பெட்ரோல் இன்னமும் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வராதது ஏன்?

  கிரிதரன்   | Last Modified : 27 Dec, 2018 12:30 pm
petrol-and-diesel-still-why-n-t-come-under-gst

"வெகுஜன மக்கள் பயன்படுத்தும் பொருள்கள் உள்பட 99 சதவீத பொருள்கள்,  18% ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரப்படும்" என்று பிரதமர் மோடி அண்மையில் அறிவித்திருந்தார்.

அதன்படியே, டெல்லியில்  சனிக்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், நூற்றுக்கு மேற்பட்ட பொருள்களின்  வரி விகிதங்கள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில், கம்ப்யூட்டர் முதல் சினிமா டிக்கெட் வரையிலான பல்வேறு பொருள்களின் ஜிஎஸ்டியும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

ஆனால் தண்ணீர், பால், மின்சாரம் போன்று இன்றைக்கு அத்தியாவசியமாகிவிட்ட பெட்ரோல், டீசல் மட்டும் இன்னமும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்படாததற்கு காரணம் என்ன? 

மத்திய அரசும், மத்திய நிதியமைச்சகமும், பலமுறை பெட்ரோலிய பொருட்களையும், மதுபானபொருட்களையும் ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டுமென பலமுறை வலியுறுத்தி விட்டது. இதற்கு மாநில அரசுகள் ஒன்றுகூட தயாராக இல்லை என்பதே உண்மை. காரணம் உள்ளங்கை வெள்ளிடையாகத்தான் உள்ளது. அதாவது எந்த மாநில அரசும் அதீதமான வரிவருவாயை இழக்கத்தயாராக இல்லை  என்பதை கசப்பான நடைமுறையாக உள்ளது. 

சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தையடுத்து 100க்கும் மேற்பட்ட பொருட்களை 28 சதவீத வரிவிதிப்பிலிருந்து, 18 அல்லது 12 சதவீத வரிவிதிப்பிற்குள் கொண்டு வருவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார்.

ஆனால் அந்தக் கூட்ட அரங்கின் உள்ளே நடைபெற்றவை உடனடியாக வெளியில் தெரியாமல் போனாலும், அடுத்த நாள் செய்தியாக வெளியாகியது. அதாவது 100க்கும் மேற்பட்ட பொருட்களின் வரிவிகிதத்தை குறைக்கும் மத்திய அரசின் முடிவிற்கு காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசுகளும், கேரள கம்யூனிஸ்ட் அரசும் எதிர்ப்பு தெரிவித்தன என்பதே அது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்தே பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுவதாக மத்திய அரசு கூறி வருகிறது.

ஆனால், தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 54 அமெரிக்க டாலருக்கு ( 3,794 ரூபாய்) விற்பனையாகிறது. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ள அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளதா என்றால் இல்லை.

சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின்போதும், அண்மையில் நடைபெற்று  முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலின்போதும், தேர்தலுக்கு முன்பு தொடர்ந்து இரண்டு, மூன்று வாரங்கள் மட்டும் பெட்ரோல், டீசல் விலை இறங்குமுகமாகவே இருந்து வந்தது.

முன்னதாக, எரிபொருள்களின் விலை 80 ரூபாயை கடந்தபோது பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியில் ஓரிரு ரூபாயை மத்திய அரசு குறைத்தது. ஆனால் மாநில அரசுகள் அதற்குக்கூடத் தயாராக இல்லாத நிலைதான் நம் தேசத்தில் நிலவி வருகிறது.

மாநில அரசுகள் தங்கள் பங்குக்கு ஓரு பெட்ரோல் மீது  26 -39 சதவீதம் வரையும், ஓரு டீசல் மீது 18 -26 வரையும் மதிப்பு கூட்டு வரியை (வாட்) விதித்து வருகின்றன. மேலும் மத்திய அரசு ஓரு லிட்டர் பெட்ரோல் மீது 26 சதவீதமும், டீசல் மீது 22 சதவீதமும் கலால் வரி, புதிய சாலைகள் கட்டமைப்புக்கான செஸ் வரி ஆகியவற்றை வசூலித்து வருகின்றது.

தமிழக அரசு பெட்ரோல் மீது 34 சதவீதமும், டீசல் மீது 25 சதவீதமும் வாட் வரியை வசூலித்து வருகிறது.

இதன் மூலம், பெட்ரோல், டீசல் விலையை அரசியல் நிலவரங்களும், அவற்றின் மீது மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் பல்வேறு வரிகளும்தான் தீர்மானிக்கின்றனவே தவிர, கச்சா எண்ணெய் விலை நிலவரம் இதில் இரண்டாம்பட்சம்தான் என்பது தெளிவாகிறது.

பெட்ரோல், டீசலையும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்து 28% வரி விதித்தால்கூட, தற்போதைய கச்சா எண்ணெய் விலை நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் தற்போதைய சில்லறை விற்பனை விலையைவிட 30 -35 % வரை குறைய வாய்ப்புள்ளது. அதாவது 50 -55 ரூபாய்க்கு விற்பனையாக வாய்ப்புள்ளது.

அரசு கஜானாவுக்கு அட்சய பாத்திரம் போல் உள்ள இந்த வரி வருவாயை இழக்க மத்திய, மாநில அரசுகள் தயாராக இல்லை என்பதுதான் இவை ஜிஎஸ்டி வரம்புக்குள் வராததற்கும், கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், அந்த அளவுக்கு எரிபொருள்களின் விலை குறையாததற்கும் முக்கிய காரணம்.

அரசு இயந்திரம் சீராக இயங்க, வரி வருவாய் அவசியம்தான். ஆனால், அதற்காக பெட்ரோல், டீசல் மீது எவ்வளவுதான் வரி விதிப்பது?

உற்பத்தி குறைவாகவும், தேவை அதிகமாகவும் இருக்கும்பட்சத்தில் ஒரு பொருளின் விலை உயர்வதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், தட்டுப்பாடின்றி கிடைத்துவரும் அத்தியாவசியப் பொருள்களான பெட்ரோல், டீசலின் விலை எந்த விதத்தில் நியாயம் என தெரியவில்லை.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close