அக்னி பரீட்சை முடித்து அன்னை மடி சேரும் அபிநந்தனுக்கு ஒரு ‛சல்யூட்’

  Newstm Desk   | Last Modified : 28 Feb, 2019 06:51 pm
a-great-salute-for-wing-commander-abhinandan

பிப்., 27 காலை, ஜம்மு - காஷ்மீரில் கடும் பதற்றம். புல்வாமா தாக்குதலுக்கு, இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலால், கொதித்தெழுந்த பாக்., ராணுவம், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, நம் எல்லைக்கள் தாக்குதல் நடத்தியது. 

ரஜோரியில் உள்ள இந்திய ராணுவ முகாம் அருகே, குண்டு வீசி, பதற்றத்தை மேலும் அதிகரிக்க செய்தது பாகிஸ்தான். இதற்கு மேலும் பொறுமை காக்க மனமில்லா நம் ராணுவ வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். 

அப்போது, சற்றும் எதிர்பாராத விதமாக, இந்திய வான்வெளி எல்லையை நோக்கி, பாக்., போர் விமானங்கள் பறந்து வந்து கொண்டிருந்தன. அவற்றை இந்திய எல்லைக்குள் நுழைய விடாமல் தடுக்க, நம் விமானப் படை வீரர்கள் தயாராகினர். 

பாக்., விமானங்களை ஓட ஓட விரட்டும் பணியில், ஆறு விமானப்படை விமானங்கள் வானில் பறந்தன. அவற்றில் நான்கு விமானங்கள் சற்று நேரத்தில் நம் எல்லைக்குள் திரும்பிவிட்டன. 

இந்திய எல்லைக்குள் சற்று துாரம் ஊடுருவிய பாக்., விமானங்கள், நம் போர் விமானங்களை பார்த்து அஞ்சி நடுங்கி, பின் வாங்கின. அதிலும், ஓர் விமானம், நம் விமானப்படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. 

இதற்கிடையே, இந்திய எல்லைக்குள் நுழைந்த, ஆளில்லா பாக்., உளவு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. இத்தனைக்கும் இடையே, பாக்., விமானங்களை விரட்டி சென்ற, நம் விமானங்களில், இரண்டு திரும்பி வராததது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அப்போது, இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும், இந்தியாவை சேர்ந்த இரு பைலட்டுகளை தாங்கள் சிறை பிடித்து வைத்திருப்பதாகவும் பாகிஸ்தான் அறிவித்தது. 


ஆனால் சற்று நேரத்தில், நம் விமானப்படையை சேர்ந்த மேலும் ஒரு விமானி காயங்களுடன் உயிர் தப்பிய செய்தி வெளியானது. எனினும், ஒரு விமானமும், அதில் பயணித்த விமானியையும் காணவில்லை என, மத்திய அரசு அறிவித்தது. 

அப்போது, பாகிஸ்தான் தரப்பிலிருந்து மீண்டும் ஓர் அறிவிப்பு வெளியானது. ‛‛இந்திய விமானிகள் இருவர் அல்ல, ஒருவரை மட்டுமே நாங்கள் சிறை பிடித்துள்ளோம்’’ என பாக்., அறிவித்தது. 

இதை தொடர்ந்து, ஒரு வீடியோ காட்சியும், சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அதில், இந்திய விமானப்படை சீருடை அணிந்த ஒருவரை, பாகிஸ்தானியர் சிலர் தாக்குவதும், அங்கிருந்து அந்த நபரை, பாக்., ராணுவம் அழைத்து செல்லும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. 

சற்று நேரத்தில் மீண்டும் ஒரு வீடியோ வெளியானது. அதில், இந்திய விமானப் படை சீருடை அணிந்த வீரர் ஒருவர் கண்கள் கட்டப்பட் நிலையில், ‛‛என் பெயர் அபிநந்தன் என் ரோல் நம்பர்....... ’’என தன்னைப் பற்றிய தகவல் கூறும் தகவல் இடம் பெற்றிருந்தது. அதில், அந்த வீரர், கை, கால்களும் கட்டப்பட்ட நிலையில் இருந்தார். 

அதன் பின்னர் தான், ஊடகங்களில் அபிநந்தன் பற்றிய தகவல்கள் வேகமாக பரவ ஆரம்பித்தன. பாக்., ராணுவத்திடம் சிக்கியவர், நம் விமானப் படையை சேர்ந்த, அபிநந்தன் என்பதும், அவர், சென்னையை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. 


