நாம் அடைந்த பெருமையை எப்போது உணரப்போகிறோம்?

  பாரதி பித்தன்   | Last Modified : 14 Jan, 2019 06:28 pm
when-we-are-going-to-feel-the-glory-which-we-have-achieved

பாராளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. இது, பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு, இந்திய மக்கள் என்ன மார்க் போடப்போகிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் தேர்தல்.

பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி தெளிவாக தெரிகிறார். ஆனால், எதிர்கட்சிகள் நிலை என்ன? தேர்தலில் நிற்க வேண்டும் என தெரிகிறது; ஆனால் யாரை பிரதமர் வேட்பாளர் என்று சொல்ல தான் தெரியவில்லை என்று புலம்புகிறார்கள்.

நம்ம ஸ்டாலின் சாருக்கு அந்த கவலையே இல்லை, காங்கிரஸ் தலைவர்  ராகுல் தான் பிரதமர் என்று அறிவித்து விட்டார். ஆனால், மன்மோகன் சிங் இல்லாவிட்டால் அடுத்த சாய்ஸ் நான் தான் என்று எதிர்பார்க்கும் சிதம்பரமோ, ராகுல் பிரதமர் வேட்பாளர் இல்லை என்று ஆப்பு வைக்கிறார். அப்படி என்றால் யாரு என்று அவரை யாரும் கேட்கவும் இல்லை. அவராக சொல்லவும் இல்லை.

ஆட்சியில் தான் வெளியில் இருந்து ஆதரவு என்று கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக் கூட்டணிக்கு, வெளியில் இருந்து ஆதரவு தருகிறார்கள் மாயாவதியும், அகிலேஷ் யாதவும். கூட்டணிக்குள் உள்ளே விட்டால், 10 சீட்டாவது தர வேண்டும். காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுகளும் விழாமல் போய்விடும். இப்போ அம்மாவிற்கும், புள்ளைக்கும்  என, 2 சீட்டு கொடுத்தால் போதும்.

இன்னொருபுறம் மாயாவதி தான் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லவிட்டால், அவர் உள்ளூர் அரசியலை திரும்பி கூட பார்க்கமாட்டார். நமக்கு தான் நாடு முழுவதும் யானை சிலைகளை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

மேற்கு வங்க மாநிலத்தில், மம்தாவை எதிர்த்து யார் இருக்கிறார்கள் என்ற நிலைதான் உள்ளது.  அதனால் அவர் கனவிலும், அவ்வப்போது பிரதமர் நாற்காலி வந்து போகிறது.

தமிழகத்தில் இருந்து விரலை நீட்டி பிரதமரை உருவாக்கும் கருணாநிதி இப்போது இல்லை. இந்த நிலையில் நம்ம நாயுடு காருக்கு, அந்த ஆசை வந்து விட்டது. தெலுங்கானாவில் மண்ணைக் கவ்வினாலும், நான் விரல்நீட்டியவர் தான் பிரதமர் என மார்தட்டிக் கொள்ளும் ஆசையில் உள்ளார்.

அவரும் காங்கிரஸ் வேட்பாளரை பிரதமராக ஏற்க முடியாது ஒரே போடாக போட்டு விட்டார். சுமார், 250 இடங்களில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை, பிரதமராக ஏற்க, சொந்த மாநிலத்தில், 25 இடங்களில் போட்டியிடப் போகும் நாயுடுகாரு மறுக்கிறார்.

இதை விதி என்பதா அல்லது வேறு ஏதும் என்பதா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
இவர்கள் தொல்லைதான் இப்படி என்றால், தேடி வந்து முதல்வர் பதவியை கொடுத்த கடவுள்,  பிரதமர் பதவியை கொடுக்கமாட்டாரா என்ற நப்பாசையில் இருப்பதாக குமாரசாமியும் அறிக்கைவிடுகிறார்.

தனக்கு முதல்வர் பதவி வாங்கி தந்த தந்தை தேவகவுடா கூட,  அவர் மனதில் இருக்கலாம். அப்படி பழம் நழுவி பாலில் விழந்து, அது நழுவி குமாரசாமி வாயில் விழுந்தால், நன்றிக் கடனாக தேவகவுடாவை பிரதமராக மாற்ற கூட முயற்சி செய்யலாம்.

