ஸ்டாலின் பற்றவைத்தது வெடிக்குமா? 

  பாரதி பித்தன்   | Last Modified : 18 Dec, 2018 10:38 pm
will-stalin-s-idea-explode

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று எதிர்கட்சிகள் அலைகின்றன. மோடி பயத்தால் எதிர்கட்சிகள்  முகத்தை கூட வெளிப்படுத்த தயங்குகின்றன. இதை நன்கு உணர்ந்து கொண்ட பாஜக, எங்கள் பிரதமர் வேட்பாளர் மோடி என்று கூறி, உங்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று கூற முடியுமா என சவால்விட்டு காங்கிரஸ் கட்சியை வம்புக்கு இழுத்து வருகிறது.

இதையடுத்து முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கூட கடந்த சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் ராகுல் பிரதமர் வேட்பாளர் கிடையாது என்றார். ராகுல் கூட அவ்வாறே கூறினார்.

மா.கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், எங்கள் கூட்டணியில் தனிப்பட்ட பிரதமர் வேட்பாளர் கிடையாது. யாரேனும் ஒருவரை அறிவித்தால், மற்றவர்கள் அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வாய்ப்பிருக்கிறது. அவருக்கு எதிரானவர்கள் கூட்டணியில் சேர தயக்கம் காட்டலாம். அதனால் மோடி எதிர்ப்பு வலுக்குன்றி விடும். அதை தவிர்க்கவே நாங்கள் கூட்டணியாக சேர்ந்து தேர்தலை சந்தித்து, வெற்றி பெற்ற பின்னர் யார் பிரதமர் என்று முடிவு செய்வோம் என்றார்.

இது இப்போது மட்டும் அல்ல. கடந்த  2014ம் ஆண்டும் இதே நிலை ஏற்பட்டது. அப்போது ராகுல் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக பதவி வகிக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் தொண்டர்கள் மனதில் ராகுல் பிரதமர் வேட்பாளராக வர வேண்டும் என்ற ஆசை இருந்ததாக தகவல்கள் வெளியாகின. அதை 2014 ஜனவரி மாதத்தில் நடந்த காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா மறுத்து, ராகுலின் பிரதமர் கனவை தற்காலிகமாக ஏறக்கட்டினார். 

கடந்த 2008ம் ஆண்டும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான அர்ஜூன் சிங் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும் யோசனை கூறினார். அதை மறைந்த கருணாநிதி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான பிரஃபுல் படேல் ஆகியோர் ஆதரித்தனர். ஆனால் அப்போதும் காங்கிரஸ் கட்சி இந்த யோசனையை நிராகரித்தது. மேலும் இது ராகுல் குறித்த முகஸ்துதியான பேச்சுதான் என்றும் அக்கட்சி வெளிப்படையாக விமர்சனம் செய்தது. இது போன்ற துதிபாடிகளிடம் இருந்து சோனியா ராகுல் விலகியே இருப்பார்கள் என்று காங்கிரஸ் நிர்வாகம் அறிவித்தது.

கடந்த 2 லோக்சபா தேர்தலில்களில் காங்கிரஸ் கட்சி எளிதாக வெல்வோம் என்ற நம்பிக்கை இல்லாமல் இருந்தது. அதிலும் 2014ம் ஆண்டு மோடி அலையில் காங்கிரஸ் கட்சிக்கு இருந்து வந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் அற்றுப்போய்விட்டது. இதனால் ராகுலை பலிகடாவாக்க சோனியா துணியவில்லை.

ஆனால் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் ராகுல் பற்றிய விமர்சனத்தை மாற்றிவிட்டது போல் காட்சி ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தல்களில் மூன்று மாநிலங்களில் பெற்ற வெற்றி அந்த கட்சிக்கு லோக்சபா தேர்தல் குறித்து நம்பிக்கையை ஊட்டி உள்ளது. இன்னொருபுறம் காங்கிரஸ் தவிர்த்த எதிர்கட்சிகளுக்கு வரும் தேர்தல் ஒரு வாழ்வா சாவா என்ற பிரச்னையாக இருக்கப் போகிறது. காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து வெற்றி பெறலாம் என்ற வாய்ப்பு, அல்லது 3ம் இடம் என்பது தான் எதிர்கட்சிகள் முன்பு உள்ள 2 வழிகள். வரும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் கூட உயிர் பிழைக்க வாய்ப்புள்ளது. ஆனால் பாஜ வெற்றி பெற்றால் பிறகு தலையெடுப்பதே தம்பிரான் புண்ணியத்துக்கு என்ற அளவுக்கு தள்ளப்படுவோம் என்பதே எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையோரின் இன்றைய நிலைமை. இந்நிலையில் அப்புறம் தலையெடுப்பது என்பேத அவர்களக்கு மிகவும் கஷ்டமாக போய்விடும் என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

அதற்காக எடுத்தேன் கவிழ்த்தேன் என காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால், மாநிலத்தில் அந்த கட்சிகளுக்கு, அந்த முடிவு பிரச்னையை ஏற்படுத்தும். மேற்கு வங்கத்தில் மம்தா, கேரளாவில் கம்யூனிஸ்ட், பீகாரில் லாலு போன்றவர்கள் காங்கிரஸ் பூச்சாண்டி காட்டியே அரசியல் களத்தில் குப்பை கொட்டுபவர்கள்.

