காங்கிரஸுக்கு பல்லக்கு தூக்க விரும்பாத மாநிலக் கட்சிகள்!

  கிரிதரன்   | Last Modified : 20 Jan, 2019 07:26 am
regional-parities-don-t-like-congress-lead-in-mp-election

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைத்து, பாஜகவுக்கு எதிராக "மகா கூட்டணி" அமைக்க, காங்கிரஸ் கடந்த வாரம் வரை தலைகீழாக நின்று தண்ணீர் குடித்து வந்தது.

காங்கிரசின் இக்கடின பிரயத்தனத்துக்கான காரணம் மிகவும் எளிது. பாஜகவுக்கும், தமக்கும் நேரடி போட்டியில்லாத, அதேசமயம் பிராந்திய கட்சிகளின் ஆதிக்கம் அதிகமுள்ள மாநிலங்களில், அக்கட்சிகளை மொத்தமாக வளைத்து போட்டு கொண்டுவிட்டால், மக்களவைத் தேர்தலில் வாக்கு வங்கியின் அடிப்படையில் பாஜகவை எளிதாக வீழ்த்திவிடலாம் என்பதுதான் காங்கிரசின் தேர்தல் கணக்கு.

முக்கியமாக, மக்களவையில் பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான எம்.பி. சீட்டுகளில், கிட்டதட்ட மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளை தன் வசம் வைத்துள்ள பெரிய மாநிலமாக உத்தரப் பிரதேசம் திகழ்கிறது.

அங்கு பிரதான மாநிலக் கட்சிகளாக விளங்கும் சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ்வாதியும் இடம்பெறும் மகாகூட்டணியை அமைத்துவிட்டால், நாடாளுமன்றத் தேர்தலில் தனது வெற்றி இலக்கை எளிதாக அடைந்துவிடலாம் என காங்கிரஸ் மனப்பால் குடித்துக் கொண்டிருந்தது.

ஆனால் சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல், தங்களுக்குள் கூட்டணி அமைத்துவிட்டன.

கேரளாவில் ஆளுங்கட்சியாகவும், மேற்குவங்கத்தின் இன்னமும் சொல்லிக் கொள்ளும்படியாக வாக்கு வங்கியை வைத்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தேசிய அளவில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

டெல்லியில் ஆளும் கட்சியாகவும், பஞ்சாபில் எதிர்க்கட்சியாகவும், ஹரியாணாவில் கொஞ்சம் வாக்கு வங்கியையும் வைத்துள்ள ஆம் ஆத்மியும் காங்கிரஸுடனான கூட்டணிக்கு "நோ" சொல்லிவிட்டது.

தெலங்கானா மாநில சட்டப்பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில், காங்கிரஸ் -தெலுங்கு தேசம் கூட்டணி படுதோல்வியடைந்தது. 

"முதல் கோணல் முற்றிலும் கோணல்" என்பது போல, இத்தோல்வியை கவனத்தில் கொண்டும், மாயாவதியும், அகிலேஷ் யாதவும் காங்கிரஸை கழற்றிவிட்டதை கருத்தில்கொண்டும், எம்.பி. தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கும் முடிவை கைவிடும்படி, தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்கள் சந்திரபாபு நாயுடுவுக்கு பலமாக அட்வைஸ் கொடுத்துள்ளனர்.

இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி, தமது தலைமையில் ஏறக்குறைய அனைத்து மாநிலக் கட்சிகளின் தலைவர்களையும் ஒரே மேடையில் அமரவைத்து பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தி காட்டியுள்ளார்.

கருணாநிதி சிலைத் திறப்பு விழாவில், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக கூட்டணிக் கட்சிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று, திமுக தலைவர் ஸ்டாலின் எந்த நேரத்தில் சொன்னாரோ தெரியவில்லை! மாநிலக் கட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக காங்கிரசை கைகழுவி கொண்டே வருகின்றன.

மாநிலக் கட்சிகளின் இந்த முடிவு, பாஜகவுக்கு சாதகமாக அமைந்து மோடி மீண்டும் பிரதமராகவா? அரை நூற்றாண்டுக்கும் மேலாக நாட்டை ஆண்ட  பழைமையான கட்சியான காங்கிரஸ், மாநிலக் கட்சிகளின்  புறக்கணிப்பை சவாலாக ஏற்று அதில் வெற்றி பெறுமா?  

பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி மத்தியில் ஆட்சியமைக்கும் அதிசயம் நிகழுமா? என்ற கேள்விகளுக்கெல்லாம் இன்னும் சில மாதங்களில் விடை கிடைத்துவிடும்.

ஆனால், இந்த முறை தேர்தல் திருவிழாவில் காங்கிரஸுக்கு பல்லக்கு தூக்க மாநிலக் கட்சிகள் தயாராக இல்லை என்பது மட்டும் தெள்ளத் தெளிவாகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close