பிப்., 27ல், இந்திய வான் எல்லையில் நுழைய முயன்ற பாக்., போர் விமானங்களை துரத்தியடித்தோடு, அவர்களை அந்நாட்டு எல்லைக்குள் புகுந்து மிரட்டிய விங் கமாண்டர் அபிநந்தன், எதிர்பாராத விதமாக, அந்நாட்டு ராணுவ தாக்குதலுக்கு ஆளாகி, விமானம் நொறுங்கியதில், பாக்., எல்லைக்குள் விழுந்தார். 


அவரை பிடித்து சரமாரியாக அந்நாட்டு மக்கள், வீரர்கள் தாக்கியதில், அபிநந்தனின் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. முகம் முழுவதும் ரத்தம் வழிய, அவர் அங்கிருந்து பாக்., ராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டார். 

அபிநந்தன் காயங்களுடன் காணப்பட்ட வீடியோவை பார்த்ததும், மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. ஜெனிவா ஒப்பந்தத்தின் படி அவரை பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியது. 


அதன் பின், அபிநந்தனின் மீண்டும் ஓர் வீடியோ வெளியானது. அதில், டீ குடித்துக் கொண்டே, பாக்., ராணுவ வீரர்கள் தன்னை மிக நன்றாக கவனித்துக் கொள்வதாக அவர் பேசும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அப்போது கூட, தன் இருப்பிடம் எது, எந்த விமானத்தில் வந்தேன், தன் நோக்கம் என்ன என்பதை கூற மறுத்துவிட்டார். தன் மறுப்பை தைரியமாக வெளிப்படுத்தினார். 


எதிரியின் பிடியில் சிக்கியிருக்கும் போது கூட, சிறிதும் மரண பயம் இல்லாமல், மிக கம்பீரமாகவும், மிடுக்குடனும், சிரித்த முகத்துடனும் காணப்பட்டார் அபிநந்தன். 

அவரின் இந்த வீரம், நாட்டு மக்களை மிகவும் கவர்ந்தது, அவரது தந்தையும் விமானப் படை முன்னாள் அதிகாரி என்பதால், அவர்கள் குடும்பம், அபிநந்தனின் நிலையை எண்ணி, சிறிதும் அச்சம் கொள்ளவில்லை. 

மாறாக, அபிநந்தன் நிச்சயம் நல்ல முறையில் நாடு திரும்புவார் என தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாக, நாட்டு மக்களுக்கு நம்பிக்கை ஊட்டினர். 

பாகிஸ்தான் மீண்டும், மீண்டும் வீடியோ வெளியிட்டதற்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. பயங்கரவாதத்தை ஒடுக்கும் வகையில் தான் பாலகோட் பகுதியில் தாக்குதல் நடத்தியதாகவும், அதை புரிந்து கொள்ளாத பாகிஸ்தான், வேண்டுமென்றே, இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதாகவும் மத்திய அரசு தெரிவித்தது. 

பாகிஸ்தானின் செயலுக்கு, உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. சீனா, அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள், இரு தரப்பு பேச்சு வார்த்தை மூலம் பிரச்னைக்கு தீர்வு காணும் படி வலியுறுத்தியது. தவிர, அபிநந்தனை விடுவிக்க அழுத்தம் கொடுத்தன. 

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு, அபிநந்தனை மீட்பதில் இந்தியாவின் தொடர் நடவடிக்கைகள், உலக நாடுகளின் அழுத்தம், உள்ளிட்டவற்றிற்கு அடி பணிந்த பாகிஸ்தான், இன்று மாலை அவசர அவசரமாக, அந்நாட்டு பார்லிமென்ட் கூட்டு கூட்டத்தை கூட்டியது. 

அதில் உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான், இந்தியாவுடன் போர் புரிய விரும்பவில்லை என்றும், நல்லெண்ண மற்றும் அமைதியை விரும்பும் நோக்கத்தில், அபிநந்தனை நாளை, இந்தியாவிடம் ஒப்படைப்பதாகவும் அறிவித்தார். 

 

இதையடுத்து, எதிரியின் கோட்டைக்குள் புகுந்து, எதிரிப்படையை விரட்டியடித்து, அவர்களிடம் தனி ஆளாக சிக்கி, அந்த தருணத்திலும் சிறிதும் அச்சப்படாமல், மிக இயல்பான கம்பீரத்துடன் காட்சியளித்த அபிநந்தன், நாளை காலை, வாகா எல்லையில், நம்மோடு இணைய உள்ளார். 

வீரத் திருமகனாம் விங் கமாண்டர் அபிநந்தனை, இரு கரம் கூப்பியும், சிரம் தாழ்த்தியும் வரவேற்போம். வாழ்க பாரதம்... வளர்க நம் வீரர்களின் தொண்டும், தியாகமும். 

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close