சாரதா சிட்பண்டு... சி.பி.ஐ., ரெய்டும்; மம்தாவின் நாடகமும்! 

  பாரதி பித்தன்   | Last Modified : 08 Feb, 2019 06:11 pm
saradha-chit-fund-cbi-raid-mamta-special-story

வாங்கும் சம்பளம், வயிற்றுக்கும் வாய்க்கும்  போதாதவனுக்கு தான், வாழ்வில் சேமிப்பின் முக்கியத்துவம் தெரியும். அவர்கள் வீட்டில் தான் ,திருப்பதி கோயிலுக்கு செல்வது தொடங்கி, திருவிழாவிற்கு தலைக்கட்டு கொடுப்பது வரை, விதவிதமான உண்டியல்கள் இருக்கும்.

அவர்கள் தான், குறைந்த முதலீட்டில் அதிகம் லாபம் எங்கே கிடைக்கிறது என்று தேடி அலைவார்கள். லஞ்சம் வாங்குபனுக்கோ, சிறுசேமிப்புகள் தேவையே இல்லை. அவன் காட்டில் தினமும் மழை தான்.

உழைத்து சம்பாதிப்பவன் தான், வாயை கட்டி, வயிற்றை கட்டி, குருவி சேர்ப்பது போல் சேர்த்த பணத்தை, தங்கள் கைவசம் வைத்திருந்தால், வேறு வழிகளில் செவழிந்துவிடுமோ எண்ணி, போஸ்ட் ஆபீஸ், வங்கிகள் என நம்பகமத் தன்மை வாய்ந்த இடங்களில் சேமித்து வைக்கின்றனர்.

ஆனால் அரசாங்கமோ, சாதாரண பொதுமக்களின் சேமிப்பில் மண்ணை வாரி போடும் வகையில், ஆண்டு தாேறும் சேமிப்பு தொகைகளுக்கான வட்டி விகிதத்தை குறைத்துக் கொண்டே வருகிறது.
ஒரு காலத்தில் அஞ்சல சேமிப்பில் போடப்படும் தொகை, 5.5 ஆண்டுகளில் இரட்டிப்பாகும் என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது, பணம் இரட்டிப்பாக, 9 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டியுள்ளது.

இதனால் சிலர், சற்று வட்டி கூடுதலாக கிடைத்தால், அது எதிர்கால தேவையை பூர்த்தி செய்ய உதவுமே என்ற நப்பாசையில், தங்கள் கடந்த கால, நிகழ்கால மொத்த உழைப்பின் பலனையும், வருங்கால கனவுகள் நினைவாக, தனியார் நிதி நிறுவனங்களில்  வரவு வைக்கின்றனர். இதனால் தான், அதிக வட்டி என்ற ஆசையை காட்டி, மக்களின் பணத்தை கொள்ளையடிக்க, எத்தனையோ போலி நிதி நிறுவனங்கள் முளைத்த வண்ணம் உள்ளன.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு புற்றீசல் போல சீட்டு நிறுவனங்கள் தோன்றின. அவர்கள் கொடுப்பதாக சொன்ன வட்டியை யாராலும் தர முடியாது. வங்கி அதிகாரி ஒருவர், இது குறித்து கூறுகையில்,‛‛ சார் உங்களுக்கு, 22 சதவீதம் வட்டி வழங்க அந்த நிறுவனம், 300 சதவீதம் லாபம் ஈடுபட்ட வேண்டும். அவ்வாறு எந்த தொழில் இருக்கிறது சொல்லுங்கள்’’ என்றார்.

அதே போல, கணிசமான தொகையை சுருட்டிக் கொண்டு பல நிறுவனங்கள் ஓடின. அதில் ஒருவர் கூறும் போது, ‛‛எனக்கு முன்பு சீட்டு பணம் வசூலித்து, மோசடி செய்வதவர்களுக்கு என்ன தண்டனை என்று விபரம் தேடிப்பார்த்தேன். பெரிய தண்டனை யாருக்கும் கிடைக்கவில்லை. அதனால் நான், 2 லட்சத்துக்கு சீட்டு போட்டு, அந்த தொகையை கொண்டு இந்த நிறுவனத்தை தொடங்கினேன்’’ என்றார்.

மற்றொருவரோ, ‛‛பணம் கட்டியவர்கள் எல்லாம் ஒரே நாளில் சென்று பணத்தை கேளுங்கள். பொதுத்துறை வங்கி கூட திவால் ஆகிவிடும். அந்த நிலைதான் எனக்கும். யாரையும் நான் ஏமாற்ற வில்லை. பணம் நிச்சயம் கிடைக்கும் கவலைப்படவேண்டாம்’’ என்றார்.

