜித் பவாரும் ஆளுநர் மாளிகையில் வைத்து இன்று காலை பதவியேற்றுள்ளனர். 

கடந்த ஒரு மாத காலமாக, மகாராஷ்டிரா பற்றிய செய்திகள் தான் ஊடங்கங்களை ஆக்கிரமித்திருந்தன. தேர்தலின் முடிவுகளை தொடர்ந்து, சிவசேனா-பாஜகவின் கருத்து வேறுபாடுகள், சிவசேனா பாஜகவுடனான கூட்டணியில் இருந்து விலகுதல், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவை பெற்று ஆட்சி அமைக்க முயற்சித்தல் என பரபரப்பாக ஓடி கொண்டிருந்தது மகாராஷ்டிரா செய்திகள். அம்மாநிலம் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் பிரேக்கிங் செய்திகளாகவும், ஜஸ்ட் இன் செய்திகளாகவும், அதிகம் பேசப்பட்ட செய்திகளாகவும் இருந்தன மகாராஷ்டிரா அரசியல் விவகாரங்கள்.

எல்லா மாநிலத்திலும் தேர்தல்கள் நடைபெறுகின்றன, கூட்டணி கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் எழுகின்றன, அதன் முடிவாக கூட்டணிகள் கலைகிறது, மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கின்றன. இது இந்தியாவிற்கு ஒன்றும் புதிதான விஷயமில்லை. என்ன ஒன்று, மற்ற மாநிலங்களில் தேர்தலுக்கு முன்னரே கூட்டணி கலையும், ஆனால் இங்கோ சற்று வித்தியாசமாக வெற்றி பெற்றதற்கு பின்னர் சச்சரவுகள் தொடர்ந்து, கூட்டணி கலைந்தது. 

சரி அந்த ஒரே காரணம் கொண்டா மகாராஷ்டிரா பற்றி அதிகமாக பேசப்பட்டது என்றால், இல்லை. ஊடங்கங்களின் கவனத்தை ஈர்த்து, அம்மாநில அரசியலை பற்றி அனைவரையும் அதிகம் யோசிக்க வைத்தவர் சிவசேனா கட்சி தலைவர் சஞ்சய் ராவுத். இவரின் பத்திரிகை சந்திப்புகளும், ட்விட்டர் பதிவுகளும், பாஜகவுக்கு எதிரான கருத்துக்களும் தான் அம்மாநில அரசியலை அனைவரும் திரும்பி பார்க்கும் வகையில் உயிர்ப்புடன் வைத்திருந்ததற்கு முக்கிய காரணம். இதை நிச்சயமாக யாராலும் மறுக்க இயலாது. 

கடந்த ஓர் மாதமாக நாலுக்கு இரண்டு கருத்துக்களையாவது முன்வைத்து விடுவார் சஞ்சய் ராவுத். இவரின் கவிதைகள் போன்ற கருத்துக்கள் ஊடகங்களுக்கு நன்றாக தீனி போட்டன. சிவசேனா பாஜகவின் கூட்டணி முறிவை தொடர்ந்து, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவை பெறுவதற்கான சிவசேனாவின் நேற்றைய முயற்சி வரை அனைத்திலும் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.

பாஜகவை வெகுவாக கண்டிக்கும் இவரது  ட்விட்டர் பதிவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கவிதையாகவே இருந்தன. சிவசேனா ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இவர் மேற்கொண்ட அனைத்து உழைப்புகளும் இன்று காலை ஃபட்னாவிஸின் பதிவியேற்பை தொடர்ந்து வீணாகிவிட்டன.

இந்த செய்தி நிச்சயமாக இவருக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கும். இதனால் அவரது கனவுகள், நம்பிக்கைகள் என அனைத்தும் சிதறிவிட்டது. தேர்தல் முடிவுகள் வெளியாகிய பின்னர் முதல் வேலையாக இவர் ட்விட்டரில் ஓர் படத்தை பதிவு செய்திருந்தார். அதில் ஒரு புலியின் கழுத்தில் கடிகாரமும், கையில் தாமரை மலரும் இருந்தது. இதன் மூலம் அவர் அப்போதே சிவசேனாவின் எண்ணத்தை பதிவு செய்துள்ளார். இவரது சொந்த கருத்துக்கள் மட்டுமல்லாது பிறரின் கருத்துக்களை கடன் வாங்கியும் பாஜகவிற்கு எதிராக அதை பதிவி செய்துள்ளார். 

பாஜகவுக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்வதில் இவர் அடையும் ஆனந்தத்திற்கு ஓர் அளவே இருக்காது போலும். மகாராஷ்டிரா பாஜக தலைவர்கள் மட்டுமல்லாது அமித் ஷாவின் ஈகோவையும் வெகுவாக சீண்டியுள்ளார் சஞ்சய் ராவுத். தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸின் ஆதரவை பெறும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது சிவசேனா. இரு கட்சிகளும் சிவசேனாவிற்கு ஆதரவளிக்கும் என்பது உறுதியாகியிருந்த நேரத்தில், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது காதலி போன்று எனவும் அதற்காக ஏங்கும் ஒரு தலை காதலர் அமித் ஷா என்றும் மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார் இவர்.

குடியரசுத் தலைவரது ஆட்சி அம்மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், அதையும் பாஜகவின் சதி என்று குறிப்பிட்டிருந்த அவர், உடல் நிலை சரியில்லாத நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும், தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார்.

இப்படிபட்ட கருத்துக்களை தொடர்ந்து முன்வைத்து வந்த சஞ்சய்க்கு மிகபெரும் இடியாக வந்து விழுந்துள்ளது தற்போதைய பாஜகவின் ஆட்சி அமைப்பு. எனினும், அவர் தொடர்ந்து தனது கருத்துக்களை முன் வைத்து கொண்டு தான் இருக்கிறார். என்ன, முன்பிருந்தது போல இல்லாமல் அவரது கருத்துக்கள் உயிரற்ற நிலையில் இருக்கின்றன. ஒரு மாதமாக அம்மாநில அரசியலை உயிர்ப்புடன் வைத்திருந்தவர் தற்போது பலத்த ஏமாற்றமடைந்துள்ளதால், துடிப்பில்லாமல் சப்பென்று வந்து விழுகின்றன இவரது வார்த்தைகள்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close