லேடிக்கு கிடைத்த ஆதரவு மோடிக்கும் கிடைக்குமா? 

  பாரதி பித்தன்   | Last Modified : 02 Feb, 2019 03:00 pm
support-to-modi-special-story

இன்னும் சில மாதங்களில் தேர்தலை சந்திக்க உள்ள மத்திய அரசு, இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யுமா? அல்லது இடைக்கால நிதி ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யுமா என்ற கேள்வியை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார் பியூஷ் கோயல்.

அவரின் பட்ஜெட் உரையை கேட்ட, பா.ஜ.க., அல்லாத அரசியல் தலைவர்கள், இது தேர்தலுக்கான பட்ஜெட் என்பதையே சுட்டிக் காட்டி உள்ளனர். இந்த கருத்தைக் கூட அவர்கள் நெஞ்சை நிமிர்த்தி கூற முடியாமல், இது தேர்தல் கால பட்ஜெட்  என்று கருத்து சொல்லி இருக்கிறார்கள்.

ஏனென்றால், மக்கள் நலன் கருதி, மத்திய அரசு அறிவித்துள்ள திட்டங்களை எதிர்த்து பேசினால், அது தங்கள் ஓட்டு வங்கியில் மேலும் சரிவை ஏற்படுத்திவிடும் என எதிர்க்கட்சியினர் அஞ்சுகின்றனர்.

இது, பா.ஜ.க.,விற்கு ஆதரவாகவும், எங்களுக்கு எதிராகவும் தேர்தல் முடிவை வெளிப்படுத்தும் என்று தான் அவர்கள் கூறியிருக்கிறார்கள். இது போன்ற திட்டங்களை நாங்கள் போட மாட்டோம் என்பது தான் அவர்கள் சொல்ல வந்தது.

அது சரி,  வருமான வரி விலக்கு உச்சவரம்பை ஏன் இப்போது உயர்த்தி உள்ளீர்கள்? ஆட்சியின் துவக்கத்திலேயே செய்திருக்க வேண்டாமா என்பது பலரின் கேள்வி.

கடந்த 4. 5 ஆண்டுகாலத்தில், நிதித்துறையை ஏமாற்றியவர்கள் மீது பாய்ந்த நடவடிக்கை, வரி செலுத்துவோரின் எண்ணிக்கை உயர்வு போன்ற நடவடிக்கைகளை பார்த்தவர்கள், இந்த கேள்வியை கேட்க மாட்டார்கள்.

அவர்கள், இப்போதாவது அறிவித்தார்களே, அடுத்த ஆட்சி வந்தால், 2.5 லட்சம், 3 லட்சம் என்று அவர்கள் ஆட்சி முடியும் போதுதான் உச்சவரம்பு ,5 லட்சத்தை எட்டும் என்றுதான் கருதுவார்கள்.

அதனால் தான், இந்த அறிவிப்பின் போது ராகுல் தலையில் கைவைத்துக் கொண்டார். நடுத்தர மக்கள் மற்றும் ஏழை விவசாயிகளின் நலன் கருதி, இந்த பட்ஜெட்டில் சில அம்சங்கள் இடம் பெற்றுள்ளதால், இந்த பட்ஜெட், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது, ராகுலுக்கு வேதனையை ஏற்படுத்தாமல் என்ன செய்யும்.

களஞ்சியமும் காலி; கஜானாவும் காலி’ என்று கலைஞர் கூறியது போலவும், ‛தி.மு.க., ஆட்சி இவ்வளவு கடன் வைத்துவிட்டு சென்று விட்டது’ என்று ஜெயலலிதா புலம்பியது போலதான், அவர்கள் பட்ஜெட் இருந்தது. இதே நிலையில் தான், மற்ற மாநிலங்களின் பட்ஜெட்டும் இருந்தன. எனவே, மத்திய அரசின் பட்ஜெட் குறித்து, எதிர்க்கட்சிகளின் விமர்சனம் சம்பரதாயமானது தான்.

தமிழகத்தில், எதிர்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த், அ.தி.மு.க.,வின் வெற்றி குறித்து விமர்சனம் செய்த போது, முதல்வர் ஜெயலலிதா, பஸ் கட்டண உயர்வுக்கு பின், பால் விலை உயர்வுக்கு பின், இடைத்தேர்தலில் தனித்து நின்று தான் வெற்றி பெற்றோம்’ என்று சிங்கம் போல கர்ஜித்தார்.

ஜெ., தலைமையிலான அரசு, தொடர்ந்து இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வருமா என்ற கேள்வி எழுந்த போதும் கூட, பல அதிரடி திட்டங்களை அறிவித்து, அதன் மூலம் மக்கள் நம்பிக்கையை பெற்றார் ஜெயலலிதா. அவரை நம்பி மக்கள் ஓட்டளிக்க காரணம், அவர் ஏற்கனவே அளித்திருந்த வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றியிருந்தார்.

அதனால் தான், தமிழக அரசியல் வரலாற்றில், எம்.ஜி.ஆருக்குப் பின், தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சியை பிடித்த முதல்வர் என்ற பெருமை, ஜெயலலிதாவுக்கு கிடைத்தது.

அது போல, லோக்சபா தேர்தலுக்குப் பின், மாேடியும் கர்ஜிக்க வேண்டும் என்றால், அதற்கு மக்கள் ஆதரவு மிக முக்கியம். தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில், அந்த அளவு ஆதரவு மோடிக்கு கிடைக்குமா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஆக... வெறும் ஓட்டு வங்கியை மட்டும் மனதில் வைத்து, இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. ஆனால், தேர்தலை மையப்படுத்தி இல்லை என்றும் இதை கூறிவிடமுடியாது. அரசியல் களம் என்று வந்துவிட்டால், சாணக்கியனாகவும் செயல்பட வேண்டியது அவசியம் தானே.

எப்படி பார்த்தாலும், பா.ஜ., அல்லாத வேறொரு அரசு மத்தியில் ஆட்சி அமைத்தால், நாட்டு மக்களுக்கு இவ்வளவு பெரிய அருமையான அறிவிப்பு வெளியாக வாய்ப்பே இல்லை.

தேர்தல் சமயத்தில் ஒரே ஒருமுறை பணம் கொடுத்துவிட்டு, மக்களின் விலை மதிப்பற்ற ஓட்டை விலை பேசும் அரசியல் கட்சிகளுக்கு நடுவே, நாட்டின் ஏழை, நடுத்தர மக்கள், வாழ் நாள் முழுவதும் நிம்மதி அடையும் வகையிலான, முறையான, மறைமுகமற்ற சலுகைகளை வெளியிட்டிருக்கும், பா.ஜ., அரசு எவ்வளவோ மேல்’ என்று, பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close