வரி விலக்கு சேமிப்பு என்ற பெயரில் ஏமாற்றும் யூலிப் திட்டங்கள் !

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 05 Dec, 2018 04:58 pm
u-lip-scheme-is-tax-free-savings

மிகப் பெரிய உயிரினமாகிய டைனோசர்கள் கூட தன்னை மாற்றிக் கொள்ளாததால் ஒட்டு மொத்த இனமுமே அழிந்து போனது.   

சூழலுக்கேற்ப மாற்றிக் கொள்ளாத எதுவும் சிறப்பாக அமையாது. அது முதலீடாக இருப்பினும், சேமிப்பை ஊக்கப்படுத்துவதற்காகத் தான் அரசாங்கமே வரிச்சலுகை கொடுக்கிறது. வரிச் சலுகை இல்லை என்றால், நம்மில் பலரும் இது போன்ற சேமிப்புகளில் ஈடுபட்டிருக்க மாட்டோம்.

 சரி விசயத்திற்கு வருவோம். வரிச் சலுகை கொடுக்கும் சேமிப்புகள் எவையெவை? எல்லாமே Paper Investment தான். இன்றைய காலத்திற்கேற்ப சொல்லணும்னா digital investment.  இப்படி வரிச் சலுகை கிடைக்கும் முதலீடு எல்லாவற்றையும் அரசாங்கம் கூடுதல் கவனத்துடன் கண்காணித்து வருகிறது என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

அரசாங்கம் கொடுத்த வரிச்சலுகைகள் ஆரம்பத்தில் NSC ( National Savings Certificate ) , Time deposit போன்றவை நாட்டின் வளர்ச்சிக்காக மக்களிடமிருந்து பணம் திரட்டுவதற்காகவும், சமூகத்தின் அடிப்படைத் தூணான ஒவ்வொரு குடும்பத்தின் பொருளாதாரப் பாதுகாப்பிற்காக நபர் தனி காப்பீடுகளை (Insurance) ஊக்குவிப்பதற்காகவும் இருந்தது. தற்பொழுதும் அடிப்படை நோக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், முதலீட்டு முறையில் காலத்திற்கேற்ப மாற்றம் நிகழ்ந்துள்ளது. 

மரபுசார் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (Traditional Insurance Policy) : 
அசம்பாவிதம் நிகழ்ந்தால் மட்டும் இழப்பீடு கிடைக்கும் என்ற Pure Term policy யை பொதுமக்கள் பெரிதும் விரும்பாததன் காரணத்தால், நிகழாவிட்டாலும் உங்களுக்குப் பணம் கிடைக்கும் என்று கொஞ்சம் சேமிப்பு என்ற தேன் தடவி விற்கப்பட்டது தான் எண்டோமெண்ட் பாலிசி வகையறா. 

காலம் போன கடைசியில் வரும் பெரும்பணத்தை நான் அனுபவிக்க முடியாதே என்ற ஆதங்கத்திற்குத் தீனி போடுவதற்காக அமைந்தது Money Back policy.  இன்னும் கொஞ்சம் மானே தேனே பொன்மானே எல்லாம் சேர்க்கும் வித்தை தான் ரைடர்ஸ்( RIDERS) எனும் மேல்த்தூவல்கள். 

இன்றைய நிலையில் பெரும்பான்மையான முதலீட்டாளர்கள் இன்ஸுரன்ஸையும், சேமிப்பையும் குழப்பிக் கொள்ளாமல் முதலீடு செய்யத் தொடங்கியிருக்கின்றனர். ஆம்! என் மரணத்தாலோ, நான் நோய் வாய்ப்பட்டோ,  என்னால் ஈட்டப்படும் வருமானம் பாதிக்கப்பட்டால், என் குடும்பம் பொருளாதாரச் சிக்கலின்றி வழக்கம் போல செயல்பட, ப்யூர் டேர்ம் பாலிசி, ஹெல்த் இன்ஸூரன்ஸ், ரைடர்ஸ் போன்றவற்றிற்கு மட்டும் சரியான ப்ரீமியம் கட்டி விட்டு மற்றவற்றைப் பிரித்து முதலீடு செய்வதே சரி என்று உணர்ந்துவிட்டனர்.

வரி விலக்கு கிடைக்கும் முதலீடு பற்றிய கட்டுரையில் இன்ஸூரன்ஸ் பற்றி இவ்வளவு பெரிய விளக்கம் ஏனென்று யோசிக்கலாம். கட்டுரையின் நோக்கமே, இன்ஸூரன்ஸ் எது? முதலீடு எது என்று பிரித்து உணர்த்துவதற்கு தான். 

யூலிப் (ULIP – Unit Linked Insurance Policy)  கொண்டு வந்த நல்ல நோக்கத்தையே, சேல்ஸ் டெக்னிக் கண்டு பிடிக்கிறேன்னு சொல்லி நாசம் பண்ணிவிட்டார்கள். யூலிப் எல்லா தரப்பு மக்களுக்குமானது அல்ல. மேலும் அது முதலீட்டுக்கான ப்ராடெக்டும் இல்லை. மாதா மாதம் ப்ரீமியம் செலுத்த முடியாதவர்கள் மொத்தமாக ஒரு தொகையைக் கட்டி விட்டால், அந்தத் தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்து, இன்ஸுரன்ஸ் நிறுவனமே ப்ரீமியம் கட்டிக் கொள்ளும் ஓர் ஏற்பாடு. அது தெரியாமல் படித்தவர்களே கூட அதை முதலீட்டுச் சாதனமாக நினைத்து ஏமாந்தது தான் கொடுமை!

மேற்கண்ட வலையில் விழ மிக முக்கியமான காரணங்களில் ஒன்று தான் வரி விலக்கு கிடைக்கிறது என்ற தூண்டில் புழு. எனவே, வரி விலக்கு பெற வேண்டி முதலீடு செய்ய விழைவோருக்கு இரண்டே இரண்டு பாதையைத் தேர்ந்தெடுங்கள்.


1,  ஃபிக்ஸட் ரிடர்ன் வேணும்னு நினைப்பவர்கள், போஸ்ட் ஆஃபிஸிலுள்ள நேஷனல் சேவிங் சர்டிஃபிகேட் (National Saving certificate) சுகன்யா சம்ரிதி திட்டம் (Sukanya Samridhi Scheme) போன்றவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். அல்லது 

2, ஈக்விடி லிங்க்ட் சேவிங்க் ஸ்கீம் (ELSS) பற்றிய புரிதல் உள்ளவர்கள். உங்கள் ம்யூச்சுவல் ஃபண்ட் அட்வைஸரைக் கூப்பிட்டு உங்களுக்கு ஏற்ற ஒரு ஃபண்டைத் தேர்ந்தெடுங்கள். 

தேவையில்லாமல் இன்ஸூரன்ஸையும் சேமிப்பையும் குழப்பி பணத்தை இழந்து வாடாதீர்கள்!

---
குறிப்பு : வரி மற்றும் வரிவிலக்கு முதலீடு சம்பந்தமாக சந்தேகம் இருப்பின் கமெண்ட் பகுதியில் கேட்கவும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close