நிறைவேறுமா அண்ணல் அம்பேத்கரின் கனவு...?

  பாரதி பித்தன்   | Last Modified : 09 Jan, 2019 10:47 pm

article-about-reservation

இந்தியாவில், ஜாதி அடிப்படையில் பிரிவினை இருந்தது. இந்து மதத்தில், ஜாதிய ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் கூட, இதில் இருந்து மதம் மாறிய கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் கூட அவற்றை விட்டுவிடத் தயாராக இல்லை. 

இன்றைக்கும் கூட, அந்தோணியாரை வழிபாடு தெய்வமாக கொண்ட பலர், தாழ்த்தப்பட்டவர்களாக இருக்கிறாகள். இஸ்லாமியர்களின் பழக்கம் வெளிப்படையாக தெரியாமல், அவர்கள் பார்த்துக் கொண்டதால் இது பற்றிய விமர்சனங்கள் எழுவதில்லை.

முள்ளை முள்ளால் எடுப்பது போல, ஜாதிய ரீதியில் தாழ்த்தப்பட்டவர்களாக அறியப்பட்டவர்களை மேம்படுத்த, அந்த அடிப்படையிலேயே இடஒதுக்கீடு தேவைப்பட்டது. 

அதனால் தான், அரசியல் சட்டம் இயற்றிய அம்பேத்கர், ஜாதிய இட ஒதுக்கீட்டிற்கும் வழிவகை செய்தார். அதே நேரத்தில், இடஒதுக்கீட்டிற்கு, 10 ஆண்டுகள் மட்டுமே இலக்கு நிர்ணயம் செய்து இருந்தார். 

அதாவது சுந்திர இந்தியாவில், தாழ்த்தப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்களை மேம்படுத்த, அவர் நிர்ணயம் செய்த காலக் கெடு, 10 ஆண்டுகள். அதாவது 2 தேர்தல். அப்போது, தனித்தொகுதி மூலம் தேர்வு பெற்ற தாழ்த்தப்பட்டவர்களின் மக்கள் பிரதிநிதிகள், தங்கள் சமூக மேம்பாட்டிற்கு உதவி செய்வார்கள்.

 அதைப் பயன்படுத்தி, அவர்கள் மேம்பட்டு விட்டால், இடஒதுக்கீடு தேவைப்படாது என்பதால் தான், அம்பேத்கர் இடஒதுக்கீட்டிற்கு இலக்கு நிர்ணம் செய்தார்.

ஆனால், நம் அரசியல்வாதிகள், இட ஒதுக்கீட்டை ஓட்டு வங்கியாக பார்க்கத் தொடங்கியதன் விளைவு, சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளை அதிகமாக்கியது. ஒவ்வொரு மாநிலத்தை ஆண்ட கட்சியும், தங்களுக்கு வேண்டிய ஜாதிகளை எல்லாம் சலுகைக்குள் அடக்கியது; இதில் உள் ஒதுக்கீடு வேறு.

 

இவ்வாறு, தமிழகத்தில் ஆட்சியாளர்களால் வேண்டப்பட்டவர்கள் என்று கருதப்பட்ட ஜாதிகளை இட ஒதுக்கீட்டில் சேர்த்தது மிகவும் அதிகம். வடமாநிலங்களில், எஸ்.சி., - எஸ்.டி., மற்றவர்கள் என்று, இருந்த நேரத்தில், தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர்,பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மலைவாழ்மக்கள், உயர் ஜாதியினர் என்று ஏகப்பட்ட பிரிவுகள். அதிலும் இஸ்லாமியர்கள், அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு வேறு.

இது போன்ற நிலைப்பாட்டின் காரணமாக, ஒருவரின் ஜாதி பெயர், ‛ஆர்’ விகுதியில் முடியும் படி சொன்னால்,  அவர் உயர்ஜாதி. அதுவே, ‛அன்’ விகுதியில் முடிந்தால் அவர் பிற்படுத்தப்பட்டர்.  இதனால் பலர், ஆணவங்களில் எவ்வளவு கீழ் ஜாதியாக இருக்க முடியுமோ, அவ்வளவு கீழாகவும், சமூதாயத்தில் எவ்வளவு உயர் ஜாதியாக இருக்க முடியுமோ அவ்வளவு மேல் ஜாதியாகவும் இருப்பதையே விரும்புகின்றனர். கருணாநிதி ஆட்சியில் இவ்வாறு இடஒதுக்கீட்டீல் நுழைந்தவர்கள் எண்ணிக்கை மிக மிக அதிகம்.

