குடிமக்களாகிய நாம் என்ன செய்யப் போகிறோம்...? நமக்கு கடமைகள் உள்ளதா ?(பகுதி-1)

  பாரதி பித்தன்   | Last Modified : 23 Dec, 2018 06:04 pm
what-we-are-going-to-do-special-story

பெண்களிடம் வயசை கேட்காதே, ஆண்களிடம் வருமானத்தை கேட்காதே என்று ஒரு பழமொழி உண்டு. ஆண்களின் வருமானம் தெரியாத நிலையில் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தங்களின் செலவு மட்டுமே முக்கியமாகத் தெரியும். அதை பூர்த்தி செய்வதற்காக அந்த ஆண், உழைக்கலாம் லஞ்சம் வாங்கலாம், கொள்ளையடிக்கலாம் எதை வேண்டுமானாலும் செய்யலாம். அது அந்த குடும்பத்தினருக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

உதாரணமாக குடும்பத்தலைவர் ஊர் முழுவதும் கடன் வாங்கி குடும்பத்தை நடத்துகிறார். குடும்பம் சிறப்பாக வாழ்கிறது. ஒரு கட்டத்தில் கடன் கொடுக்க ஆள் இல்லை. நெய், பால் என்று சாப்பிட்டது சிறிது குறைகிறது. பின்னர் அனாவசியம், அவசியம் என்று அனைத்தும் பிரித்து பார்க்கப்படுகிறது. 

நிலைமையை அறியாத குடும்ப உறுப்பினர்கள் அப்பா முன்ன போல இல்லை. அவரு இப்போ குடும்பத்தை கவனிப்பதே இல்லை என்று குற்றச்சாட்டு எழுகிறது. ஒரு கட்டத்தில் குடும்பம் சிதைந்து சின்னாபின்னமாகி விடுகிறது. ஒரு குடும்பத்திற்கே இந்த நிலை என்றால் நாட்டிற்கு?

நாட்டு மக்களாகிய நாம் குடிமக்களின் கடைமையாகிய வாக்களிப்பதை தேர்தல் நேரத்தில் முறையாகச் செய்து விடுகிறோம். அத்துடன் நம் வேலை முடிந்து விட்டது என்று நினைத்து கொண்டு, அவர் அவர் தன் வேலையை பார்க்கச் சென்று விடுகிறோம். நமக்கு தேவையானவற்றை மத்திய மாநில அரசுகள் தான் செய்ய வேண்டும்.

அதுக்கு தானே ஓட்டு போட்டோம் என்ற கேள்வி மட்டும் கட்சி வித்தியாசம் இல்லாமல் யார் ஆட்சியை பிடித்தாலும் எழுப்பிக் கொண்டே இருப்போம்.

இந்தியா சுதந்தரம் அடைந்த நேரத்தில் சாதாரண ஜிப்பு கூட இந்தியாவில் தயாரிக்கப்படவில்லை. குண்டு ஊசியை வெளிநாட்டில் இருந்து தான் இறக்குமதி செய்தோம். 1951ஆம் ஆண்டில் மக்கள் தொகையில் 72 சதவீதம் பேர் விவசாயிகள். இந்த காலகட்டத்தில் நேரு, கலப்பு பொருளாதாரம் தான் நாட்டை முன்னேற்றும் என்று நினைத்தார்.

ஒரு புறம் அணைகள் கட்டப்பட்டன. உர நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. இன்னொருபுறம் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. இதில் வேலை செய்வதற்காக விவசாயிகள் மடைமாற்றிவிடப்பட்டனர். மறைமுகமாக விவசாயப் பொருட்கள் விலை குறைக்கப்பட்டன.

அதே நேரத்தில் தொழிற்சாலைகளில் வேலை செய்வோருக்கு கணிசமாக ஊதியம் வழங்கப்பட்டது. இதனால் விவசாயக்குடும்பத்தினர் கூட அரசு, தொழிற்சாலைகளில் வேலை செய்வதை கவுரமாக கருதினர். 10 ஏக்கர் நிலம் வைத்திருந்தவன் கூட பியுனாக வேலை செய்யத் தயாராக இருந்தான்.

