குடிமக்களாகிய நாம் என்ன செய்யப் போகிறோம்...? நமக்கு கடமைகள் உள்ளதா ? (பகுதி-3)

  பாரதி பித்தன்   | Last Modified : 24 Dec, 2018 04:26 pm
what-we-are-going-to-do-part-3

வி.பி.சிங், நரசிம்ம ராவை அடுத்து முக்கிய தலைவராகவும், பிரதமராகவும் பார்க்கப்படும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நாட்டின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில்,  உட்கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு மேம்படுத்தும் நிலைக்கு எடுத்துச் சென்றார். நாடு முழுவதும் தங்க நாற்கர சாலைகள் போடப்பட்டன.

சுந்திரம் பெற்று 50 ஆண்டுகள் கடந்த நிலையில் நாங்கள்தான் தரமான அகலமான தேசிய சாலைகளை கட்டமைத்து நாடு முழுவதும் வாகனப் போக்குவரத்தை விரைவு படுத்தும் விதமாக செயல்பட்டோம் என்று ஒரு அரசு பெருமிதம்கொள்ளும் நிலை இருந்தது என்றால் அது நம் அரசியல் கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் எவ்வளவு கேவலம். அதை விட கேவலம் தற்போது மோடியின் கனவு திட்டமான துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ்தான் நாட்டில் உள்ள பல கோடி குடும்பங்களுக்கு கழிவறை கட்டி கொடுத்துள்ளோம். இப்படி மோசமான ஆட்சியின் கீழ் நாடு கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் இருந்து வந்துள்ளது நாம் பெருமைப்படக்கூடிய விஷயம் அல்ல.

வாஜ்பாய் காலகட்டம் வரை இந்தியாவில் பதவி வகித்து வந்த பிரதமர்கள், பெரும்பாலும் எவருடைய கட்டுப்பாடுமின்றி சுதந்திரமாக செயல்பட்டனர் என்று நாம் கூற முடியும். நாட்டின் நல்லதும், கெட்டதும் நேரடியாக அவரை பாதித்தது. அது காங்கிரஸ் ஆட்சியாக இருந்தாலும் சரி. வாஜ்பாய் தலைமையிலான பாஜ ஆட்சியாக இருந்தாலும் சரி, மொத்த பொறுப்பும் பிரதமரை சார்ந்து இருந்ததால், கிட்டத்தட்ட மனத்துாய்மையுடன் நாட்டிற்கு தேவையானதை செய்தனர். ஆனால் மன்மோகன் சிங் பிரதமரான ஆட்சி காலத்தில் அவர் சோனியாவின் ஏஜென்ட் அவ்வளவு தான்.

எது நடந்தாலும் அது சோனியா குடும்பத்திற்கு நல்லதாக இருக்க வேண்டும். அவ்வாறு தான் மன்மோகன் சிங் ஆட்சி செய்ய முடியும். இதனால் பொருளாதாரம் அதல பாதாளத்திற்குள் வீழ்ந்தது. நிதி அமைச்சராக இருந்த போது செயல்பட்டதை விட, ஓர் பிரதமராக அவர் சுந்திரமாக செயல்படவே  முடியவில்லை என்பதுதான் உண்மை. இதனால் தான் 2ஜி ஊழல், நிலக்கரி ஏல ஊழல், ஹெலிகாப்டர் ஊழல் என்று இந்திய பொருளாதாரத்தை அதளபாதாளத்திற்கு அப்போதைய மத்திய அரசு தள்ளியது. மன்மோகன் சிங் இந்த ஊழல்களில் பங்குதாரர் இல்லை என்றால் கூட அதன் பின்விளைவுக்கு அவர் சொந்தக்காரர்.  இதனால் தான் அவரது ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற குரல் நாடு முழுவதும் எழுந்தது.

இந்த நிலையில் தான் மோடி பிரதமர் மோடி பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்பு விழாவில் அண்டை நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டபோதே இந்த நாடு புதிய பாதையில் நடைபோடப் போகிறது என்று தெரிந்தது. அதற்கு ஏற்ப மோடியும் உலக நாடுகள் அனைத்துக்கும் சுற்றுப்பயணம் செய்தார். ஆனால் எந்த நாட்டிற்கும் அவர் பிச்சை பாத்திரம் ஏந்திச் செல்லவில்லை. இன்று, இந்தியா என்ன சொல்கிறது என உலக நாடுகள் திரும்பி பார்க்கிறது. காஸ் மானியம் நேரடியாக பயனாளிகளுக்கு போய் சேருகிறது. இதனால் நம்ம வீ்ட்டல 3 காஸ் கனெக்ஷன் இருக்கிறது என்று மார்தட்டியவர்கள் முடங்கினர்.

