காங்கிரஸ் கூட்டணி, மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்குமா...?

  பாரதி பித்தன்   | Last Modified : 19 Dec, 2018 08:36 pm
will-congress-win-in-2019

வாஜ்பாய் தலைமையில் தேசியஜனநாயக கூட்டணியில் மற்ற மாநில கட்சிகளுக்கு முன்பாக இணைந்தது அதிமுக தான். அதன் பின்னர் தான் சிவசேனா தவிர்த்த  இதர கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தது. திமுகவை ஆட்சி கட்டிலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற ஒற்றை நிலைப்பாடுதான் அதிமுகவை பாஜகவுடன் இணைத்தது. ஆனால் அது நடக்கவில்லை என்றதும் குளத்தில் மூழ்கவைத்து தலையை அழுத்திப்பிடித்து போன்ற நிலை ஜெயலலிதாவிற்கு. அந்த காலகட்டத்தில் ஊழல் வழக்கில் சிக்கி இருந்தவர் முதல்வர் ஜெயலலிதா தான். அதில் என்ன தீர்ப்பு வரும் என்றும் தெரியாத நிலை. பிரதமராக இருந்த வாஜ்பாய் வழக்கை முடித்து வைப்பதற்கு ஒத்துழைக்கவில்லை. அதிமுகவின் ஜனார்தனன் மத்திய அமைச்சராக இருந்தபோதும் ஜெயலலிதா மீதான வழக்கை கைவிட இயலவில்லை. இது போன்ற சூழ்நிலையில் ஜெயலலிதா பாஜகவை விட்டு விலகத் தொடங்கினார். அதற்கு சுப்பிரமணியம் சுவாமி நடத்திய தேனீர் விருந்தும் ஒத்துழைப்பு தர, 13 மாதத்தில் வாஜ்பாய் ஆட்சி கவிழ்ந்தது. தமிழகத்தில் பாஜமீது அனுதாபத்தை ஏற்படுத்தியது. மேலும் அதிமுக கூட்டணி உருவாகிவிட்ட நிலையில், திமுக லோக் சபா தேர்தலை சந்திக்க சரியான சூழ்நிலை அமையவில்லை. இதன் காரணமாக பாஜ-திமுக கூட்டணி ஏற்படுகிறது. மேலும் அதிமுக தவிர்த்து மதிமுக, பாமக உள்ளிட்ட எந்த கட்சியும் அந்த கூட்டணியை விட்டு வெளியே வராத நிலையில் திமுக கூட்டணியில் இணைந்ததால் அந்த தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறுகிறது. 

அதன் பின்னர் 5 ஆண்டுகள் திமுக ஆட்சியில் இடம் பெற்றது. உடல்நிலை சரியில்லாத நிலையில் மட்டுமல்ல, உயிர் துறப்பது வரை முரசொலி மாறன் மத்திய அமைச்சராகவே தொடர்ந்தார். ஆட்சிக் காலத்தின் கடைசியில் 2004ம் ஆண்டு தேர்தலில் பாஜ வெற்றி பெறுமா என்ற சந்தேகம் திமுகவிற்கு ஏற்படுகிறது. மேலும் கூட்டணியை விட்டு வெளியேறினால் யாருடன் வேண்டுமானாலும் வியாபாரம் பேசலாம், வெற்றி பெற்ற பிறகு பேரத்தை பலமாக செய்யலாம் என்ற நோக்கத்தில் பாஜக மீது மதசாயத்தை பூசி கூட்டணியை விட்டு திமுக வெளியே வந்தது. 

அதன் பின்னர் கலைஞர் வழக்கம் போலவே கதை கட்டுரைகள் மூலம் காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் காட்டினார். இதன் மறைமுக செயல்திட்டம் அதிமுக காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டுவிடக் கூடாது என்பது தான். 
இதன் காரணமாக அகில இந்திய அளவில் காங்கிரஸ் கூட்டணி பற்றியோ, பிரதமர் யார் என்றோ முடிவு ஏற்படாத நிலையில் கருணாநிதிதான் 2004ம் ஆண்டு சென்னை தீவு திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் இந்திராவின் மருமகளே வருக, இந்தியாவின் திருமகளே வெல்க என்று அறைகூவல் விடுத்தார். அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியில் மற்ற கட்சிகள் இணைந்தன. இதன் பலனாக தொடர்ந்து வந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் டிஆர்பாலு, தயாநிதிமாறன், ராசா, பழனிமாணிக்கம்,ரகுபதி, வெங்கடபதில, சுப்புலட்சுமி ஜகதீசன், என்று பல மத்திய அமைச்சர்களை பெற்றது. 

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின் கொளுத்திப் போட்டதும் இதே நிலைப்பாடுதான். தமிழகத்தை பொருத்த அளவில் ராகுல் வென்றால் என்ன தோற்றால் என்ன. திமுகவிற்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. தற்போது காங்கிரஸ் கட்சிக்கு திமுகவின் தயவு தான் தேவையே தவிர்த்து, அந்த கட்சியை நம்பி திமுக இல்லை. ஒருக்கால் எதிர்காலத்தில் அத்தைக்கு மீசை முளைத்துவிட்டால், அன்றே .சொன்னோமே சோனியா என்று அமைச்சர் பதவிகளை அள்ளும் திட்டம் தான், ராகுல்காந்தியே வருக, நல்லாட்சியை தருக என்ற அறைகூவல். 

ஸ்டாலின் அறிவிப்பை பலரும் விரும்பவில்லை, ரசிக்கவில்லை என்பது மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி போன்றவர்களின் அதிருப்திக் குரலிலேயே நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. ராகுலை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதற்கு வரவேற்பு அளித்து ஸ்டாலின் அறிவித்தற்கு மாறாக, அந்தக் கருத்தை விமர்சித்து மமதா பத்திரிகைகளுக்கு தொடர்ந்து அளித்து வரும்  பேட்டிகளிலேயே ராகுலுக்கான எதிர்ப்பு வெளிப்படையாகத் தெரிய வந்துள்ளது. ஆனாலும் முடியை கட்டி மலையை இழுத்துள்ளார் ஸ்டாலின். வந்தால் மலை, போனால் .... கேசம் 

மம்தா, அபிஷேக்யாதவ் மட்டும் அல்லாமல் கலைஞர் சிலை திறப்பு விழா மேடையில் அமர்ந்திருந்த இடது சாரிகளும் ஏற்றுக் கொண்டால் மட்டுமே 2004ம் ஆண்டு நிலவிய அரசியல் சூழல் மீண்டும் வருகிறது என்று கூறலாம். ஆனால் அவ்வாறு நடக்காது என்பது தான் யதார்த்தம். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close