கணிசமான  ஊதியம் என்பதால் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் எதை வேண்டுமானாலும் வாங்க முடிந்தது. பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்க முடிந்தது. இதனால் ஏழை, பணக்காரர்கள் என்ற பாகுபாடும், நகரத்தை நோக்கி புலம் பெயர்வதும் அதிகரித்தது..

இதன் காரணமாக இந்திராவின் ஆட்சியில் வேறு சிக்கலை சந்திக்க வேண்டிய நிலை உருவானது. அரசு முதலீடு என்பதால் லாப நஷ்டம் பற்றிய கவலை இல்லாமல், நிறுவனத்தில் வேலை செய்தவர்களுக்கு 30ம் தேதி சம்பளம் வந்துவிட்டது. நிலம் வைத்திருந்த உரிமையாளர்கள் தங்கள் பங்குக்கு சாகுபடி செய்தனர்.

இந்த இரண்டு வகையிலும் சேராத மக்கள் பொருளாதாரத்தில் தேக்கநிலையை சந்தித்தனர். இதனால் அவர்களை கை தூக்கிவிட வேண்டியம் கட்டாயம் இந்திராவிற்கு வந்து சேர்ந்தது. அதன் காரணமாக அவர் 1975ம் ஆண்டு 20ம் அம்ச திட்டங்களை அறிமுகம் செய்தார். இதன் மூலம் கிராமப்புற வறுமையை ஒழிக்கும் வகையில் திட்டங்கள் வகுத்தார்.

மேலும் விவசாயத்தை மேம்படுத்துவற்கான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. இதன் மூலம் அரசுத் துறைகளை நாடினால் நன்மை பெறலாம் என்ற நிலை ஏற்பட்டது.

இந்த இடத்தில் தான் சிபாரிசுகள் உருவாயின. ஏழ்மையை ஒழிப்பது சரி. யாருடைய ஏழ்மை என்கிற போது அரசியல்வாதிகள் உள்ளே புகுந்தனர். இதனால் சம்பந்தப்பட்ட திட்டங்களின் பலன் குறிப்பிட்டசாராருக்கே சென்று சேரும் நிலை ஏற்பட்டது.

இதை நன்கு உணர்ந்து கொண்ட அதிகாரிகள் திட்டங்களின் பங்குகளில் கை வைத்தனர். சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய பலன் போய் சேரவில்லை. பயனாளிக்கு கிடைத்த மிச்சம் மீதி திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள போதுமானதாக இல்லை.

இதன் காரணமாக பயனாளிகள் அதை வேறு வகையில் அதை செலவிடத் தொடங்கினர். இதனால் அரசு திட்டங்கள் மூலம் இடைத் தரகர்கள் மட்டுமே வெகுவாக பலனடைந்தனர். திட்டம் வெற்றி வெற்றி என்று அரசு கூச்சல் இட்டாலும், அரசு வழங்கிய திட்டங்களின் பலன்கள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையவே இல்லை.

உதாரணமாக  பாராளுமன்றத்தில் ஒரு எம்பி கடந்த 5 ஆண்டுகளில் நாட்டில் எத்தனை தென்னை மரம் நடப்பட்டது என்று கேள்வி எழுப்புவார். இதற்கு புள்ளிவிபரங்கள் சேகரித்து நாளை பதில் சொல்லப்படும் என்று அமைச்சர் கூறுவார்.

உடனே அனைத்து மாநிலங்களுக்கும் இந்த கேள்வி அனுப்பபட்டு படிப்படியாக விஏஓ வரை அது வந்து சேரும். விஏஓவிற்கு அந்த கேள்வி வந்து சேரும் போது ஒவ்வொரு ஆண்டும் எத்தனை தென்னை மரங்கள் நடப்பட்டன.

அதில் எத்தனை காய்கள் காய்கிறது. வரும் ஆண்டில் எத்தனை மரங்கள் காய்க்கும் என்று பெரிய பட்டியேலே தயாரிக்கப்பட்டு ஒரு மணி நேரத்தில் பதில் அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டிருக்கும். எந்திரன் ரஜினியால் கூட அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் கணக்கெடுப்பு நடத்த முடியாது. ஆனாலும் நம் விஏஒ அதை சமார்த்தியமாக செய்து முடிப்பார்.

