பக்குவம் போதவில்லையா காங்., தலைவர் ராகுலுக்கு?

  பாரதி பித்தன்   | Last Modified : 31 Jan, 2019 05:01 pm
article-about-congress-president-rahul


கவுன்சிலர் முதல் கவர்னர் வரை, வார்டு கிளை உறுப்பினர் முதல், கட்சித் தலைவர் வரை நேரில் சந்தித்து பேட்டி எடுக்கும் வாய்ப்பு பெற்றவர்கள் நிருபர்கள், பத்திரிக்கையாளர்கள். 

இவர்களை கண்டாலே அரசியல்வாதிகள் பலரும்  மவுனசாமிகளாக மாறிவிடுவார்கள். அவர்கள் நம்பிக்கைபெற, செல்போனை எடுத்து, அவர் பார்க்க ஆப் செய்து டேபிளில் வைக்க வேண்டும். 

குறிப்புகள் எழுதாமல் அவர் பேசுவதை கவனிக்க வேண்டும். இந்த சூழ்நிலையில் தான், அவர் எதிரில் இருப்பவரை நண்பராக கருதுவார். அவர் கூறும் எதுவும் உப்பு சப்பு இல்லாததாக இருக்கும்.

 தலைவர்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாத நண்பர்கள் கிடைப்பது அரிது. அதற்கு வடிகாலாக சிலர் பத்திரிக்கையாளர்களை கருதுவார்கள். அவர்கள், இது ‛ஆப் த ரெக்காட்’ என்று கூறி பல விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். 

அதில்தான் பேட்டிக்கான பல விஷயங்கள் வந்து விழும். ஆனாலும், அவர் கூறிய ‛ஆப் த ரெக்காட்’ வார்த்தை அவற்றை வெளிப்படுத்த இயலாமல் கைகளை கட்டிப்போட்டு விடும். இது தான் நல்ல பத்திரிகையாளனுக்கு அடையாளம். 

எந்த பத்திரிகையில் எழுதினாலும் வாசகர் முழுமையாக நம்பி விடமாட்டார். பத்திரிக்கை, அதில் எழுதி இருப்பவர் பற்றி பல விஷயங்களை தானாகவே சிந்தித்து, அதனால் தான் இப்படி எழுதி இருக்கிறார் என்று ஒரு முடிவுக்கு வந்துவிடுவார். 

பத்திரிக்கையாளர்களே, ‛ஆப் த ரெக்காட்’ வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுக்கும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் செய்த காரியம், அவர் பக்குவப்படவில்லை என்பதையே காட்டுகிறது. 

அப்பல்லோ ஆஸ்பிட்டலில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது, இந்தியாவில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களும் சென்று பார்த்தார்கள். ஆனால் யாரும், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார் என்று கூறவில்லை. 

அந்த இடத்தில், அரசியல் பேசவில்லை. அவர்கள், நீண்ட கால அரசியலில் இருப்பவர்கள் என்பதே அதற்கு காரணம். துரைமுருகன் கூட, ஜெயலலிதா இறந்த பின்னரே, அவர் மருத்துவசிகிச்சை குறித்து விமர்சனம் செய்தார். 

ஆனால், சமீபத்தில் காங்., தலைவர் ராகுல், உடல் நிலை சரியில்லாத கோவா முதல்வர் மனோகர் பரீக்கரை போய் பார்த்தார். இந்த பண்பாடு, அவர் மீது நாட்டு மக்களுக்கு மிகப் பெரிய மரியாதையை தோற்று வித்தது. 

பா.ஜ.,வை சேர்ந்த ஒரு மாநில முதல்வரை, காங்., தலைவர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தது, அரசியல் நாகரீகத்தை தாண்டி, தனிப்பட்ட மனிதனாகவும் ராகுல் மீது நன்மதிப்பை ஏற்படுத்தியது.

ஆனால், அதன் பின் அவர் அளித்த பேட்டி, அவர் மீதான நன்மதிப்பையும், நம்பிக்கையையும் குழி தோண்டி புதைத்துவிட்டது. 

