ஏழை மாணவர்களின் கல்வி கண் திறந்த சிவகுமார சுவாமிகள்

  Newstm Desk   | Last Modified : 23 Jan, 2019 05:35 pm
article-on-the-great-shivakumara-swamy

மஹாத்மா காந்தியின் அஹிம்சையையும்,  அன்னை தெரசாவின் அன்பையும் பின்பற்றி,  ஜாதி, மதம், இனம், மொழிகளை கடந்து, எண்ணற்ற ஏழை குழந்தைகளின் வயிற்றுப் பசியையும், அவர்களின் அறிவு பசியையும் போக்கி, கர்நாடக மக்களால், ‛நடமாடும் கடவுள்’ என அழைக்கப்பட்டவர், சிவகுமார சுவாமிகள்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள, இன்றைய ராமநகரா மாவட்டம், வீரபுரா கிராமத்தில்,  1 ஏப்., 1097ல்,  கங்கம்மா - ஹொன்னே கவுடா தம்பதிக்கு, 13 வது குழந்தையாக பிறந்தவர், சிவன்னா. 

ஹிந்து மதத்தின், லிங்காயத் வழிாபாட்டு முறையை பின்பற்றும், வீரசைவர் சமூகத்தில் பிறந்த இவர், துமக்கூரு மாவட்டத்தில் உள்ள, ஆங்கிலேயர் பள்ளிக் கூடத்தில், ஆரம்பக் கல்வி கற்றார்.

எட்டு வயதில் தாயை இழந்த சிவன்னா, அதன் பின், துமக்கூருவில் உள்ள சித்தகங்கா மடத்திலேயே தங்கி, மேல் படிப்பை தொடர்ந்தார். 1926ல் மெட்ரிக் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 

அதன் பின்னரும், கல்வி கற்பதில் தீராத தாகம் இருந்ததால், சென்ட்ரல் காலேஜ் ஆப் பெங்களூருவில், இயற்பியல் மற்றும் கணிதத்தை விருப்ப பாடமாக தேர்வு செய்து, பட்டப்படிப்பில் சேர்ந்தார்.

அப்போது, சித்தகங்கா மடத்தின் தலைமை மடாதிபதியாக இருந்த, சிவயோகி சுவாமிகள், 1930ல் சிவன்னாவை அழைத்து, மடத்தின் அடுத்த பீடாதிபதியாக பொறுப்பேற்கும் படி கூறினார். அதன் படி, சிவன்னாவுக்கு, சிவகுமார சுவாமிகள் என பெயர் சூட்டினார். 

சிவயோகி சுவாமிகள், 1941ல் பூத உடல் துறந்ததை அடுத்து, அந்த ஆண்டு ஜன., 11ல்,  சிவகுமார சுவாமிகள்,
சித்தகங்கா மடத்தின் தலைமை மடாதிபதியானார். 

கல்வி மீது தனக்கு இருந்த தீராத தாகத்தால், மடாதிபதி ஆன பிறகும் கூட, அறிவியல், விஞ்ஞானம், மெய்ஞான நுால்களை கற்று தேர்ந்தார். கன்னடம், சமஸ்கிருதம், ஆங்கிலம் என மும்மொழிகளிலும் பாண்டித்யம் பெற்றவராக திகழ்ந்தார்.


கல்வி, உணவு கிடைக்காமல் தவிக்கும் பிள்ளைகளின் நலனுக்காக, கர்நாடகத்தின் பல பகுதிகளிலும், 132 கல்விச் சாலைகளை நிறுவி, அதன் மூலம், பல்லாயிரக்கணக்கான குழந்தைகளுக்கு, இலவச கல்வி வழங்கினார். 

சித்தகங்கா மடத்தின் பெயரில் அறக்கட்டளை துவங்கிய சிவகுமார சுவாமிகள், அறக்கட்டளையின் பெயரிலான கல்வி நிறுவனங்களில், எல்.கே.ஜி., முதல் பொறியியல் பட்ட படிப்பு வரை, அங்கு படிக்கும் அனைவருக்கும் இலவச கல்வி வழங்கினார். 

தொழிற்கல்வி நிலையங்களையும் நடத்தி, பலருக்கும் சுய தொழில் செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தந்தார். 

உண்டு, உறைவிட கல்வி நிறுவனங்களை நடத்தி, அங்கு வரும் பார்வையாளர்களுக்கும் இலவசமாக உணவு வழங்கினார். சித்தகங்கா மடத்திற்கு தினமும் வரும் பல்லாயிர கணக்கானோருக்கும், இலவசமாகவே உணவு வழங்க ஏற்பாடு செய்தார்.

ஏழை குழந்தைகளின் மருத்துவ தேவை பூர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுத்தார். அவரின் சேவைகளை பாராட்டி, 1965ல் கர்நாடகா பல்கலைக்கழகம், சிவகுமார சுவாமிகளுக்கு, டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது. 

2007ம் ஆண்டு அவரின், 100வது வயதில், கர்நாடக அரசு, ‛கர்நாடக ரத்னா’ விருது வழங்கியது.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள், சிவகுமார சுவாமிகளின் சேவையை பற்றி கேள்விப்பட்டு, சித்தகங்கா மடத்திற்கே சென்று, அவரை நேரில் சந்தித்து பாராட்டினார். சிவகுமார சுவாமிகளைப் போன்ற சேவை மனப்பான்மை உடைய பல மடதாதிபதிகள் இந்த நாட்டிற்கு தேவை என்றும் கூறினார். 

2015ல்,சிவகுமார சுவாமிகளுக்கு, மத்திய அரசின், மூன்றவாது சிறந்த சிவிலியன் விருதான, ‛பத்ம பூஷண்’ வழங்கப்பட்டது.

நாட்டின் மிக உயரிய விருதான, ‛பாரத் ரத்னா’ வழங்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது.

'இவ்வளவு பெரிய மடத்தை கட்டி காப்பாற்றி, அதன் பெயரில் அறக்கட்டளை நடத்தி, பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி அறிவு பெறவும், ஆயிரக்கணக்கான சிறுவர்கள் குருகுல கல்வி பெறவும் காரணமாக இருந்த இவர்; இதுவரை, கோடிக்கணக்கானோரின் பசியாற்றிய இவர், எந்த  அங்கீகாரத்தையும் எதிர்பார்த்து இவற்றை செய்யவில்லை' என, சித்தகங்கா மடத்தை பின்பற்றும் பக்தர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த புகழுக்கும், பெருமைக்கும் உரித்தானவராக இருந்ததாலேயே, அவரின் இறுதிக் காலம் வரை, கர்நாடக மக்களால், ‛நடமாடும் கடவுள்’ என்றே அழைக்கப்பட்டார். 

நாட்டின் மிக வயது முதிர்ந்த நபராக இருந்த சிவகுமார சுவாமிகள், 111 ஆண்டுகள், 295 நாட்கள் உடலில் உயிர் சுமந்து, 2019,  ஜன., 21 ல்,  இந்த பூவுலகிலிருந்து பூத உடல் துறந்தார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close