அதாவது இருந்த இடத்தில் இருந்தே ஒரு கிராமத்திற்கு 10 தென்னை மரங்கள் நடப்பட்டது. அதில் 3 மரங்கள் காய்த்துக் கொண்டிருக்கின்றன. 2 தென்னை மரங்கள் அடுத்த ஆண்டில் காய்க்க தொடங்கும், 2 தென்னை மரங்களில் காண்டாமிருக வண்டு தாக்கி உள்ளது. அது குறித்து தோட்டக்கலைத்துறை ஆய்வு செய்து வருகிறது.

மீதம் உள்ளவை இந்த ஆண்டு நடப்பட்டவை என ஒரு மணி நேரத்திற்குள் கணக்கை அனுப்பி விடுவார். அது ஆர்.ஐ.  கைக்கு போகும் போது 10 என மாறும், தாசில்தார் 1000 என்று மாற்றுவார். மாநில அரசு அதை லட்சமாக மாற்றும்.

மறுநாள் அமைச்சர் நாடு முழுவதும் 2 கோடியே 55 லட்சத்து 632 தென்னை மரங்கள் நடப்பட்டுள்ளன என்று பதில் கூறி அதற்கு அழகாக வகைகளை பிரித்து ஆலாபணையுடன் பதில் கூறி முடிப்பார். அது பாராளுமன்றத் தில் பதிவு செய்யப்படும். அத்துடன் நாட்டை வளப்படுத்தும் கடமை முடிந்தது. ஆனால் யதார்த்தத்தில் ஒரு மரம் கூட சம்பந்தப்பட்ட இடத்தில் இருக்காது.

இந்த வேதனையில்தான் ராஜிவ்காந்தி, ஏழைக்கு தரும் ஒரு ரூபாயில் அவனுக்கு 10 காசு தான் போய் சேருகிறது என்று வேதனைப்பட்டார். ஆனாலும் அதாவது போய் சேருகிறதே என்று அரசு திட்டங்களை செயல்படுத்தி தான் வந்தது. அதன் மற்றொரு அம்சமாக அவர்  பஞ்சாயத்து ராஜ் திட்டத்தை அமல்படுத்தினார்.

இதன் எதிர்பார்ப்பு என்னவென்றால், எதுவுமே தெரியாத ஊராட்சித் தலைவர் மத்திய அரசு வழங்கும் உதவியுடன் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அமல்படுத்துவார். அரசு நேரடியாக ஊராட்சித் தலைவரிடம் கொடுத்தால் அவர் சொந்த கிராமத்திற்கு நன்மை செய்வார். தவறு நடந்தால் மக்கள் தைரியமாக தட்டிக் கேட்பார்கள் என்று நினைத்தது.

ஆனால் நடந்தது வேறு, தமிழகத்தில் தற்போது உள்ளாட்சி தேர்தலே நடக்க வில்லை. அப்படியே நடந்தாலும் கடைசி நிலையில் சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளர் முடிவு செய்பவர் தான் தலைவர். அவர் அந்த ஊரில் உள்ள பெரிய குடும்பத்தை தான் தேர்வு செய்வார்.

கூடுதலாக அந்தத் தொகுதி நிச்சயம் ஆதிதிராவிடர் தொகுதி  என்று அறிவிக்கப்பட்டிருந்தால் வேறு வழியில்லாமல் ஊரில் உள்ள பெரிய கும்பத்தின் ஆதரவு கொண்ட ஆதிதிராவிடர் உள்ளட்சித் தலைவர் பதவிக்கு வருவார். பெண் என்றால் கணவருக்கு அல்லது தந்தைக்கு பினாமியாக ஒரு பெண் வந்து அமர்ந்து ஆட்சி செய்வார். ரப்ரி தேவியின் ஆட்சியை போலதான் ஊராட்சி நிலையும் இருக்கும்.

(பகுதி-2 நாளை தொடரும்...)

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close