எதிர்கட்சிதான் இந்த விளையாட்டு என்று இல்லாமல், கிரவுண்டிற்கு வெளியே பந்து வந்தால், தன் பங்கிற்கு ஒரு உதை உதைக்கும் பார்வையாளனைப் போலவே, சிவசேனா கட்சி, மன்மோகன் சிங்கை பிரதமராக்கலாம் என்று கூறுகிறது.

இதன் மூலம், மோடியை மிரட்டுவதாக எண்ணி நம் வயிற்றில் புளியை கரைக்கிறது. சிதம்பரம் சொல்வது போல, அவரின், 2 வது, 5 ஆண்டுகால ஆட்சியில், எத்தனை ஊழல் குற்றச்சாட்டு எழுந்தன. அதை மீண்டும் தொடர்வார் என்றால் நாடு தாங்காது.

ஆட்சியில் இல்லாத போதே, உ.பி.,யில் காங்கிரஸ் கட்சியை கழட்டிவிடும் தைரியம் மாயாவதி, அகிலேஷ் ஆகியோருக்கு இருக்கும் போது, ஒடிசா முதல்வராக இருக்கும் நவீன் பட்நாயக் மட்டும் துாக்கி பிடிக்கவா போகிறார். காங்கிரஸ் கட்சியை துாக்கி பிடிப்பார் என்று அரசியல் அரிச்சுவடியை அறியாதவன் கூட எதிர்பார்க்க மாட்டான். அவ்வளவு ஏன், நாங்கள் வெற்றி பெறுவது தான் முக்கியம் என்று நினைக்க வேண்டிய கம்யூனிட்டுகள், இப்போ பிரதமர் யார் என்பது முக்கியம் இல்லை என்கிறார்கள்.

இப்போது தங்கள் கட்சியை சேர்ந்த யாரைவாது சொல்லி அவருக்கு எதிராக ஓட்டு விழுந்து விட்டால் என்ன செய்வது என்கிறார், நம்ம ஊர் பாலகிருஷ்ணன். எவ்வளவு நாளைக்கு தான் அவர்கள் தேசிய கட்சி என்கிற அந்தஸ்தை இழப்பார்கள் பாவம்.

இந்துத்வா ஆட்சி இது என்று அனைவரும் கூச்சல் போட்டதன் விளைவு, வேறு விதமாக வெடித்து கலவரத்தை ஏற்படுத்திவிட்டது. இந்து ஆண்டுவிட்டார்கள், அடுத்து முஸ்லீம் தான் ஆள வேண்டும் என்கிறார், பரூக் அப்துல்லா.

இன்னும் துருவி துருவி விசாரித்தால், நீங்கள் பாதிதான் தெரிந்து கொண்டீர்கள், நான் பரூக் அப்துல்லா என்ற முஸ்லீம் தான் ஆள வேண்டும் என்றேன் என்று கூட அவர் சொல்லாம்.

மோடிக்கு எதிராக ஒன்று கூடியிருக்கும் அரசியல் கட்சிகள், பிரதமர் பதவி என்ற எருமையை, தண்ணீரில் போட்டுக் கொண்டு, நம்முடை ஓட்டை விலை பேசுகிறார்கள்.

மாேடி வேண்டாம் என நினைத்து, எதிர்க்கட்சிகளில் யாருக்காவது நாம் ஓட்டுப் போட்டு, அவர்களும் ஜெயித்துவிட்டால், அதன் பின் தான் தெரியும், அடுத்த பிரதமர் யார் என்ற போட்டிக்கு அவர்கள் போடும் சண்டை எப்படிப்பட்டது என்று. அப்படியே ஒரு பிரதமரை தேர்வு செய்தாலும், அந்த ஆட்சி, அதிகபட்சம், 2 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்காது.

சமீபத்தில் துபாய் நாட்டில் ராகுலிடம் கேள்வி கேட்ட 14வயது சிறுமி, மோடியின் ஆட்சிக்கு பிறகுதான் எங்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைத்துள்ளது  என்று பெருமிதத்துடன் கூறினார். மோடியின் உழைப்பு இந்தியாவை விட்டு வெளியில் இருப்பவர்கள் உணர்ந்துவிட்டார்கள். நாம் உணர்ந்து இருக்கிறோமா என்பதை தேர்தலில் தான் கூற வேண்டும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close