ஐயப்பனின் பிரம்மச்சரிய விரதத்தில் தலையிடலாமா?

  கிரிதரன்   | Last Modified : 30 Nov, 2018 05:14 pm

can-anyone-interfere-in-penance-of-celibacy-of-lord-iyyappa-spl-story

தனித்தன்மை வாய்ந்த பல்வேறு வழிபாட்டு முறைகளின் சங்கமமாக இந்து மதம் விளங்குகின்றது. தங்களின் விருப்பத்திற்கேற்ற வழிபாட்டு முறைகளை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை பக்தர்களுக்கு அளித்து, அதன் மூலமே அவர்களுக்கு இறைத்தன்மையை உணர செய்வதும் இந்து மதத்தின் பாராட்டத்தக்க அம்சமாகும்.

இந்து மத வழிபாட்டு முறைகளில் கோயில்களின் பங்கு மகத்தானது.  பரசுராமர், ஆதிசங்கரர் போன்ற மகான்கள் வகுத்து தந்துள்ள ஆகம விதிமுறைகளின்படி கட்டப்பட்டுள்ள இக்கோயில்களில், அவர்கள் வகுத்து தந்துள்ள பராம்பரிய தாந்திரீக முறைப்படியே வழிபாடும், பல்வேறு சடங்குகளும் தொன்றுதொட்டு நடத்தப்பட்டு வருகின்றன.

இந்திய துணைக்கண்டத்தில் எந்தவொரு கோயிலும் ஆகமவிதிகளுக்கு புறம்பாகவோ, அவற்றில் நடத்தப்படும் வழிபாடுகள் நம் மகான்கள் வகுத்துள்ள தாந்திரீக முறைக்கு அப்பாற்பட்டோ இருக்காது என நிச்சயமாக சொல்லலாம்.

இந்து சமய வழிபாட்டு முறைகள் திபெத்தியம் ,கேரளம், காஷ்மீரியம், வங்க தேசம் என நான்கு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. பல்வேறு வேறுபாடுகளும், ஒற்றுமைகளும் கொண்ட பெருமை இப்பிரிவுகளுக்கு உண்டு. குறிப்பாக, வழிபாட்டு தலங்களின் அமைவிடம், பூகோள அமைப்பு போன்ற காரணங்களால் கேரள தாந்திரீக வழிப்பாட்டு முறை பிற பகுதிகளின் வழிபாட்டு முறையிலிருந்து பெரிய அளவில் வேறுபட்டதாக விளங்குகிறது.

இந்து சமய ஆகம விதிகளை காக்கும் வகையில்,சபரிமலை உள்ளிட்ட கேரளத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் பராம்பரிய வழிபாட்டு முறைகள்  கடுமையாக பின்பற்றப்படுகின்றன.இங்குள்ள கோயில் வளாகங்களில் பக்தர்கள் தூய்மையை கடைபிடிப்பது கட்டாயமாகும்.பக்தர்களின் உடம்பிலிருந்து வியர்வையை தவிர, உமிழ்நீர் போன்றவை வடிந்தாலும் அது அசுத்தமாகவே கருதப்பட்டு அவர்கள் தந்திரீகளால் தூய்மை முறைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே, கோயிலுக்குள் மீண்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.

திருவாங்கூர் -கொச்சி சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டபோது, மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி, சபரிமலை ஐயப்பன் குழந்தை வடிவமாகவே கருதப்படுகிறார். அத்துடன் சபரிமலை உள்ளிட்ட கேரள மாநிலத்தின் அனைத்து கோயில்களின் சொத்துகளை நிர்வகிக்க, தேவசம் போர்டு என்ற தன்னாட்சி அமைப்பு உருவாக்கப்பட்டதையும் அந்த உடன்படிக்கை உறுதி செய்கிறது.

பந்தள மகாராஜாவின் ஆட்சிக்குட்பட்ட எல்லையையும், அந்த எல்லையில் வாழும் மக்களையும் காக்கும் சபரிமலை ஐயப்பன் பிரம்மச்சாரி கடவுளாகவே தொன்றுதொட்டு கருதப்பட்டு வருகிறார். கி.பி. 8 -ஆம் நூற்றாண்டு முதல், இங்கு பிரம்மச்சரிய வழிபாட்டு முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனால்தான் எக்காரணம் கொண்டும் இளம் பெண்கள் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவதில்லை.

ஆங்கிலேய கட்டடவியல் வல்லுநர்களான வார்டு மற்றும் கோனர், திருவாங்கூர் சமஸ்தானம் குறித்து 1890-இல் வெளியிட்ட கையேட்டிலும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் பிரம்மச்சரிய வழிபாட்டு முறை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது இக்கோயிலின் பாரம்பரிய தாந்திரீக வழிபாட்டு முறைக்கு சிறந்த சான்றாக இன்றளவும் உள்ளது.

பிற்காலத்தில் கொச்சின், மலபார் என மாநிலத்தின் பிற பகுதிகளிலும் சபரிமலை ஐயப்பன் பிரபலமடைந்து, தற்போது இக்கோயில் சர்வதேச அளவிலான வழிபாட்டு தலமாக திகழும்போது, ஆகம விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ள வழிபாட்டு முறைப்படிதான் பிரம்மச்சாரியான ஐயப்பனுக்கு அன்றாடம் பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதேசமயம், சபரிமலை சாஸ்தா, ஆண் மகனாய் தனது  இரு மனைவிகளுடன் காட்சியளிக்கும் தலமான ஆரியங்காவு, மனைவி மற்றும் மகனுடன் சாஸ்தா வீற்றிருக்கும் அச்சன்கோயில் உள்ளிட்ட தலங்களில் இளம்பெண்கள் வழிபட எந்த தடையும்,ஆட்சேபனைகளும் இல்லை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

அத்துடன், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள அட்டுக்கல் கோயில், ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள மன்னார்சாலா நாக கோயில் போன்ற இடங்களில் ஆண்கள் வழிபட அனுமதியில்லை. மாறாக இங்கு அனைத்து வயது பெண்களுக்கு மட்டும் அனுமதியுண்டு என்பதையும், பெண்  குருக்களே இங்கு அன்றாட பூஜைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இளம் பெண்கள் அனுமதிக்கபடாததற்கு, பாலின பாகுபாடு காரணமல்ல, அங்கு ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்பட்டு வரும் பிரம்மச்சரிய வழிபாட்டு முறைதான் என்பது புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் நல்லது.

 

 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.