எம்.ஜி.ஆர்., ஆட்சியில், ஒவ்வொரு ஜாதியினரும், தங்கள் மக்கள் தொகை அடிப்படையில், இட ஒதுக்கீடு கோரினர். அவர் அனைத்து ஜாதி சங்க தலைவர்களையும் அழைத்து, அவர்கள் சமுதாயத்தவர்கள் எண்ணிக்கையை கோரினார். அவர்கள் கொடுத்த பட்டியலில் இருந்தவர்கள் எண்ணிக்கையை கூட்டினால், மாநில மக்கள் தொகையை விட பல மடங்கு அதிகமாக இருந்தது. 
உடனே, எம்.ஜி.ஆர்., மக்கள் தொகையே இவ்வளவு தான், அவர்கள் கொடுத்த பட்டியலில் அதை விட அதிகமாக மக்கள் இருக்கிறார்கள். அளவுக்கு அதிகமா குறிப்பிடப்பட்டுள்ளவர்களை நீக்கி விட்டு வாருங்கள். இடஒதுக்கீடு பற்றி பிறகு பேசலாம் என்று வந்திருந்த ஜாதி சங்கத் தலைவர்களை அனுப்பிவைத்தார்.

 


 சமூக நீதி என்ற பெயரில் கண்களை கட்டிக் கொண்டு, சமூத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்தவர்களை, எம்.ஜி.ஆர்., கண்டு கொள்ளலாமல் விட வில்லை. அதே நேரத்தில், அவர்களுக்கும், 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்தார். ஆனால் அது நிறைவேறாமலே போய்விட்டது.

ஆனால், கலைஞருக்கு அது போன்ற எண்ணம் கிடையாது. ஓட்டு விழுமா, அந்த ஜாதியைச் சேர்ந்தவர்களை பிற்பட்டவர்கள் என்று அறிவித்துவிடு என்பார். அதனால், தமிழகத்தில் மற்ற மாநிலங்களை விட, இட ஒதுக்கீடு, 69 சதவீதமாக உயர்ந்தது. மேலும், இடஒதுக்கீடு பெற்றவர்கள்,பெறாதவர்கள் இடையே இடைவெளி அதிகரித்துக் கொண்டே போனது.

இந்நிலையில், பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களை முன்னேற்றும் முயற்சியில்,  காங்கிரஸ், பா.ஜ.க., அரசுகள் முயன்று பார்த்து, அதன் பலன் தோல்வியிலேயே முடிந்தது.

1991ம் ஆண்டு அப்போதைய பிரதமர் நரசிம்மராவ், ஓ.பி.சி., இடஒதுக்கீட்டில் சில மாற்றங்கள் ஏற்படுத்தி, பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு, 10 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய முயன்றார். அதற்கு சுப்ரீம் கோர்ட் தடைவிதித்துவிட்டது.

2003ம் ஆண்டில் பிரதமர் வாஜ்பாய் மீண்டும்  பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் முயற்சியை மேற்கொண்டார். இதற்காக, அத்வானி தலைமையில் குழு அமைத்தார். அந்த குழு பரிந்துரைகளை நிறைவேற்றும் முன்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

அவரைத் தொடர்ந்து, பதவிக்கு வந்த பிரதமர் மன்மோகன் சிங், தன் பங்கிற்கு ஒரு கமிஷனை அமைத்தார். அதுவும் தன் பரிந்துரைகளைத் கொடுத்தது. ஆனால் அதன் மீது எதுவும் நடவடிக்கை இல்லை.

 

 

இந்நிலையில் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியின் அரசு மேற்கொண்ட முயற்சியின் பலனாக அனைத்து பிரிவையும் சேர்ந்த ஏழைகளும், 10 சதவீத இட ஒதுக்கீட்டை பெறும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. 

இதன் மூலம் இந்தியாவின் பெரும்பாலான மக்கள் இடஒதுக்கீடு பெற்றுவிடுவார்கள். ஆனால் இது  முறையா என்பது தான் கேள்வியே.

இடஒதுக்கீடு என்பது, குறிப்பிட்டவர்களை மேல் ஏற்றிவிடத்தான். அது எவ்வளவு நாள் ஆகும். இந்த இடஒதுக்கீட்டிற்கு முடிவுரை எழுத முடியுமா? கட்டாயம் முடியும். யாரால் முடியும் என்றால், அதுவும் கூட தற்போதைய பிரதமரால் முடியும். இது ஏதோ பா.ஜ.க.,விற்கு ஜால்ரா அடிப்பதற்கு இதை எழுதவில்லை.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ‛சார் வீட்டில திடீரென காஸ் சிலிண்டர் தீர்ந்து விட்டது’ என்று அலுவலகத்தில் சொன்னால், சிலர் புழுபூச்சி மாதிரி பார்ப்பார்கள். உங்க வீட்டில ஒரு சிலிண்டர் தானா? எங்க வீட்டில 3 கனெக்ஷன் இருக்கு என்று மார்தட்டிக் கொண்டு பலர் இருப்பார்கள். 