நம்ம விதி, விறகு அடுப்புதான் என்று நொந்து கொண்ட தலைமுறை இன்று காஸ் இணைப்பு பெற்று மகிழ்கிறது. ஏய்யா விலை கூட என்று கேட்டால் சார் பில் போட்டு தருவோம் என்று வழக்கமாக பில் போட்டு பொருட்கள் விற்பனை செய்வது கூட ஒரு கூடுதல் சலுகையாக நினைத்த வியாபாரிகள், சார் பில்லு வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறும் நிலையில் உள்ளனர். அவ்வளவு ஏன்? விசாகார்டு, மாஸ்டர் கார்டு என்று ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் அன்னிய நாட்டு நிறுவனங்களுக்கு தண்டம் அழுத நிலை மாறி இன்று நம்நாட்டிலேயே ரூபே கார்டு உருவாகி உள்ளது. வணிக செயல்முறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. இப்படி இந்த அரசு பல விஷயங்களை முன்னெடுத்து கொண்டு வருகிறது.

இன்னும் ஒரு சில மாதங்களில் தேர்தல் வர இருக்கிறது. தற்போதுள்ள அரசின் பல நடவடிக்கைகள் அடித்தட்டு மக்களை முழுவதும் சென்றடையாமல் இருக்கலாம். அல்லது போதுமான அளவில் சென்றடையவில்லை என்ற  வருத்தம் இருக்கலாம். இந்த அதிருப்திகளின் விளைவாக நம் நாட்டு மக்கள் அடுத்த பிரதமராக ராகுல் அல்லது அவர் தாங்கி பிடிக்கும் ஒரு நபரை பிரதமர் பதவியில் அமர்த்த வாய்ப்புள்ளது. 

அதாவது சமீபத்தில் நடைபெற்று முடிந்த ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் நடைபெற்று முடிந்த தேர்தல்களில் ஆட்சியிலிருந்து பாரதிய ஜனதாவை அப்புறப்படுத்திய அம்மாநில மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்தினார்கள். ஏனெனில் பாரதிய ஜனதா ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடும் அதை மொங்கிக் குடிக்கலாம் என்றிருந்த மக்கள் அவை கிடைக்கவில்லை என்ற காரணத்தால் அக்கட்சியை ஆட்சியிலிருந்து அகற்றி பாஜவுக்கு தண்டனை கொடுத்தார்கள். அதுதான் ஜனநாயகத்தின் மாண்பும் கூட. பிடிக்காத கட்சியை வீட்டிற்கு அனுப்பும் சக்தியை மக்களுக்கு அளித்துள்ளது ஜனநாயகம்.

எப்படியெனில் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்து முடிவுகள் கடந்த 11ஆம் தேதி வெளியாகியது. அடுத்த சில நாட்களில் அசோக் கெலாட் முதல்வராக பதவியேற்றார். கடந்த நான்கு ஆண்டுகளில் அந்த மாநிலத்தில் இல்லாத வகையில், முதல் முறையாக கெலாட் பதவியேற்ற ஒரு வார காலத்திற்குள் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும் 260 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த உர மூட்டை ஒரே நாளில் நானூறு ரூபாய்க்கு விலை உயர்ந்தது. அப்புறம் என்ன, ஏழைகள் வீட்டில் பாலாறும் தேனாறும் ஓடும்.

கள்ளச்சந்தை பெருகுவதால் பொருட்கள் விலை மலிவாக கிடைக்கலாம். தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் துவங்கியுள்ள இந்த அற்புத நிலை, மக்களவை பொதுத்தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் புண்ணியத்தில் நாடெங்கிலும் பரவும். மக்கள் சக்தியே மகேசன் சக்தி. காங்கிரஸ் கட்சியைத் தேர்ந்தெடுத்த பின்னர் மக்களாகிய நாம் பகுத்தறிவாதிகளாக மாறிவிடுவோம்.

அடுத்த 5 ஆண்டுகாலம்  நாட்டில் எவ்விதமான பிரச்னைகளும் ஏற்படாமல் அனைத்தும் சுமூகமாக செயல்படும். கடந்த நான்கரை ஆண்டுகளில் மத்திய அரசை எதிர்த்து கேள்வி கேட்ட எவரும் அவர்கள் வாயைத் திறந்து எதுவும் பேச மாட்டார்கள். ஏனெனில் நாடெங்கிலும் சுபிட்சமான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் பேசுவதற்கு என்ன இருக்கப் போகிறது.

இறுதியாக தேர்தலில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதில் தான் நம் நாட்டின் தலையெழுத்து இருக்கிறது. நாட்டு மக்களாகிய  நமக்கு நம் தலையெழுத்தே தெரியாது என்பது தான் உண்மை.

குடிமக்களாகிய நாம் என்ன செய்யப் போகிறோம்...? நமக்கு கடமைகள் உள்ளதா ? (பகுதி-1)

குடிமக்களாகிய நாம் என்ன செய்யப் போகிறோம்...? நமக்கு கடமைகள் உள்ளதா ? (பகுதி-2)

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close