தீதி.. .பீதி... வீதி...

  கிரிதரன்   | Last Modified : 06 Feb, 2019 03:44 pm

mamtha-banerjee-protest-against-central-government

ஈழத்தில் இறுதிக்கட்ட போரை நிறுத்துவதாகக் கூறி, மெரீனாவில் சில மணி நேரம் உண்ணாவிரதம் இருந்த முதல்வர் கருணாநிதியை இந்த நாடு கண்டிருக்கிறது.

காவிரி நதிநீர்  பிரச்னைக்காக உண்ணாவிரதம் இருந்த முதல்வர் ஜெயலலிதாவையும் இந்த தேசம் கண்டிருக்கிறது.

ஆனால்,  ஒரு காவல் துறை உயரதிகாரிக்காக ஓர் மாநிலத்தின் முதல்வரே தர்ணாவில் ஈடுபட்டதை அனேகமாக  தற்போதுதான் இந்திய திருநாடு பார்க்கிறது. 

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், கொல்கத்தா மாநகர காவல் ஆணையரான ராஜீவ் குமாரை விசாரிக்க, சிபிஐ அவரது இல்லத்துக்கு சென்றது.

இதனை கண்டித்து, மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஞாயிற்றுக்கிழமை இரவு, கொல்கத்தா நகரின் பரபரப்பான மெட்ரோ ஸ்டேஷன் பகுதியில் தர்ணாவில் இறங்கி ஒட்டுமொத்த தேசத்தையும் வியப்பில் ஆழ்த்தினார்.

ஒரு காவல் துறை அதிகாரிக்காக ஒரு மாநிலத்தின் முதல்வரே நாள் கணக்கில் தர்ணாவில்  இறங்குவாரா? என்ற அதிர்ச்சிகரமான கேள்வியிலிருந்து நாட்டு மக்கள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை.

ராஜீவ் குமார் வீட்டிற்கு சென்று, மேற்கு வங்க மாநில போலீஸாரால் சிறைப்பிடிக்கப்பட்ட சிபிஐ அதிகாரிகளை, துணை ராணுவப் படையை கொண்டுதான் மத்திய அரசு மீட்க வேண்டியதானது.

இருப்பினும், யாரும் எதிர்பார்க்காத விதமாக மம்தா பானர்ஜி தர்ணாவில் இறங்கியதால், ராஜீவ் குமார் விஷயத்தில் மேற்கொண்டு மத்திய அரசால் அதிரடியாக செயல்பட முடியாமல் போனது.

அதன் தொடர்ச்சியாக, தமது தர்ணா போராட்டத்தை கலைக்க மாநில ஆளுநர் மூலம் மத்திய அரசு முயற்சித்தால், அதன் மூலம் அரசியல் ரீதியாக தமக்கு ஆதாயம் கிடைக்கும் என மம்தா திட்டமிட்டிருந்ததாகவே தெரிகிறது. அந்த சந்தர்ப்பத்துக்காக அவர் காத்திருந்ததாகவே படுகிறது. 

ஆனால், சிபிஐ மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட்டு, மறுநாளே இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றது. 

இதன் பயனாக, சாரதா நிதி நிறுவன மோசடியில் தங்களுக்கு  ஆண்டுக்கணக்கில் ஒத்துழைப்பு அளிக்காமல் போக்கு காட்டி வந்த, கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு, சிபிஐ விசாரணைக்கு கட்டாயம் ஆஜராக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநில போலீஸார், சிபிஐயுடன் மேற்கொண்ட போட்டியின் இறுதியில் நீதியும், நேர்மையும்தான் வென்றுள்ளது என மத்திய பாஜக அரசும் சொல்லிக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், சிபிஐயின் அதிரடி விசாரணையால்  பீதியடைந்து தீதி (மம்தா பானர்ஜி) வீதிக்கு வந்து தர்ணா நடத்தியதன் மூலம், இந்த நிகழ்வு பாஜகவுக்கு சாதகமாக அமைந்துவிட்டது.

தான் இந்த விஷயத்தை சட்டரீதியாக அணுகாமல், போராட்ட முறையில் எதிர்கொண்டால் அதன் பின்விளைவுகள் எவ்வாறு இருக்கும் என கணிக்காமலா தீதி வீதியில் இறங்கியிருப்பார்?

மேற்கு வங்கத்தில் கிழட்டு சிங்கமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரும்ப எழாதப்படி தேர்தலில் அவர்களுக்கு சம்மட்டி அடி கொடுத்தவருக்கு, இந்த சாணக்கியத்தனம் கூடவா இல்லாமல் போயிருக்கும்?

இருந்தும் காவல் ஆணையர் ஒருவருக்காக, மம்தா வீதியில் இறங்கி மூன்று நாள்கள் போராடியதன் மர்மம் என்ன? சிபிஐயின் விசாரணையில் இந்த மர்ம முடிச்சுகள் விரைவில் அவிழ்க்கப்படும்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close