ஆசை இருக்கு தாசில் பண்ண அதிஷ்டம் இருக்கு ...!

  பாரதி பித்தன்   | Last Modified : 15 Dec, 2018 12:30 am
madhya-pradesh-election-results-special-story

"ஆசை இருக்கு தாசில் பண்ண அதிஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க "என்று கிராமப்புறங்களில் பழமொழி சொல்வார்கள். இது மத்தியப் பிரதேச பாஜகவிற்கு நன்கு பொருந்தும். 15 ஆண்டுகள் பாஜக ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பு, , முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மீது ஏற்ற கரை, விமர்சனங்கள் ,என்று பாஜவின் தோல்வியை தழுவ அடுக்கடுக்கான காரணங்களுடன் தான் பாஜ தேர்தலை சந்தித்தது.  இந்த நிலைப்பாடுகளுடன் காங்கிரஸ் கட்சி களம் இறங்கியதால் மிக அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்க வேண்டும். அந்த கட்சி கடந்த சட்டசபைத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் அதிக இடங்களை பிடித்திருக்கிறது. அதில் 8 தொகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் குறைவான ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் வென்றுள்ளது. 9 தொகுதிகளில் வெற்றிக்கான ஓட்டு வித்தியாசம் ஆயிரத்தை விட குறைவு 6 தொகுதிகள் காங்கிரஸ் வசம். இது விதியென்பதா, சதி என்பதா என்ற சோகப்பாடல் தான் பதிலாக இருக்கும். வேறு எந்த கொள்கையும் வற்புறுத்தி திணிப்பதாகத்தான் அமையும்.

மாநிலத்தின் நகர்புறங்கள் இன்னும் கூட பாஜவின் கோட்டையாக இருக்கிறது.  பாஜக வின் தோல்விக்காண காரணங்களாக சொல்லப்படும் பண மதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி  போன்ற அனைத்து காரணங்களையும் மீறி நகர்புறங்களில் இந்த வெற்றி கிட்டி இருக்கிறது.

அதே வேளையில் காங்கிரஸ் கட்சி கிராமங்களை குறிவைத்து களம் இறங்கி சுமார் 100 இடங்களை கைப்பற்றி உள்ளது.  மொத்தம் வெற்றி பெற்ற இடங்கள் 119 என்ற சூழ்நிலையில் பாஜ எங்கே கோட்டை விட்டது என்பதை எளிதில் அறிந்து கொள்ள முடியும்.

இந்த தேர்தலில் பாஜவை விவசாயிகள் இந்த மாநிலத்தில் புறக்கணித்து விட்டார்கள். அதற்கு காரணம் வித்தியாசமானது.  இந்தியாவில் பீகார், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், தமிழகம், ஆந்திரா ஆகியவை  விவசாயிகள் தற்கொலை நிகழும் மாநிலங்கள். இவற்றில் வெள்ளம், வறட்சி, சாகுபடிக்கு சரியான சூழ்நிலை ஏற்படாதது போன்ற காரணங்களால் விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டனர். ஆனால் அது போன்ற நிலை மத்திய பிரதேசத்தில் ஏற்படாமல் இருக்க கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்த பாஜ ஆட்சி தான் காரணம். 

தேவையான நேரத்தில் இடுபொருட்கள் கிடைத்தது, உரம் பதுக்கல் சந்தையை முறியடித்தது போன்ற காரணங்களால் விவசாயிகள் நிம்மதியாக சாகுபடி செய்ய முடிந்தது. ஆனால் சாகுபடி அதிகம் என்பதால் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. விலை அதிகம் என்றால் அரசு அதை கொள்முதல் செய்து கட்டுப்படுத்த முடியும். ஆனால் விலை கிடைக்கவில்லை என்றால் அதற்கு இது போன்ற தீர்வு மாநிலத்தின் சமநிலையை பாதிக்கும். இதன்காரணமாக கூடுதல் பொருட்களை ஏற்றுமதி செய்வது தான் தீர்வு, அதை மாநில அரசு செய்ய முடியாது. மத்திய அரசும் கூட இதற்கான முதற்கட்ட முயற்சியில் களம் இறங்கியது. ஆனால் அது பலன் தருவதற்குள் விவசாயிகள் கோபம் பாஜவிற்கு எதிராக மாறிவிட்டது.

