மகாராஷ்டிரா : பதவியை மட்டுமில்லை மரியாதை, சித்தாந்தம் என அனைத்தையும் இழந்து நிற்கும் சிவசேனா!!!

  அபிநயா   | Last Modified : 23 Nov, 2019 07:57 pm
shiv-sena-didn-t-get-the-chair-but-lost-power-prestige-ideology-honor-and-everything-else

மகாராஷ்டிரா மாநிலத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்திருப்பதை தொடர்ந்து, இன்று பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அஜித் பவார் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர். 

இதை தொடர்ந்து, பாஜகவின் இந்த செயல், அம்மாநில அரசியல் மட்டுமல்லாது இந்திய அரசியல் உலகையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறது முக்கட்சி கூட்டணி. எப்படியும் ஆட்சி அமைத்து விடலாம் என்று நேற்று வரை போராடி வந்த சிவசேனாவை, பாஜகவின் இந்த செயல் ஆடி போக வைத்துள்ளது.

பாஜகவினால் இந்த மூன்று கட்சிகளும் ஏமாற்றமடைந்துள்ள போதும், இதில் யாருக்கு பெரும் அடி என்றால், சிவசேனாவிற்கு தான். மற்ற இருகட்சிகளுக்கும் இது ஏமாற்றம் தான் என்றாலும், அவ்விரு கட்சிகளும் தேர்தலில் வெற்றி பெறவில்லை. அவர்கள் ஆட்சி புரிய வேண்டும் என்று அம்மாநில மக்கள் நினைக்கவில்லை. ஆனால் சிவசேனா அப்படியில்லை. பாஜகவுடன் இணைந்து சேனாவையும் தேர்வு செய்திருந்தனர் அம்மாநில மக்கள். சிவசேனாவோ அவர்களது நம்பிக்கையை மொத்தமாக உடைத்து விட்டது.

தேர்தலுக்கு முன்னர் கட்சிகளுக்குள் வேறுபாடு வந்து பிரிவது எல்லா மாநிலங்களிலும் நிகழும் ஒன்று தான் என்றாலும், மகாராஷ்டிராவில், தேர்தலில் வெற்றி பெற்றதிற்கு பிறகு பாஜக-சிவசேனா இடையே பிளவு ஏற்பட்டது. இது சற்று புதுவிதமான பிரிவு தான். சிவசேனாவினால் பாஜக ஏமாற்றப்பட்டிருந்த நிலையில், தற்போது முழுமையான ஏமாற்றத்தை சந்தித்திருக்கிறது சிவசேனா.

அக்கட்சியின் ஆலோசகர் சஞ்சய் ராவுத்தின் ஆலோசனையை ஏற்று அனைத்தையும் இழந்து நிற்கிறார் உத்தவ் தாக்கரே. சரி, ஆட்சி அமைப்பது தாமதமாகியது, ஆட்சி அமைக்க முடியாத நிலை வந்தது, இது எல்லா மாநிலங்களிலும் அனைத்து கட்சிகளும் சந்திக்கும் விஷயம் தானே. ஏன் பாஜக சந்திக்கவில்லையா இத்தகைய தோல்விகளை, இந்த முறை ஆட்சி அமைக்க முடியவில்லை அவ்வளவு தானே, வேறு என்ன நிகழ்ந்துவிட்டது. எதை இழந்திருக்கிறது சிவசேனா என்றால், எதை இழக்கவில்லை என்றே கேள்வியே இதற்கான பதில். 

சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தாற் போல, சிவனேனென்று பாஜகவுடன் இருந்த உத்தவிற்கு பதவி ஆசையை காண்பித்து விட்டார் சஞ்சய் ராவுத். அதன் விளைவு தன் மகனிற்கு முதலமைச்சர் பதவி வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க தொடங்கினார் உத்தவ். இதை தொடர்ந்து ஏற்பட்டதே பாஜகவுடனான பிளவு. அதன் பின்னர் தேசியவாத காங்கிரஸிடம் ஆதரவு கேட்டு நிற்க வேண்டிய நிலை வந்தது உத்தவிற்கு. மகாராஷ்டிராவில் தனக்கென்ற ஓர் பெயரையும் மரியாதையும் வைத்து கொண்டு பதவிக்காக ஒவ்வொரு கட்சியிடம் ஆதரவு கேட்டு நிற்க வேண்டிய சூழல் உருவானது. இதற்கு சிவசேனாவின் பதவி ஆசை தான் காரணம் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆம், உண்மைதான் அதனால் தான் இப்போது ஒன்றும் இல்லாமல் நிற்கிறது சிவசேனா.

சரி விட்டதிலிருந்து தொடருவோம். என்.சி.பி யின் ஆதரவுடன் காங்கிரஸை அணுக, பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு சிவசேனாவிற்கு ஆதரவு அளிப்பது என்று முடிவானது. இந்த கூட்டணி இவரது கட்சி உறுப்பினர்கள் பலருக்கே பிடிக்காமல் தான் நிகழ்ந்தது. ஆனால், எப்படியோ ஒரு வழியாக இருகட்சிகளின் ஆதரவையும் பெற்று விட்டார் உத்தவ் தாக்கரே.

எனினும், இந்த ஆதரவை பெறுவதற்காக அவர் இழந்தது தான் அதிகம். சிவசேனாவின் பால் தாக்கரே காங்கிரஸின் கொள்கைகளை அடியோடு வெறுத்தார். அப்பேற்பட்ட கட்சியுடன் தான் கைகோர்க்க முன் வந்ததார் அவரது மகனான உத்தவ் தாக்கரே. பாஜகவுடன் இணைந்திருந்த போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை முழுவதுமாக எதிர்த்த என்.சி.பி மற்றும் காங்கிரஸின் செயல்களுக்கு ஆதரவு தெரிவித்ததோடு மட்டுமில்லாமல், தனது சித்தாந்தங்களுக்கும் எதிராக செயல்பட தொடங்கினார் உத்தவ் தாக்கரே. 

இவை அனைத்துமே பாஜகவை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும், நான் பெரியவனா அவன் பெரியவனா என்ற ஈகோவினாலும் மேற்கொள்ளப்பட்டவை தான். எதிரியாக இருந்தாலும், அவர்களை வீழ்த்துவதற்காக தங்களது கொள்கைகளை மாற்றி கொள்ள யாருமே முன்வரமாட்டார்கள். தான் நிற்கும் நிலையில் இருந்தே எதிரியை தோற்க்கடிக்க முயற்சிப்பார்கள். ஆனால் சேனாவோ, தன் கூட்டணியாக இருந்த பாஜகவை வீழ்த்து தன்னுடையே பலத்தையே இழந்து நிற்கிறது.

கொள்கைகள், சித்தாந்தங்கள் மட்டுமல்ல சிவசேனா இழந்தது. அரசியல் கட்சிகளுக்கு மிக முக்கியமாக கருதப்படுவது மக்கள் அவர்கள் மீது வைக்கும் நம்பிக்கைய அது சிவசேனாவிற்கு இருந்ததனால் தான் தேர்தலில் மக்கள் மனதில் நின்று வெற்றி பெற முடிந்தது. பாஜகவுடன் நிலைத்திருந்தால் நம்பிக்கையும் மரியாதையேனும் மிஞ்சியிருக்கும். ஆனால் இப்போது அதையும் இழந்து நிற்கிறார் உத்தவ் தாக்கரே. இப்போதேனும் தன் தவறுகளை உணர்வாரா அவர். தனக்காக இல்லாவிட்டாலும், கட்சிக்காகவாவது அவர் நிலை உணர்ந்து செயல்பட வேண்டும்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close