ஆதார் எண்ணை கட்டாயப்படுத்தும் நிறுவனங்களுக்கு தண்டனை- மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம்!

  Newstm Desk   | Last Modified : 19 Dec, 2018 05:32 pm
companies-insisting-on-aadhaar-to-face-rs-1-crore-fine-and-jail-to-staff

குடிமக்களிடம் ஆதார் எண்ணை ஆதாரமாகக் கேட்கும் வங்கிகள், மொபைல் போன் நிறுவனங்களுக்கு ரூ. 1 கோடி வரை அபராதமும் மற்றும் அதன் ஊழியர்களுக்கு மூன்று முதல் பத்தாண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்க வகை செய்யும் சட்ட திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நாடு முழுவதும் கோடிக்கணக்கானோர், அவர்களது சிம் கார்டு, வங்கிக் கணக்கு ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இதற்கிடையே, ஆதாரை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அரசின் மானியம், பான் எண் ஆகியவற்றிக்கு மட்டுமே ஆதார் எண் கட்டாயம் என சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்ட உத்தரவில் குறிப்பிட்டிருந்தது. 

மேலும், வங்கிக் கணக்கு தொடங்க மற்றும் சிம் கார்டு வாங்க ஆகியவற்றுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கக் கூடாது என்றும் தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு தற்போது ஈடுபட்டுள்ளது. இதற்காக, குடிமக்கள் அனைவரும் விருப்பத்தின் பேரில் சிம் கார்டு, வங்கி கணக்குகள் ஆகியவற்றுடன், அவர்களது ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக சட்டத் திருத்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் வழங்கி உள்ளது.

அதனுடன் கூடுதலாக, வங்கிக் கணக்கு மற்றும் சிம் கார்டு வாங்க விண்ணப்பிப்பவர்களிடம் ஆதார் எண்ணை கேட்கும் வங்கிகள் மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு ரூ. 1 கோடி வரை அபராதமும் மற்றும் அதன் ஊழியர்களுக்கு மூன்று முதல் பத்தாண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கும் வகையில் சட்டத்திருத்ததில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.  

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்திய தந்தித்துறை சட்டம் (Indian Telegraph Act) மற்றும் சட்ட விரோத பணச் சலவை தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundering Act) ஆகியவற்றில் திருத்தங்கள் கொண்டுவரும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இச்சட்ட திருத்தங்கள் வங்கிகள் மற்றும் இதர நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை ஆதார் எண்ணை இணைக்க வற்புறுத்துவதை தடை செய்வதுடன் அதனை மீறினால் அந்நிறுவனத்துக்கு ஒரு கோடி ரூபாய் அபராதமும் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு சிறை தண்டனையும் விதிக்க வழிவகை செய்கிறது. குறிப்பாக, KYC எனப்படும் வாடிக்கையாளர் விவரம் அறியும் விதத்தில் ஆதார் எண்ணை அளிக்குமாறு கேட்டக் கூடாது எனவும் இந்த சட்டதிருத்த மசோதா குறிப்பிடுகிறது.

உச்சநீதிமன்ற நெறிமுறைக்கு உட்பட்டு அரசு பொது நல நோக்கில் ஆதார் எண்ணை இணைப்பைக் கோர அனுமதிக்கும் விதிவிலக்கும் உள்ளது. ஆதார் அரசு செயல்பாட்டை மேம்படுத்த வசதியான சாதனம் என்றும் அதில் உள்ள பயோமெட்ரிக் பாதுகாப்பை உடைக்க முயன்றால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பயோமெட்ரிக் முறையை தவறாக பயன்படுத்த முயன்றால் ரூ.50 லட்சம் அபராதமும், 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் கிடைக்கும். முறையான அறிவுறுத்தல் இல்லாமல் ஆதார் தகவல்களைத் பெற்றால் ரூ.10,000 அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை உண்டு. இது க்யூ.ஆர். கோடு மூலம் செய்யும் சரிபார்ப்புக்கு ஆதாரை பயன்படுத்தற்கும் பொருந்தும். யாருடைய ஆதார் விவரத்தையோ புகைப்படத்தையோ வெளியிட்டாலும் ரூ.10,000 முதல் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close