இந்த பிரச்னைகள் எல்லாம் இருந்தும் கூட காங்கிரஸ் கட்சியை விட பாஜ 0.1 சதவீதம் ஓட்டுகள் அதிகம் பெற்றுள்ளது. அதாவது, பாஜ பெற்ற ஓட்டுகள் சதவீதம் 41, காங்கிரஸ் கட்சியோ 40.9 சதவீதம் ஓட்டுக்களைத் தான் பெற முடிந்தது. ஆனாலும் திமுக தோல்விக்கு பிறகு கலைஞர் காட்டும் கணக்கு போல மனதைத் தேற்றிக் கொள்ளத்தான் இந்த கணக்கு உதவும் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

அதே நேரத்தில்  மாயாவதி தான் இந்த தேர்தலில் முடிவெடுக்கும் சக்தியாக நிகழ்ச்சி உள்ளார். அவர் தனியே நிற்காமல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்தால் பாஜ மிக இழிவான நிலையில் தோல்வியை சந்தித்திருக்கும். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி பகுஜன் சமாஜ் கட்சியுடன் கடைசி நேரம் வரை பேச்சுவார்த்தை நடத்தியும் கூட அதில் முடிவு எட்டப்படாததால் மூன்றில் இரண்டு பங்கு வெற்றியை பெறும் வாய்ப்பை இழந்துள்ளது.

பகுஜன்சமாஜ் கட்சி 5 சதவீதம் ஓட்டுக்களை பெற்று 2 இடங்களைப் பிடித்தாலும் அது வெற்றி,  தோல்வியை மடை மாற்றத்தான் முடியுமே தவிர்த்து ஆட்சியை பிடிக்க உதவாது என்ற செய்தியை மாயாவதிக்கு சொல்வி இருக்கிறது. காங்கிரஸ், அல்லது பாஜ கனிசமான வெற்றியை பெற்றால் அந்த சூழ்நிலையில் மாயாவதியின் பாடு திண்டாட்டமாக போய்விடும் என்ற எச்சரிக்கையை இந்த தேர்தல் முடிவு வெளிப்படுத்தி இருக்கிறது.

ஓட்டு சதவீதம் கூடுதலாக பெற்றும், சுமார் 20 தொகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் குறைவான ஓட்டு வித்தியாசத்தில் தோற்றது என்று ஆட்சியை பாஜ பறிகொடுத்த காரணங்களை நினைத்தால் விதி என்று தான் சொல்ல வேண்டும்.

காங்கிரஸ் கட்சி தலையால் தண்ணீர் குடித்தும் கூட ஆட்சியை பிடித்துள்ளது. அதை தக்க வைக்கும் முயற்சியில் அந்த கட்சி ஈடுபட வேண்டும். விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் வரை கடன் தள்ளுபடி, பெண்குழந்தைகளின் கல்வி செலவை அரசு ஏற்பது போன்ற வாக்குறுதிகளை ஆட்சி பொறுப்பேற்றதும் நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் இந்த ஓட்டுக்கள் லோக்சபா தேர்தலிலும் அப்படியே கிடைக்கும். அதை விடுத்து சிறிது தயக்கம் காட்டினாலும், விவசாயிகள் மீண்டும் பாஜவை ஆதரிக்க தயங்கமாட்டார்கள். அது காங்கிரஸ் கட்சிக்கு நல்லது அல்ல.

அதே போல பகுஜன் சமாஜ் கட்சி காங்கிரஸ், அல்லது பாஜவுடன் கூட்டணி, அல்லது தனித்து போட்டி என்பதை முன்கூட்டியே முடிவு செய்து களப்பணியாற்றுவது நல்லது. அதை விடுத்து கடைசி நிமிடம் வரை பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி உடன்பாடு மட்டுமே கூட்டணியின் நிலைப்பாடு என்ற நிலை வரை தள்ளிவிட்டால் எதிர்காலத்தில் அக்கட்சியே காணாமல் போகும் வாய்ப்பு உள்ளது.

இதைத் தவிர இந்த மாநிலத்தைத் தை பொறுத்தளவில் மாநில கட்சிகள் வெகு வெகு சொற்பட ஓட்டுகளை மட்டுமே பெற்றுள்ளது. பாஜ, அல்லது காங்கிரஸ் என்று வாக்காளர்கள் தங்கள் முடிவை மாற்றக் கொள்வது நாட்டிற்கு நல்லது என்றாலும், மாநிலத்தின் பிரச்னைகளை இருக்கட்சிகளும் கையாள்வதில் தயக்கம் காட்டக் கூடாது. அவ்வாறு நீங்கள் தயங்கினால் அது மாநில கட்சிகள் ஆட்சியை பிடிக்க வழி ஏற்படுத்தும், அப்போது பாஜ, காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிப்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது என்பதற்கு தமிழகமே நல்ல உதாரணம். புரியவேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close