ரிசர்வ் வங்கி கவர்னர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா?

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 13 Dec, 2018 02:29 pm
reserve-bank-governot-special-story

சட்டம் எல்லாருக்கும் சமம் எனும் போது ஆளும் நிர்வாகிகளுக்கு மட்டும் விதி விலக்கா? சாதாரணமாக, அரசு அலுவலர் ஒருவரை பணியிடமாற்றம் செய்தால், அதில் விருப்பம் இல்லாவிட்டால் அரசு ஊழியர் தனக்கான நியாயம் கேட்டு நீதிமன்றத்தை நாடலாம். ஆனால், அப்படியான ட்ரான்ஸ்ஃபருக்குக் காரணம், “அரசின் நிர்வாகக் காரணங்களுக்காக” என்று “மட்டும்” குறிப்பிட்டு விட்டு வேறு எந்தக் காரணமும் சொல்லாமல் விட்டிருந்தால் கூட வேறு வழியே இல்லாமல் ஒப்புக் கொண்டாக வேண்டும். இது நம் சட்டஷரத்துகளில் ஒன்று எனும் போது, உர்ஜித் பட்டேலை ராஜினாமா செய்யச் சொன்னதில் என்ன தவறு? 

"...ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே!
மாரி பொய்ப்பினும்,வாரி குன்றினும்,
இயற்கை அல்ல செயற்கையில் தோன்றினும்,
காவலர்ப் பழிக்கும் இக் கண்ணகன் ஞாலம்;
அது நற்கு அறிந்தனை யாயின், ….”
     - புலவர் வெள்ளைக்குடி நாகனார் (புறநானூறு).

ஒரு ஆட்சியில் நல்லதோ கெட்டதோ எது நடந்தாலும் அது ஆளும் மன்னனையேச் சாரும். மக்களுக்கு பதில் சொல்ல வேண்டியது அரசத் தலைமை தான். இது நம் நாட்டிற்கு மட்டுமல்ல எல்லா நாட்டிற்கும் பொருந்தும். பிரதமர், முதல்வர்கள் போன்றோர் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமையில் இருக்கிறார்கள். அரசு அதிகாரிகளுக்கு அத்தகைய கடப்பாடு கிடையாது. தலைமை சொல்வதைச் செயல்படுத்த வேண்டியது தான் வேலை. தன் “நிலை” என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். வகிக்கும் பதவி என்பது அரசிற்கு உறுதுணையாக இருப்பதற்கு தான். அதீத உரிமையை எடுத்துக் கொண்டு செயல்பட்டால் அது அரச இயந்திரத்திற்கு இடைஞ்சலாக இருக்கும் பட்சத்தில் அரசால் எப்பொழுது வேண்டுமானாலும் வெளியேற்றப்படலாம். அந்த உரிமை முழுமையாக அரசக்கு உண்டு.

இன்றைக்கு உர்ஜித் பட்டேலை பதவி விலக வைத்ததற்கு காங்கிரஸ் கூட அதிகமாகக் குற்றம் சாட்டுவது ஆச்சரியமாக இருக்கிறது. காங்கிரஸ் காலத்தில் எத்தனை முறை ஆர்.பி.ஐ கவர்னரை பலவந்தமாக ராஜினாமா செய்யப்பட வைத்தனர் ?

மற்ற ஆட்சியாளர்களுக்குக் கூட தெரியாது என்று சமாளித்தாலும் நம்ம முன்னாள் பிரதமரும், முன்னாள் ஆர்.பி.ஐ கவர்னருமான மன்மோகன் சிங் சாருக்கும் கூடவா தெரியாது? ராஜீவ்காந்தி மன்மோகன் சிங் அவர்களை ஏன் பதவிக் காலம் முடியும் முன்னே ராஜினமா செய்யச் செய்தார்? 

சுதந்திர இந்தியாவில் 22 கவர்னர்களில் 9 பேர்கள் தங்கள் பணிக்காலத்தை முடிக்கும் முன் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார்கள். அதில் ஒருவர் உர்ஜித் பட்டேல். மிச்ச எட்டு பேரும் சீன அரசால் ராஜினமா செய்ய வைக்கப்பட்டவர்களா? அத்தனையும் காங்கிரஸ் தானே? அதுவும் அதில் ஆறு மாதம் கூட பணியில் அமரவிடாமல் விரட்டப்பட்டவர்கள் ஐந்து ஆளுநர்கள். எந்த வித எதிர்ப்பும் இல்லாத காலத்திலேயே காங்கிரஸ் அத்தனை மாற்றம் செய்யும் போது, அரசு அதிகாரிகளைத் தூண்டி விட்டு மத்திய அரசுக்கு இத்தனை எதிர்ப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது தன் நிர்வாகத்தை சரி வரச் செய்ய ஒரு ஆளுநரை மாற்றியதில் என்ன தவறு? 

அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும் என்பதை மறந்து விட வேண்டாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close