பிளாக் மெயில் அரசியல் செய்யும், பாஜகவின் கூட்டணிக் கட்சிகள்

  பாரதி பித்தன்   | Last Modified : 23 Dec, 2018 01:02 am
blackmail-political-special-story

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மதிப்பு மிக்க தலைவர் உள்ள கட்சிக்கு கூட்டணி தேவையே இல்லாமல் இருந்தது. அவர் மீதான சரியான அல்லது தவறான புரிதலின் போது கூட்டணி அவசியமாகிறது. ஒரு கட்சியின் வளர்ச்சி மற்றொரு கட்சியின் வீழ்ச்சிக்கு ஏற்ப இல்லாத போதும் தேர்தல் கூட்டணி அவசியமாகிறது.

இது போன்ற சூழ்நிலையில் ஒத்த கருத்து, அல்லது கொள்கை இருக்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது அரசியல் கட்சிகளின் முதல் கட்ட நிலைப்பாடு. ஆனால் இது எப்போதும் பலன் கொடுப்பதாக இல்லை.

நெருக்கடி நிலை முடிவுக்கு வந்த பின்னர் இந்திராவிற்கு எதிராக எதிர்கட்சிகள் ஏற்படுத்திய கூட்டணி கதம்பம் போலவே இருந்தது. அவற்றை இந்திரா எதிர்ப்பு என்ற ஒற்றைப் புள்ளிதான் இணைத்தது.

அதே போல விபி சிங் பிரதமராக உருவெடுக்க பாஜ, கம்யூனிஸ்ட் ஆதரவு மிக முக்கிய காரணம். பாஜ, கம்யூனிஸ்ட் கட்சினர் கொள்கை அடிப்படையில் வடக்கும், தெற்குமாக உள்ளவர்கள்.

 தேர்தலுக்கு முந்தைய கூட்டணி  ஆட்சியை பிடிக்க தேவையான மாஜிக் நம்பரை எட்ட இயலாவிட்டால், தேர்தலுக்கு பின்னர் ஒரு கூட்டணி அமைகிறது. அதன் மையம் பதவி வெறி என்பது தான் வெட்ட வெளிச்சம். 2 நாட்கள் முன்பு வரை திருடர்கள், கொள்ளையர்கள் என பரஸ்பரம் விமர்சனம் செய்து கொண்டவர்கள் சமூகத்தை தாங்கி பிடிக்க ஆட்சி கட்டிலில் ஏற அனுமதிக்கப்படுகிறார்கள் என்றால் அதை விட கேவலமான நிலை வேறு இல்லை.

இந்த கேவலமான நிலைப்பாடு காங்கிரஸ் மற்றும் பாஜ எதிர்ப்பு கட்சிகளிடையேயும், பிராந்திய கட்சிகளிடையேயும் அதிகம்..  2019ம் ஆண்டு தேர்தலில் பாஜ ஆட்சி அமைக்க 282 இடங்களை பிடிக்க வேண்டும், காங்கிரஸ் 120 இடங்களை பிடித்தால் கூட போதும் ஆட்சியை அமைக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுவது கேவல அரசியலை துகிலுரித்துக் காட்டாமல், அதை நியாயப்படுத்தும் போக்கையே காட்டுகிறது.

அதாவது தேர்தலுக்கு பின்னர் பாஜ, ஆட்சியை பிடிக்க வழில்லாத போது, பாஜவுடன் கூட்டணி அமைக்காமல், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கத்தான் இதர அரசியல் கட்சிகள் விரும்பும் என்பது தான் இவர்களின் முடிவுக்கு காரணம். விலை அதிகம் போகும் இடத்தில் தான், தரமற்ற பொருட்கள் விற்பனைக்கு வந்து வந்து சேரும்.

பாஜக விதி அப்படி. இன்று நேற்று அல்ல வாஜ்பாய் ஆட்சியில் இருந்தே அதே நிலைதான். பாஜக தீண்டத்தகாத கட்சியாக இருந்த காலத்தில் கூட்டணி சேர்ந்தவர் ஜெயலலிதா. ஆனால் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னர் அவரின் மிரட்டல்கள் தாங்க முடியாததாக இருந்தது. போயஸ் தோட்ட வாசலில் பாஜக பிரதிநிதி நிரந்தரமாகக் குடியிருந்தார்.

இவர் தான் அப்படி என்றால் கருணாநிதி ஒருபடி மேலே ஆட்சி அதிகாரத்தில் 5 ஆண்டுகள் பங்கு பெற்று எல்லா சுகத்தையும் அனுபவித்துவிட்டு, தன் 40 ஆண்டுகளாக நண்பரை விரோதித்து, மதவாதம் கட்சி சீசீ இந்த பழம் புளிக்கும் என்று பச்சோந்தினத்தின் உச்சமாக செயல்படுவார் என்பதை அவரே நிரூபித்து அந்தக் கூட்டணியை விட்டு ஆட்சிக் கட்டிலின் இறுதித் தருணத்தில் வெளியேறியவர் கருணாநிதி.