அனைத்திற்கும் மானியம் வேறு. மாதம் ஒரு லட்சம் சம்பாதித்தால் கூட, மானியம் பெற்றனர் மக்கள். ஆனால், நாட்டில் இவ்வளவு கோடி பேர் விறகு அடுப்பில் சமைக்கிறார்கள். அவர்களுக்கு இலவசமாக கேஸ் இணைப்பு வழங்குகிறேன். மானியத்தை விட்டுக் கொடுங்கள் என்று மோடி கோரிக்கைவிட்டதும், நாட்டில் கோடிக்கணக்காணவர்கள் மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர்.

 அப்போதும் அரசியல்வாதிகள் ஊழலை நிறுத்தவில்லை. லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் அதை விட்டு விட வில்லை. அவ்வளவு ஏன் ரேஷன் கடையில் கூட சரியான அளவில் பொருட்கள் கிடைக்கவில்லை. ஆனாலும், மோடி கேட்டுக் கொண்டதற்கு இணங்க மக்கள் தானாகவே முன்வந்து மானியத்தை விட்டுக் கொடுத்து வருகிறார்கள்.

அந்தப்படியே  இட ஒதுக்கீடு தேவையில்லை,எங்களால் பொது கோட்டாவில் போட்டியிட முடியும் என்பவர்கள் இட ஒதுக்கீடு வேண்டாம் என்று குறிப்பிட்ட காலத்திற்கு விட்டுக் கொடுங்கள் என்று மோடி கேட்டால், இந்த நாட்டில் கால் சதவீதம் மக்களாவது கேட்டுக் கொள்வார்கள் என்பது உண்மை.

 அவ்வாறு அவர்கள் விட்டுக் கொடுப்பது, அதே ஜாதியில் அடித்தட்டில் உள்ள மக்கள் முன்னேறுவதற்கு வாய்பாக அமையும். இன்றைக்கு இட ஒதுக்கீட்டின் பலனை அதிகபட்சமாக அனுபவிப்பவர்களைப் பார்த்தால், சரியாக இரண்டு அல்லது 3 தலைமுறையாக அரசு வேலை பார்க்கும் குடும்பத்தினர் தான் அதிகம்.

 இவர்கள் விட்டுக் கொடுத்தால் போதும்.  கலைஞர் இட ஒதுக்கீட்டில் மாற்றம் கொண்டு வந்து அருந்தியினர் சமுதாயத்திற்கு உள் ஒதுக்கீடு வழங்கியது, அவர்கள் எஸ்.சி., பட்டியலில் இருந்தால் கூட முன்னேற்றம் அடைய வில்லை என்பதால் தான். 

அதே போல தான் இஸ்லாமியர்களுக்கும் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. 

இப்படி ஜாதிகளை தேடி கண்டுபிடித்து, உள்ஒதுக்கீடு வழங்கி, அவர்களை முன்னேற்றுவதை விட, மக்களே இடஒதுக்கீட்டை விட்டுக் கொடுக்கும் போது, விரைவில் இந்தியாவில் இட ஒதுக்கீடே தேவை இல்லை என்ற நிலை உருவாகிவிடும். 

அப்படி பட்ட நிலையைத்தான், அம்பேத்கரும் உருவாக்க நினைத்தார். தற்போதைய சூழலில் காஸ் மானியத்தை விட்டுக் கொடுத்து,  ஏழை தாய்மார்களுக்கும், காஸ் இணைப்பு கிடைக்க செய்தது போல், வசதி வாய்ப்பு படைத்த மக்கள், தங்கள் இடஒதுக்கீட்டை விட்டுத்தர முன் வந்தால், நாடு சுபிட்சம் அடையும். 

கடைக் கோடி இந்தியன் கூட, சமூதாயத்தில் மேம்பாடு அடைய வேண்டும் என்பது தான் இந்த நாட்டை, நாட்டு மக்களை நேசிப்பவர்களின் எண்ணம். அது இந்த நாட்டின் மக்கள் கையில் தான் உள்ளது. அவர்கள் தங்கள் கடமையை விரைவில் நிறைவேற்றினால் அம்பேத்கர் கனவு விரைவில் நனவாகிவிடும்.

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.