தமிழகத்தில் நடந்த முறைகேட்டில், சம்பந்தப்பட்ட நிறுவன முதலாளி உட்பட சிலர்  கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் ஏமாந்தவர்களுக்காக, காவல்துறை தனித்தனியே குழு அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தியது. இதுவரை விசாரணை நடந்து வருகிறது. பணம் போட்டவர்களின் பாடு திண்டாட்டமாகத் தான் உள்ளது.

இங்கு நிலை இப்படி இருக்க,  மேற்கு வங்கத்தில் சாரதா சிட்பண்ட் நிறுவனத்தில் நடந்ததைப் போன்ற கொடுமை வேறெங்கும் நடக்கவில்லை.

மேற்கு வங்கம் பெரும்பாலும், விவசாயிகள், தொழிலாளர்கள் நிறைந்த மாநிலம். அவர்களில் பலர், வங்கிகள் பற்றி அறியாதவர்கள்.
பணத்தை பத்திரமாக சேமிக்கும் வழி அவர்களுக்கு தெரியாது.  அஞ்சல் நிலையங்களிலும், 1980–1990ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், வட்டி வெகுவாக குறைந்தது. இந்த காலகட்டத்தில் தான், சங்கிலி சீட்டு திட்டங்கள் களம் இறங்கின.

உருளை கிழங்கு பத்திரம், தேக்குமரத்திட்டம், காய்கறிக்காரன் திட்டம் என்று தமிழகத்திற்கு இணையாகவே, மேற்கு வங்கத்திலும், பல கற்பனைத் திட்டங்களின் பெயர்களில், பணம் வசூலிக்கப்பட்டது.

இது போல கிழக்கு மாநிலங்களில் மட்டும், 10 டிர்லியன் ரூபாய் வசூலிக்கப்பட்டது என்றால், இதன் தாக்கம் எப்படி இருந்தது என அறிந்து கொள்ள முடியும்.

2006ம் ஆண்டு  வரை பல சிறு சிறு நிறுவனங்களாக இருந்தவை அனைத்தும், சாரதா குழுமமாக இணைக்கப்பட்டது. அப்போது, நக்சல் இயக்கத்தில் இருந்தவர் சங்கர் ஆதித்ய சென்.

அதன் பின்னர், 1990ம் ஆண்டு தன் பெயரை சுதிப்தோ சென், என்று மாற்றிக் கொண்டு, முகத்தையும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு, சாரதா குழுமத்தை தொடங்கினார்.

பண சுழற்சி முறைதான் இவரின் நிலைப்பாடு. இந்த நிறுவனத்தில் நீங்கள் குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும். அத்துடன் 5 பேரை சேர்க்க வேண்டும். அவர்கள் அதே தொகை முதலீடு செய்யும் போது, முதலில் பணம் செலுத்தியவருக்கு, 25 முதல் 40 சதவீதம் வரை கமிஷன் வழங்கப்படும்.

இதன் காரணமாக, சாரதா நிறுவனத்தில் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டியது.  அதை எண்ணும் போது, 30 ஆயிரம் கோடி ரூபாய் வந்தது. இதில், 17 லட்சம் பேர் முதலீடு செய்தனர். 200க்கும் மேற்பட்ட கிளைகள், 16 ஆயிரம் ஊழியர்கள் என்று மிகப் பெரியதாக விளங்கியது இந்த நிறுவனம்.

இது, கடந்த 2013ம் ஆண்டு திவாலாக அறிவிக்கப்பட்டது. தொடங்கிய 23 ஆண்டுகளில், 30 ஆயிரம் ரூபாய் வசூல் செய்து ஏப்பம் விட்டது இந்த நிறுவனம்.
அதன் பின்னர், இந்த நிறுவனத்திடம், அப்பாவி முதலீட்டாளர்கள் முதலீடு செலுத்திய பணம் அவர்களுக்கு திரும்ப கிடைக்க செய்ய, மத்திய மாநில அரசுகள் முன்வரவில்லை. கண்துடைப்பாக, 5 பில்லியன் முதலீட்டில் ஒரு நிறுவனத்தை தொடங்கியதுடன், நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் ஏறக்கட்டி விட்டன.

இதற்கு, மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசும், மாநிலத்தில் ஆட்சி செய்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் தான் காரணம். இந்த இரண்டு கட்சிகளையும் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள், சாரதா நிதி நிறுவனத்துடன் தொடர்பில் இருந்தது தான் காரணம்.