இந்த நிலை இப்போதும் தொடர்கிறது. 2014ம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட கட்சிகள் தற்போது ஒவ்வொன்றாக வெளியேறி வருகிறது. இது வரையில் அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு, தேர்தல் நேரத்தில் கூட்டணியை விட்டு வெளியேறுவது, பாஜக அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கூடுதல் சீட்கள் தரும், அல்லது கூட்டணியில் சேராமல் வெற்றி பெற்றால் மீண்டும் கூடுதல் அமைச்சர்கள் பெறலாம் என்பது தான் இந்த பிளாக் மெயிலர்களின் நோக்கம்.

2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்பு பாஜக கூட்டணியில் சிவசேனா, லோக் ஜனசக்தி கட்சி, சிரோன்மணி அகாலிதல், அப்னா தள், பாமக, அகில இந்திய என்ஆர் காங்கிரஸ், நாகா மக்கள் முன்னணி, இந்திய குடியரசு கட்சி, தெலுங்குதேசம், தேமுதிக  என காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மாநிலங்களில் 43 கட்சிகளைக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது உள்ள நிலைமை பாருங்கள்.

பாஜகூட்டணியில் தமிழகத்தை பொறுத்தளவில் பாமக தான் வெளியே வந்தது. அதன் இளைஞர் அணித்தலைவர் அன்புமணி அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அப்படி ஏதும் நடவடிக்கை இல்லை என்றதும், கூட்டணி பற்றி குறை கூறிவிட்டு வெளியேறினார்.

அதே நேரத்தில் பாஜக, சிவசேனாவும் ஒரே கூட்டணியில் இருந்தால் கூட மாமியாரும், மருமகளும் ஒரே வீ்ட்டில் இருப்பது போன்றது. நிரந்தரமாக சிவசேனா தொல்லை கொடுத்து வருகிறது. ஒரு கட்டத்தில் தனித்து சட்டசபைத் தேர்தலை சந்தித்து பாஜகவை விட மோசமான தோல்வியடைந்தது. அது மட்டும் அல்லாமல், அதில் கற்ற பாடத்தை அக்கட்சி மறக்காவிட்டாலும் கூட, உள்ளூரில் தன் ஆதரவு தளத்தை தக்கவைத்துக் கொள்ள அது தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறது.

இந்த ஆண்டில் தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியை விட்டு விலகினார். அதற்கு புதுக்கூட்டணி அமைத்து வெற்றி பெற்றால், காங்கிரஸ் பிரதமர் வேட்பாளரை நிறுத்தாவிட்டால் தன்னை முன்னிருத்திக் கொள்ளலாம்  என்ற பேராசைதான் அவரை பாஜக கூட்டணியை விட்டு வெளியேற வைத்தது.

அதே போல தெலுங்கானாவின் தற்போதைய முதல்வராக இருக்கும் சந்திரசேகரராவ், பாஜக கூட்டணியைவிட்டு வெளியேறியதும், அடுத்த கூட்டணிக்கு துண்டு போட தயாரானார். ஆனால் அது பலன் தராது என்று அறிந்ததும் அந்த போராட்டத்தை அவர் கைவிட்டார், பாஜகவுடன் கைகோர்த்தது, மீண்டும் தனித்து நின்றது போன்ற அவரின் நடவடிக்கைகள் விமர்சனத்திற்கு உள்ளானது. ஆனால் இப்போதும் தொடரப் போவதாக அறிவித்துள்ளது யாரை ஏமாற்ற என்பதை காலம் தான் நிரூபிக்கும்.

அதே போல ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சித் தலைவர் உபேந்திர குஷ்வாஹா பாஜக கூட்டணியை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார். வழக்கமான காரணங்கள் தான். ஆனால் அக்கட்சியினர் கூட்டணியில் தொடர்வதாக அறிவித்து அதிரடித்துள்ளனர்.

இன்னும் தேர்தல் வரை பல கட்சிகள் கூட்டணியை விட்டு வெளியேறும். ஆனால் வெளியேறும் கட்சிகள் கூட்டணி அமைத்தாலும், அவற்றால் சம்பந்தப்பட்ட மாநிலங்களை தவிர்த்து வெளிமாநிலங்களில் ஒன்றுக்கு ஒன்று உதவ வழியில்லை.

அதே நேரத்தில் பாஜக ஜாதகம் வாலியை போன்றது. அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு விட்டு வெளியேறினால் மீண்டும் தங்கள் புகழை இழந்து, அரசியல் வாழ்வில் ஒரேயடியாக தொலைந்து போய்விடுவார்கள்.

இதற்கு ராமகிருஷ்ண ஹெக்டே, விபி சிங், ஆந்திரா எம்பி உபேந்திரா என்று பெரிய பட்டியலையே கூறலாம். தற்போதும் இது தான் தொடரரும். ஆனால் இவர்கள் பிளவு, பல லோக்சபா தொகுதிகளில் முடிவை மாற்றும்  என்பதால் அதற்கு ஏற்ற நிலைப்பாடுகளை கடைபிடிக்க பாஜ முன்வர வேண்டும். நிச்சயம் செய்வார்கள் என நம்பலாம். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close