'வினை விதைத்தவன் வினை அறுத்தே ஆக வேண்டும் குமாரசாமி'

  விசேஷா   | Last Modified : 14 Jan, 2019 03:32 pm

article-on-kumarasamy

‛ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்; வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்ற பழமொழிகள்,  கர்நாடக மாநில அரசியலில், தற்போது மிகச் சரியாக பொருந்துகின்றன.

கர்நாடகாவில், 2017 மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில், அந்த மாநில வாக்காளர்கள், காங்., - பா.ஜ., ஆகிய இரு கட்சிகளுக்கும், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை அளிக்கவில்லை. 

மாெத்தமுள்ள, 225 தொகுதிகளில், ஒரு நியமன எம்.எல்.ஏ., தவிர, 224 சட்டசபை தொகுதிகளில் ஓட்டுப் பதிவு நடந்தது. இதில், 104 இடங்களில் வெற்றி பெற்று, பா.ஜ., தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்., 80 இடங்களிலும், குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதாளம், 37இடங்களிலும் வென்றன. சுயேட்சை, பிற கட்சிகள், மூன்று இடங்களில் வெற்றி பெற்றன. 

இதையடுத்து, தனிப் பெரும் கட்சியான பா.ஜ.,வை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். முதல்வர் பொறுப்பேற்ற எடியூரப்பா, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், உடனடியாக பதவி விலகினார்.

80 இடங்களில் வென்ற காங்கிரஸ் ஆட்சி அமைக்க, குமாரசாமி உதவியிருக்கலாம். ஆனால், முதல்வர் பதவி மீதான ஆசையால், தன்னை முதல்வராக்கினால் மட்டுமே, பா.ஜ., பக்கம் செல்லாமல் இருப்பேன் என, அவர் நிபந்தனை விதித்தார். 

தங்கள் தலைமையில் ஆட்சி அமையாவிட்டாலும் சரி, பா.ஜ.,வை ஆட்சி அமைக்க விட்டு விடக்கூடாது என எண்ணிய காங்கிரஸ், குமாரசாமி தலைமையில் கூட்டணி ஆட்சிக்கு சம்மதம் தெரிவித்தது. 


வெறும், 37 எம்.எல்.ஏ.,க்களை வைத்திருந்த குமாரசாமி, காங்கிரஸ் தயவுடன், மாநில முதல்வரானார். ஆனாலும், காங்., மூத்த தலைவர்கள் பலருக்கு, இது பிடிக்கவில்லை. எனினும், பா.ஜ.,வை ஆட்சி அமைக்க விடாமல் இருக்க, இதை தவிர வேறு வழி இல்லாததால், இந்த முடிவை ஏற்றுக்கொண்டனர்.


கூட்டணி ஆட்சி துவக்கம் முதலே, இரு தரப்பினருக்கும் முள் மேல் விழுந்த சேலையாகத்தான் இருந்தது வந்தது. இந்நிலையில், சமீபத்தில் நடந்த, ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. 

 

இது, அந்த கட்சித் தலைவர்களிடையே புதிய உத்வேகத்தை தந்துள்ளது. இதனால், முதல்வர் பதவியிலிருந்து குமாரசாமியை விலகும் படி, அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர், குடைச்சல் கொடுப்பதாக தெரிகிறது. 

அவர் பதவி விலகினால், காங்கிரசை சேர்ந்த ஒருவரை முதல்வராக்கிவிட்டு, குமாரசாமிக்கு துணை முதல்வர் பதவி தந்து, கூட்டணி ஆட்சியை தொடரும் முயற்சியிலும் காங்., மாநில தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

 

இந்த மிரட்டலுக்கு குமாரசாமி பணியாவிட்டால், ஆட்சியை கலைத்துவிட்டு, விரைவில் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுடன், மாநில சட்டசபை தேர்தலை சந்திக்க காங்., தயாராக இருப்பதாகவும், கூறப்படுகிறது. 

நாடு முழுவதும் தற்போது, ராகுல் அலை வீச துவங்கியுள்ளதாகவும், மத்திய பா.ஜ., அரசுக்கு எதிரான மனநிலையில் உள்ளோர், காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களிப்பர் எனவும் அவர்கள் கணித்துள்ளனர். 

 

இதன் ஒரு பகுதியாக, வரும் லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில், குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு மிகக்குறைந்த இடங்களே ஒதுக்க, காங்., தலைமை திட்டமிட்டுள்ளது. 

 

இதனால் கொதிப்படைந்துள்ள குமாரசாமி, 'எங்கள் கட்சியை, மூன்றாம் தர குடிமக்கள் போல் பார்க்க வேண்டாம். எங்களுக்கு உரிய கவுரவத்துடன், சீட் வழங்க வேண்டும்' என, நேற்று பகிரங்கமாக கருத்துப் பதிவை வெளியிட்டார்

எனவே, தற்போதைய சூழலில், குமாரசாமி பதவி விலகாவிட்டாலும், அவரை கழற்றிவிட, காங்., தலைவர்கள் தயாராகிவிட்டதாக தெரிகிறது. 

 

இது ஒருபுறம் இருக்க, காங்கிரஸ் தன்னை கழற்றிவிட்டால், 104 எம்.எல்.ஏ.,க்கள் வைத்துள்ள, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து, முதல்வர் பதவியை தக்க வைத்துக்கொள்ளவும், குமாரசாமி திட்டமிட்டுள்ளார்.

ஆனால், குமாரசாமியை சேர்க்காமலேயே, மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றுவதற்கான வேலைகளை, மாநில பா.ஜ., தலைவர்கள் ஏற்கனவே துவங்கிவிட்டனர். இதற்கு, 'ஆபரேஷன் தாமரை' எனவும் பெயரிட்டுள்ளனர். 

 

அதன் படி, மாநில அமைச்சரவையில் இடம் கிடைக்காததால், அதிருப்தியில் உள்ள, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், 12 பேரை பா.ஜ., பக்கம் இழுக்கும் முயற்சியும் தீவிரமாக நடப்பதாக கூறப்படுகிறது.

அப்படி அவர்களின் திட்டம் கைகூடினால், குமாரசாமியின் நிலை அந்தோ பரிதாபம் தான்.

 

வெறும், 37 எம்.எல்.ஏ.,க்களை வைத்துக் கொண்டு, இரு தேசிய கட்சிகளுக்கும், 'தண்ணி' காட்டிய குமாரசாமியின் முதல்வர் பதவிக்கு வேட்டு வைக்க, இரு கட்சிகளுமே தயாராகிவிட்டன.


‛ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்’ என்ற பழமொழியின் படி, கர்நாடக மக்கள், இரு தேசிய கட்சிகளுக்கும் பெரும்பான்மை அளிக்காமல், இரண்டு பட்டு நின்றனர். 

அதன் பலனாய், 37 இடங்களில் வென்ற குமாரசாமி, கூத்தாடி கொண்டாடுவது போல், முதல்வர் பதவியை இரு தேசிய கட்சி தலைவர்களுக்கும் கிடைக்காமல் பறித்துக்கொண்டார்.

 

குறுக்கு வழியில் முதல்வர் பதவிக்கு வந்த குமாரசாமி, தான் வினை விதைக்கிறோம் என்பது தெரியாமல் அதை செய்தார். தற்போது, அவர் விதைத்த வினையை அவரே அறுவடை செய்ய வேண்டி கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.