குடிமக்களாகிய நாம் என்ன செய்யப் போகிறோம்...? நமக்கு கடமைகள் உள்ளதா ? (பகுதி-2)

  பாரதி பித்தன்   | Last Modified : 24 Dec, 2018 04:24 pm
what-we-are-going-to-do-part-2

எத்தனை நாள் தான் புண்ணுக்கு புனுகு போட்டுக் கொண்டே இருக்க முடியும். ஒரு நாள் புரையோடித்தானே போகும். அப்படிதான் இருந்தது நாட்டின் நிலை. ஒரு புறம் விவசாயம் இல்லை. அதை நம்பியே இருந்த தொழிலாளிகளுக்கு வேலை இல்லை. அவர்களை கை தூக்கிவிட வேண்டும் என்றால், ஏதாவது பேரை சொல்லி அவர்களுக்கு நேரடியாக பணத்தை கொடுக்க வேண்டும். மன்னர் ஆட்சி என்றால் கோவிலோ, அரண்மனையோ கட்ட சொல்லி, நாட்டில் உள்ள அனைவருக்கும் வேலை கொடுத்து வறுமையை போக்கலாம்.

இது ஜனநாயக நாடு என்பதால் அவ்வாறு செய்ய முடியாது. இதற்கு வழிகண்டு பிடித்த திட்டம் தான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் (அதாங்க 100 நாள் வேலை திட்டம்). இதன் மூலம் கிராமங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு வேலையின் பெயரால் கூலி கிடைத்தது. ஆனால், வேலையின் பலன் தான் கிடைக்கவில்லை. 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு பெயிலான பெண்கள் வீட்டில் வேலை செய்ய சொல்வார்கள் என்று நினைத்து, அதைத் தவிர்க்க எண்ணி அருகில் உள்ள நகரங்களில் குறைந்த சம்பளத்திற்கு வேலைக்குச் சேர்ந்து , காலையில் தோளில் பையை மாட்டிக் கொண்டு சென்று வருவதைப் போல கிராமத்தில் உள்ளவர்களும் 100 நாள் வேலைக்கு சென்று விட்டு அங்கு திருவிளையாடலில் சிவபெருமான் அணை கட்டியதற்கு இணையாக வேலை செய்து விட்டு வீட்டிற்கு வருவார்கள்.

இதனால் விவசாய வேலைக்கு ஆட்கள் தட்டுபாடு ஏற்பட்டதுதான் மிச்சம். பெரும்பாலும் வேலையே செய்யாமல் உள்ளூர் அரசியல்வாதியும், அந்த வேலைகளுக்குப் பொறுப்பான அதிகாரியும் தின்றது போக மீதமிருக்கும் பணமே கூலியாக வேலை செய்ய வந்தவர்களுக்கு கொடுக்கப்பட்டது. வேலையே செய்யாத நிலையில் கூலிக்காரர்களுக்கு என்ன வருவாய் கிடைத்தால் என்ன? கிடைத்த வரையில் லாபம். இதனால் இருக்கும் விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் வருவது நின்று போனது. நூறு நாள் வேலைத் திட்டத்தின் பலனாக நாட்டில் கிராமப்புறத்தில் உள்ள எவரும் உடலை வருத்தி வேலை செய்யத் தயாராக இல்லாத நிலைதான் கிராமப்புறங்களில் ஏற்பட்டது.

இப்படி போலியான வாழ்க்கையை ஒரு நாடே வாழ்ந்தது என்றால் எப்படி இருக்கும் என்பதை கடந்த கால இந்தியாவை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். தனிப்பட்ட குடும்பம் வருமானம் இல்லாமல் செலவளித்தால் ஒரு மாதத்தில் நடுத்தெருவுக்கு வரும் என்றால் அரசாங்கம் நடுத்தெருவுக்கு வர ஒரு தலைமுறை, அல்லது இரண்டு தலைமுறையாகும். அதுதான் கடந்த காலத்தில் நடந்தது. இந்த நேரத்தில் துாய்மையான கைகளுக்கு சொந்தக்காரர் என்ற இமேஜ் கொண்டு விபி சிங் ஆட்சி கட்டிலில் ஏறினார். அவரின் நடவடிக்கைகள் நாட்டின் பொருதாளரத்தை அதளபாதாள நிலைக்கு தள்ளியது.

அத்தியாசிய தேவையான மண்ணெண்ணை 45 நாட்கள் இருப்பு வைக்கப்பட்டிருக்கும். அது அண்ணன் ஆட்சியில் 7 நாட்களாக குறைந்தது. அதிகாரிகள் அலறிவிட்டனர். ஆனாலும் நிலையை மேம்படுத்தும் திட்டங்கள் இல்லை. தொடர்ந்து வருமானம் இல்லாமல் செலவு மட்டும் தொடர்ந்து கொண்டே இருந்தது. இந்த விளைவு பிரதமர் சந்திரசேகர் ஆட்சி காலத்தில் வெளிப்பட்டது.

அவர் நாட்டின் பொருளாதாரத்தை மீட்க 250 டன் தங்கத்தை இங்கிலாந்து வங்கியிடம் அடகு வைத்து கடன் பெற்று நாட்டினை மீட்டார். அதன் பின்னர் அவர் நாட்டை பொருளாதார சிக்கலில் இருந்து மீட்பதற்குள் அவர் ஆட்சியை அற்ப காரணத்தை முன்னிறுத்தி அப்போதைய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜீவ் கவிழ்த்தார்.

இந்த சூழ்நிலையி்ல பிரதமர் பதவிக்கு வந்த நரசிம்மராவ்,  களஞ்சியமும் காலி, கஜானாவும் காலி என்ற நிலை. எப்பாடு பட்டேனும் நாட்டை மீட்க வேண்டும். மாரடைப்பு ஏற்பட்ட நபருக்கு கடைசிகட்ட வைத்தியமாக, நோயாளியின் நெஞ்சில் டாக்டர் குத்து குத்து என்று குத்துவார். அந்த நிலைதான் நரசிம்மராவுக்கு ஏற்பட்டது. அவர் பொருளாதாரத்தின் மீது விட்ட குத்தாக, நாட்டில் கடைபிடிக்கப்பட்ட பொருளாதார முறையே தவறு என்று மொத்தமாக ஏறக்கட்டினார்.

தாராளமயமாக்கல் கொள்கையால் சிறு தொழில்கள் நசிவை சந்தித்தது. குடிமக்களை சந்தையாக பார்க்கும் மனப்பான்மை உருவானது. உலகவங்கியின் ஓய்வூதியர்களான மன்மோகன் சிங்,  மாண்டேக் சிங் அலுவாலியா ஆகியோர் இந்திய பொருளாதாரத்தை ஆட்சி செய்தனர். இதனால் உள்நாட்டு தொழில்கள் முடங்கினால் கூட வெளியில் இருந்து பணம் கொட்டியதால் உண்மையான பிரச்னைகள் வெளியே தெரியாமல் போனது. ஆனாலும் நாடு அபாய கட்டத்தை தாண்டியதான தோற்றம் ஏற்பட்டது.

அடுத்து வாஜ்பாயி என்ன செய்தார்? .. அடுத்த தொடரில்....

குடிமக்களாகிய நாம் என்ன செய்யப் போகிறோம்...? நமக்கு கடமைகள் உள்ளதா ? (பகுதி-1)

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close