உடல் நிலை சரியில்லாத பரீக்கரை சென்று பார்த்துவிட்டு வந்த ராகுல், அவர் ரபேல் ஊழல் பற்றி தன்னிடம் கூறியதாகவும், அதில் மோடி தொடர்பு இருப்பதாக கூறியதாகவும் பேட்டிளித்தது, ராகுல் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை உடைத்துவிட்டது. 

வயதில் சிறியவராக இருந்தாலும், பாரம்பரியமிக்க, நாட்டை இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்த தேசிய கட்சியின் தலைவர் என் மரியாதையை, இந்நாட்டு மக்கள் ராகுலுக்கு தர தவறியதில்லை.

ஆனால், பரீக்கருடன் சந்தித்த, 5 நிமிட சந்திப்பில், ரபேல் விவகாரம் குறித்து, அதுவும் பா.ஜ.,வை சேர்ந்த, முன்னாள் ராணுவ அமைச்சர், இந்நாள் கோவா முதல்வர், பா.ஜ.,வை சேர்ந்த பிரதமர் மீதே, காங்., தலைவரிடம் குற்றம்சாட்டியதாக கூறியதை, சின்னக் குழந்தை கூட நம்பாது. 

ராகுலின் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து, ‛இவ்வளவு கீழ்தரமான அரசியல் உங்களுக்கு ஏன் ராகுல்?’ என கேள்வி எழுப்பி, பரீக்கரே கடிதமும் எழுதிவிட்டார்.

‛குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற பழமொழிக்கு ஏற்ப, பரீக்கரின் கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதியுள்ளார் ராகுல். அதில், ‛பரீக்கரை சமீபத்தில் சந்தித்த போது, அவர் ரபேல் குறித்து பேசவில்லை. ஆனால், இதற்கு முன் எப்போதோ ஒரு முறை, தன் அமைச்சரவை சகாக்களிடம் இதுகுறித்து பேசியுள்ளார். அதற்கான ஆதாரம் உள்ளது’ என விளக்கம் அளித்துள்ளார். 

உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையிலும், என் இறுதி மூச்சு உள்ள வரை, கோவா மக்களுக்கான சேவை ஆற்றுவேன் என, மூக்கில் குழாய் சொருகியபடி, அந்த மாநில சட்டசபையில் பேசினார் முதல்வர் பரீக்கர். 

அவரின் சேவை மனப்பான்மை எங்கே... உடல் நலம் விசாரிக்க சென்ற இடத்தில், அவர் தன் சொந்த கட்சிக்கு எதிராகவே பேசினார் என, பொய்யை அள்ளி வீசிய ராகுலின் தரம் தான் எங்கே?

பரீக்கர் மறுப்பு தெரிவித்ததால், ராகுல் உடனே தன் கருத்துக்கு பல்டி அடித்தார். ஒரு வேளை உடல் நலம் பாதிக்கப்பட்ட அயற்சியில் பரீக்கர் இதை கவனிக்காமல் விட்டிருந்தால், அதுவே உண்மை என்றாகியிருக்காதா?

சரி போகட்டும், ராகுலுக்கு என்ன, மிகப் பெரிய புலனாய்வு அமைப்பின் செய்தி சேகரிப்பாளர் என நினைப்பா? அவர் கூறுவதையெல்லாம் மக்கள் நம்பும் அளவுக்கு அவர்கள் என்ன முட்டாள்களா?

சராசரி பத்திரிக்கையாளரின் செய்தியை கூட அலசி, ஆராய்ந்து அன்னப்பறவை போல், நியூஸ் வேறு, வியூஸ் வேறு என்ற வகையில் பிரித்தறியும் பொதுமக்கள், ராகுலின் பேச்சை அப்படியே நம்பிவிடுவார்கள் என அவர் எப்படி கணக்கு போட்டார். 

திரு ராகுல் அவர்களே...நாட்டின் பாரம்பரிய மிக்க, மிகப் பெரிய கட்சியின் தேசிய தலைவர் நீங்கள் என்பது கொஞ்சமாவது நினைவிருக்கட்டும்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close