மேகதாது அணை: மத்திய அரசுக்கு எதிராக மட்டும் போராட்டம் ஏன்? கள்ள மௌனத்தில் ஸ்டாலின்?

  Newstm Desk   | Last Modified : 30 Nov, 2018 01:07 pm

mekedatu-dam-why-dmk-is-acting-against-only-central-govt

தமிழகத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படும் ஒரு விவகாரம் மேகதாது அணையாகும்... காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக மாநில அரசு தீவிரம் காட்டி வருவதாக செய்தி வெளியானது...

உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மீறி மேகதாதுவில் அணை கட்ட சாத்தியக்கூறுகள் உள்ளிட்ட பல தகவல்களுடன் கூடிய வரைவு அறிக்கையை தயார் செய்து அதனை கர்நாடக அரசு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது. இந்த அறிக்கைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தற்போது அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியானது.

காவிரியில் மேகதாது திட்டத்தை அமல்படுத்துவதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளதாக அம்மாநில நீர்வளத் துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் சண்டையிட வேண்டாம் என்றும் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து டி.கே.சிவகுமாரின் இந்த பேச்சினால் தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் கொந்தளித்துள்ளன. இதுதொடர்பாக தி.மு.க சார்பில் அனைத்துக்கட்சிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, மேகதாது அணை கட்ட அனுமதி அளித்துள்ள மத்திய அரசுக்கு எதிராக தி.மு.க தனது தோழமை கட்சிகளுடன் டிசம்பர் 4ம் தேதி போராட்டம் நடத்த இருப்பதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த சூழ்நிலையில், கர்நாடக  மாநிலஅரசின் இந்த முடிவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மனு தாக்கல் செய்துள்ளது. 

தமிழகத்தின் அனுமதியின்றி காவிரியில் புதிய அணை எதுவும் கட்ட முடியாது என காவிரி ஆற்றில் நீர் பகிர்மானம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழங்கியுள்ள தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் மேகதாது அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகுவது தான் முறையானது என தமிழக அரசு முடிவு எடுத்தது. அதன்படி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் \செய்யப்பட்டுள்ளது. 

தமிழக அரசு ஒருபுறம் முறையாக நடவடிக்கை எடுக்க, மறுபுறம் போராட்டத்தை அறிவித்திருக்கிறார் ஸ்டாலின். சரி போராட்டம் நடத்தட்டும். போராட்டம் என்றால், அணை கட்டும் முடிவை எடுத்த கர்நாடக அரசிற்கு எதிராகவும் தானே போராட்டம் நடத்த வேண்டும். ஏன் நடத்தவில்லை? 

இவ்வளவுக்கும் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி அங்கம் வகித்து வருகிறது. மேலும் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் கூடிய கூட்டணி கட்சிகள் இணைந்து ஆட்சி செய்து வருகின்றன. எனவே கர்நாடக காங்கிரஸ் ஆதரவுடன் கூடிய கூட்டணி அரசையும் எதிர்த்துதானே, தமிழகத்தில் ஸ்டாலின்  மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையில் கூடியுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்த வேண்டும். ஏன் மத்திய அரசை மட்டும் எதிர்த்து போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் சந்தர்ப்பவாதம் குறித்தும், கர்நாடக மாநில அரசைப் பற்றி எதுவும் பேசாமல் கள்ள மௌனம் கடைபிடித்து வருகிறார்கள்...?

அப்படிஎன்றால் இதையெல்லாம் தமிழக மக்கள் யோசிக்க முடியாத அளவுக்கு முட்டாள்களாக இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் தானே இவர்கள் துணிந்து காங்கிரஸ் குறித்து எதுவும் பேசாமல் போராட்டம் அறிவித்துள்ளனர்.

காவிரியில் புதிதாக அணை கட்டினால், காங்கிரஸ் உடனான கூட்டணியை விலக்கிக்கொள்வோம் என ராகுலுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருக்கலாமே? அப்படி செய்திருந்தால் இவர் உண்மையிலே  தமிழர்களின் நலனுக்காக மட்டுமே போராடுகிறார்கள் என்று கூறலாம்.

காவிரியில் புதிதாக அணை கட்டுபவர்களிடம் இவர்கள் தங்கள் பதவிக்காக கூட்டணியாக சேர்ந்து கொண்டு மத்திய அரசை குறை கூறுவது எந்த விதத்தில் நியாயம்...

முதலில் அணை கட்டுகிற காங்கிரஸ் கட்சி அங்கம் வகித்து வரும் கர்நாடக மாநில அரசை எதிர்த்து தி.மு.க போராட்டம் நடத்துவார்களா. மேலும் , காங்கிரஸ் கட்சியை கூட்டணியிலிருந்து வெளியேற்றிய பிறகு மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டம் நடத்த ஸ்டாலினுக்கு துணிவுள்ளதா?

மேகதாது விவகாரத்தில் அணை கட்ட உள்ளதாக கூறியுள்ள கர்நாடக மாநில காங்கிரஸ் கூட்டணி அரசை ஸ்டாலின் தலைமையில் கூடிய ஏனைய உதிரிக் கட்சிகள் கண்டிக்கவே இல்லை. அவ்வாறு செய்யத் தயங்குவதன் மூலம் இவர்களது போராட்டம் அரசியல் லாபத்திற்காக மட்டுமே என்பது தெளிவாகிறது. இதன்மூலம் தி.மு.க இரட்டை வேடம் போடுகிறது என்பதும் உறுதியாகிறது. திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகிய போட்டு வரும் கபட வேடத்தை மக்கள் நிச்சயம் புரிந்துகொள்வார்கள். 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.