திரிணாமுல் காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி.,  குணால் கோஷ்,  பத்திரிகையாளர் ஸ்ரீஞ்ஜெய் பேஸ், திரிணாமுல் காங்கிரஸ் துணைத் தலைவர் ரஜத் மஜூம்தாரி( ஓய்வு பெற்ற டிஜிபி, சாரதா நிதி நிறுவன பாதுகாப்பு ஆலோசகர்) மேற்கு வங்க விளையாட்டுத்துறை அமைச்சர் மதன் மித்ரா இவர்கள் தான், சாரதா நிதி நிறுவனத்தின் முக்கிய பங்காளிகள்.

இந்த பட்டியலில், தேவ்ஜனி முக்கர்ஜி பெயர் குறிப்பிடவில்லை. நிதி நிறுவனத்தில் வரவேற்பாளராக உள்நுழைந்து, நிறுனத்தின் செயல் இயக்குனராக பல தரப்பட்ட நிலைக்கு பின்னர் உயர்ந்தார். சாரதா நிதி நிறுவன காசோலைகளில் இவர் கையெழுத்து இட்டால் தான் செல்லுபடியாகும்.

இந்த நிலைக்கு அம்மணி, 30 வயதிலேயே முன்னேறி இருக்கிறார் என்றால் என்ன உழைப்பு உழைத்து இருப்பார் என எண்ணிப்பாருங்கள். இதனால் தான் இவரை தனியே குறிப்பிட்டுள்ளேன்.

இதை தவிர இந்த நிறுவனத்தின் தலைவருடன் இணைந்து, பணத்தை கையாடல் செய்து ஏமாற்ற உதவியதாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி, 1.4 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக சி.பி.ஐ., குற்றம்சாட்டி உள்ளது.

இது போன்றவர்கள் தலையீட்டின் காரணமாகத்தான், சி.பி.ஐ.,  - செபி,  அமலாக்கத்துறை என்று பல அமைப்புகள் விசாரிக்க களம் இறங்கினாலும், மத்திய மாநில அரசுகள் முட்டுக்கட்டை போட்டன.

ஏழைககளின் கண்ணீரால், மத்தியில் ஆட்சி மாற்றம் வந்தது. அதிலும், புரோக்கர் மூலம் பேரம் பேசாத பிரதமர் அமர்ந்ததால், இந்த வழக்கு வேகம் எடுத்தது. கடந்த நான்கரை ஆண்டுகளில், சாரதா சிட்பண்டு வழக்கு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சூழ்நிலையில்தான், லோக்சபா தேர்தலும் வர இருக்கிறது. இந்த காலகட்டத்தில், சி.பி.ஐ., சுற்றி வளைத்து தன்னை பிடித்துவிட்டால் என்ன ஆவது என்ற பயம் ஒரு புறமும், மற்றொருபுறம், அகில இந்திய தலைவராக உருவெடுக்க, எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்து, தேசிய அரசியலில் தன்னை மேலும் விளம்பரப்படுத்திக் கொள்ளவும் தான், சில நாட்களுக்கு முன், மம்தா அரங்கேற்றிய வீதி நாடகம்.

நீங்கள் குற்றவாளி அல்ல என்றால், உங்கள் மாநில போலீஸ் அதிகாரியிடம், சி.பி.ஐ., விசாரணை நடத்துவதில் உங்களுக்கு என்ன பிரச்னை மம்தா?  ஏன் இந்த கொலை, கண்துடைப்பு வீதி நாடகம்?

இத்தனை நாடங்களுக்கு நடுவில், நம் ‛கலைஞர் அண்டு கோ’ உட்பட பல எதிர்கட்சிகளை, தன்னை நோக்கி திருப்பியதில் மம்தா வெற்றியும் பெற்று இருக்கலாம். ஆனால், ஏழை முதலீட்டாளர்கள் மனங்களில் இருந்து அவர் துாக்கி தெருவில் வீசப்பட்டது தான் யதார்த்தம்.

சாரதா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமார்ந்த, 17 லட்சம் மக்களுக்கு எதிராக, ஒரு தலைவியை துாக்கி பிடித்து, மோடிக்கு எதிராக களம் இறங்குகிறோம் என்ற நினைப்பே, எதிர்கட்சிகளுக்கு இல்லை.

பழிவாங்கும் நடவடிக்கை என்று அலறும் மம்தா, சிட்பண்டில் பணம் இழந்தவர்களுக்கு நியாயம் பெற்று தந்திருந்தால்,  இந்த போராட்டத்திற்கே தேவை இருந்திருக்காது. அதை விடுத்து, 3 நாள் நாடகத்தை அரங்கேற்றிய மம்தா, மக்களின் மனங்களில் கோபத்தீயை மூட்டி இருக்கிறார்.

அது தேர்தலின் போது நிச்சயம் வெடிக்கும். அப்போது, மம்தாவிற்கு ஏற்படும் நிலை, மற்ற அரசியல் தலைவர்களுக்கு பாடமாக அமையும் என்பதே யதார்த்தம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close