பொன்னு பதினெட்டாம்படி ஐயனே இவர்களை நீதான் தண்டிக்க வேண்டும் !

  பாரதி பித்தன்   | Last Modified : 04 Jan, 2019 07:57 pm
sabarimalai-unnithan-death-issue-special-story

சபரிமலை விவகாரத்தில் ஏற்பட்ட போராட்டம் காரணமாக பக்தியின் மேலீட்டால் போராட்டத்தில் கலந்து கொண்ட, அல்லது வேடிக்கை பார்க்க வந்தவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அதுவும் இரு எதிர் எதிர் அமைப்புகள் சந்தித்த போர் களத்தில் காட்டுமிராண்டித்தனமாக கல்லால் அடித்து கொல்லப்பட்டிருக்கிறார். பந்தளத்தில் நடந்த போராட்டத்தில் உயிர் இழந்த சந்திரன் உன்னிதன்(55) கல்லால் அடித்து கொல்லப்பட்டார். கேரள  முதல்வர் பிணராயி விஜயன், உன்னிதன் மாரடைப்பால் இறந்ததாக அறிவித்துள்ளார்.

திருவனந்தபுரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்திருந்த ஃபாத்திமா என்ற பெண்ணுக்கு, அங்கு உடல் நலம் குறைவு ஏற்பட்டு அவரை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காமல் உயிர் இழந்துள்ளார்.

தமிழகத்தைவிட கடவுள் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவில் இந்து அமைப்பினர் கொல்லப்படுவதும், பதிலுக்கு இடதுசாரிகள் கொல்லப்படுவதும் அதிகம்.  ஆனால் இரு அமைப்பினருக்கும் எதிரிகளால் கொல்லப்படுவோம் என்று தெரியும்.. ஆனால் சபரிமலை விவகாரத்தில் இந்த 2 பேர் கொல்லப்பட்டதற்கு யார் பொறுப்பு.

ஜனநாயக நாட்டில் வலிமையற்றவன், அவனது உரிமையை இழந்து விடக்கூடாது என்பதை அடிப்படையாகக் கொண்டே நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. அதனால் தான் ஒரு அஞ்சல் அட்டையில் தன் குறைகளை எழுதி அனுப்பினாலும், உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும் கோர்ட் அதை மனுவாக ஏற்று, தாமாகவே முன்வந்து விசாரணை நடத்தி வருகின்றன. இப்படிப்பட்ட  இந்திய நீதிமன்றமானது இன்று சர்ச்சைகளின் தொடக்க களமாக மாறிவிட்டது. சபரிமலை விவகாரம் வழக்காக வந்த போதே அதை தொடர்ந்தது யார், அவரது நோக்கம் என்ன என்று பார்த்து அதற்கு ஏற்ப வழக்கில் தீர்ப்பு அளித்திருக்க வேண்டும். அதற்கு பதிலாக அதிகாரம் எங்களிடம் இருக்கிறது; நாங்கள் எதை வேண்டுமானாலும் தீர்ப்பு என்று கூறுவோம், அதை அமல்படுத்த வேண்டியது அரசின் கடமை என கட்டாயப்படுத்துவது அராஜகத்தின் உச்சகட்டம். காவிரி நீர் விவகாரம் உட்பட பல விஷயங்களை மாநில அரசுகள் தீர்ப்பை நிறைவேற்ற முன்வராததை பார்த்தும் சுப்ரீம் கோர்ட் மவுனமாக இருக்கும் நிலையில், தன் தீர்ப்பு காரணமாக மக்களிடம் பெரிய கலவரம் வெடித்த நிலையில் கூட மறுசீராய்வு மனுவை உடனடியாக விசாரிக்க முன்வராதது மக்கள் என்ன செய்து விட முடியும் என்ற நீதியரசர்களுக்கு உள்ள அதிகார ஆணவத்தின் வெளிப்பாடு தான் காரணம்.

இதன் விளைவு டில்லி இமாம் பதவிக்கு பெண்களை நியமிக்க வேண்டும். கிறிஸ்தவமதத்தில் பிஷப்களாக பெண்கள் வர வேண்டும். பெண்கள் அனுமதிக்கப்படாமல் உள்ள அனைத்து கோயில்களிலும் அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று அடுக்கடுக்கான மனுக்கள் சுப்ரீம் கோர்ட் கதவைத் தட்ட உள்ளன.

கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு ஜாகோபைட் சிரியன் சர்ச், மலங்காரா ஆர்தோடக்ஸ் சர்ச் விவகாரம் குறித்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்த கால கெடு விதிக்க  கூடாது என்று மனு செய்தது. அதே நிலைப்பாட்டை சபரிமலை விவகாரத்திலும் எடுத்து இருக்க வேண்டும். அதை விடுத்து தங்களின் கம்யூனிச தத்துவத்தில் கடவுள், கலாசாரம், பாரம்பரிய, தேசியம் ஆகிவற்றில் மீது நம்பிக்கை கிடையாது என்ற கொள்கையை நிலைநாட்ட இது தான் சரியான வழி என்று நடவடிக்கை எடுத்தது மிகமிக தவறான செயல். தனக்கு ஓட்டுப் போட்ட மக்களின் உணர்வைக் கூட மதிக்காமல் தானே களம் இறங்கி பெண்களை பர்தா போட்டு கோயிலுக்கு அழைத்து சென்று தரிசனம் செய்ய வைத்தேன் என்று நாடகமாடுவது  கேரள மாநில கம்யூனிச அரசின் காட்டுமிராண்டித்தனமாக கொள்கை வெறியைத்தான் காட்டுகிறது. பெரும்பான்மை ஓட்டுக்களை பெற்றால் மட்டுமே வெற்றி என்ற நிலையில் இருக்கும் போது, பெரும்பான்மை மக்களின் நம்பிக்கைகளை அரசே சிதைக்க முற்படுவதை காட்டிலும் வேதனை ஏதும் இல்லை.

ஆண்டவன் பார்த்துக் கொள்வான் என்று நம்பிக்கை வைத்துள்ள இந்துக்கள், இது போன்ற சம்பவம் நடக்கும் போது அமைதியாக வேண்டுதல்கள் நடத்த வேண்டுமே தவிர்த்து வீதியில் இறங்கி போராடுவது, தீ வைப்பது என்று ரவுடிகளைப் போல செயல்படுவது தவறு. நீ என்ன ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்று எதிரிதான் முடிவு .செய்ய வேண்டும் என்று கூறி தங்கள் போராட்டத்திற்கு இந்து அமைப்புகள் வக்காலத்து வாங்கலாம். ஆனால் ஆன்மீக காரணங்களுக்காக இது போன்ற போராட்டம் நடத்துவது ஏற்க முடியாது.

கோயில் நிர்வாகமும் கூட இரு பெண்கள் சபரிமலையில் அய்யப்பனை பார்த்து விட்டதும், கோயிலை மூடி பரிகார பூஜை செய்தது. இந்த பூஜையானது நடந்த தவறை திருத்தி விடும் என்றால், நாள் தோறும் கோயிலை மூடும் முன்பு பரிகார பூஜை செய்யதால் போதுமே. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்ததும் பொதுவெளியில் பிரசனம் பார்த்து இந்த பிரச்னைக்கு தீர்வு கண்டு இருக்க வேண்டும். இந்துக்கள் எந்த வழிபாட்டிலும் இல்லாத வகையில் சபரிமலையில் மட்டும் தான் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்துக் காத்து ரட்சித்து காத்து, ஒம் ஸ்ரீ ஸ்த்யமான பொன்னு பதினெட்டாம்படி மேல் வாழும் வில்லாளி வீரன் வீரமணிகண்டன், காசி ராமேஸ்வரம் பாண்டி மலையாளம் அடக்கி ஆளும் ஓம் ஸ்ரீஹரிஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் சரணம் சரணம் ஐயப்பா என்று பாபவத்திற்கு மன்னிப்பு கோஷம் உள்ளது. அப்படிப்பட்ட ஐயப்பன் இந்த பாவங்களையும் மன்னிப்பார் என்ற போது 2 பேரை கொல்லப்படுதற்கு இட்டுச் சென்ற இந்த போராட்டம் தேவைதானா?

இது போன்ற போராட்டம் தமிழகத்தில் நடந்து இருந்தால், குறிப்பாக கலைஞர் ஆட்சியில் அரங்கேறி இருந்தால் , பலர் 356ம் விதியின் கீழ் மாநில அரசை கலைக்க வேண்டும் என்று கூச்சல் எழுப்பி இருப்பார்கள்.இந்த 356வதுபிரிவு ஏதோ தமிழகத்திற்கு மட்டும் உருவானது போல மத்திய அரசு நினைக்கிறது. இதே பிரிவின் கீழ் கவர்னரிடம் அறிக்கையை வாங்கி கேரள அரசை மத்திய அரசு கலைத்து இருக்க வேண்டும். அல்லது அதற்கான நடவடிக்கைகளையாவது தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு மௌன சாமியாக முடங்கி கிடக்கிறது.

மொத்தமாகக் கூற வேண்டும் என்றால் இந்த இரட்டை கொலைக்கு உச்சநீதிமன்றம், மாநில அரசு, போராட்டம் நடத்தியவர்கள், மத்திய அரசு,கோயில் நிர்வாகம் என அனைவரும் தான் காரணம். அந்த ஐய்யப்பன் தான் இந்த கொலைக்கு தண்டனை தர வேண்டும். தருவாரா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close