இது போன்றவர்களுக்கு பிரதமர் வேட்பாளர் இல்லாமல் காங்கிரஸ் கட்சியில் கூட்டணி அமைப்பது எந்த பிரச்னையையும் ஏற்படுத்தப் போவதில்லை. எங்களுக்கு வேற வழி தெரியவில்லை, மோடியை அகற்ற வேண்டும் அல்லவா அதற்கு தான் கூட்டணி, வெற்றி பெற்றதும் நானே களத்தில் இருப்பேன் என்று கண்ணீர் சிந்தி உள்ளூர் வாக்குகளை அவர்கள் பெற்று விட முடியும் என்று நம்புகிறார்கள். இந்த நிலைப்பாட்டை தான் பட்டாசை கொளுத்திப் போடும் வகையில் ஸ்டாலின்  செய்துள்ளார். 

5 மாநில தேர்தல் முடிவுக்கு பின்னால் நடைபெறும் மிகப் பெரிய நிகழ்ச்சி, அதிலும் இதுவரை சம்பரதாய நட்பு மட்டுமே கொண்டிருந்த ராகுல், திமுகவிலிருந்து அழைப்பு சென்ற உடன் வர ஒப்புகொண்டதற்கும் நேரில் வந்ததற்கும் பெரு மகிழ்ச்சி, சோனியாவும் கலந்து கொண்டதில் கூடுதல் சந்தோஷம், என்று பலரதப்பட்ட காரணங்கள் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ராகுலை பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்க செய்தது. இது ஸ்டாலினாக கூறியதா அல்லது காங்கிரஸ் கட்சியே ஸ்டாலின் மூலம் நுால் விட்டு பார்க்கிறதா என்ற சந்தேகம் எழுவது ஒருபுறம் இருக்கிறது. நிகழ்ச்சியில் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சி முதல்வர்கள் இருந்ததால் இது அந்த நிமிடத்தில் விவாதத்தை தொடங்க வில்லை. ஆனால் கேரளமுதல்வருக்கு மட்டும் தான் அப்போது தர்மசங்கடம். மேடைக்கு முன்பாக அமர்ந்திருந்த பல தமிழக அரசியல் கட்சித் தலைவர்களுக்கு கூட ஸ்டாலின் அறிவிப்பு இனிப்பாக இல்லை.

இந்த அறிவிப்பின் விளைவு புதிய முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் எதிரொலித்தது. ராஜஸ்தான் மாநில பதவி ஏற்பு விழாவிற்கு காங்கிஸ் கட்சி ஸ்டாலின் உட்பட கூட்டணி கட்சித்தலைவர்களை ஒரே வேனில் அழைத்து சென்று கலந்து கொள்ள வைத்தது. கூவத்துார் சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் இது பதவியேற்பு விழாவா, அல்லது நம்பிக்கை வாக்கெடுப்பா என்று நினைக்கும் அளவிற்கு காங்கிரஸ் கட்சியின் இந்த நடவடிக்கை இருந்தது.

ஆனாலும் அபசுவரமாக மத்தியபிரதேசத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைய உதவிய மாயாவதி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொள்ள வில்லை. இது நாட்டில் அதிக எம்பிகளை கொண்ட உபியில் காங்கிரஸ் வெற்றி குறித்து மட்டுமல்ல கூட்டணி அமைவது குறித்த சந்தேகத்தையே அவர்கள் இருவரும் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வராதது எழுப்பி உள்ளது.

ஸ்டாலின் பிரதமர் வேட்பாளர் ராகுல் என்று அறிவித்துவிட்டாலும், தொகுதி ஒதுக்கீட்டில் திமுக கைதான் ஓங்கி இருக்கும். அதாவது மாப்பிள்ளை இவர்தான், சட்டை என்னுடையது என்ற கதையாக பிரதமர் வேட்பாளரான ராகுலை தலைவராகக் கொண்ட கட்சிக்கு தமிழகத்தில் 10 இடங்கள் ஒதுக்கினாலே அதிகம்.

தற்போதுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி 350 இடங்களில் போட்டியிட்டாலே. அதிகம். அதில் அவர்கள் தனித்து மாஜிக் எண்ணை( பெரும்பான்மை இடங்களை) பெற வேண்டும். ஆனால் கடந்த பல தேர்தல்களாக காங்கிரஸ் அந்த எண்ணை தொடவே இல்லை. அப்படி இருந்தாலும் 120 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் கூட ஆட்சியமைக்க முடியும். அப்போது காங்கிரஸ் பிடி எதிர்கட்சிகள் கையில் இருக்கும். அந்த சூழ்நிலையில் ராகுலை பிரதமராக அமர்த்த சோனியா அறிவிப்பாரா என்பது கேள்விக்குறி.

இதற்கு காங்கிரஸ் கட்சி தேர்தலில் பெற்றும் வெற்றிதான் விடையளிக்கும். அப்போது ஸ்டாலி்ன் கொளுத்திப் போட்டது வெடியா அல்லது புஸ்வானமா என விளங்கி விடும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close