பிரதமர் மோடியை கதறி அழ வைத்த வீரத்திருமகள்!

  Newstm Desk   | Last Modified : 02 Mar, 2019 03:06 pm
pm-modi-breaks-into-tears-while-speaks-with-a-pulwama-martyr-s-daughter

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வமாமாவில், பிப்., 14ல் நடந்த பயங்கரவாத தாக்குதலில், நம் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் பலியாயினர். அவர்களின்  வீர மரணத்திற்கு, நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டது. அவர்களின் குடும்பத்தாருக்கு, மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்தும் உதவிக்கரம் நீண்டது. 

இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த அனைத்து வீரர்களின் குடும்பத்தாரிடமும், பிரதமர் நரேந்திர மாேடி, போனில் பேசி, அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அவர்கள் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்ய, மத்திய அரசு காத்திருப்பதாகவும் உறுதி அளித்தார். 

வீரமரணம் அடைந்த ஒருவரின் குடும்பத்தாரிடம் பிரதமர் நரேந்திர மாேடி போனில் பேசிய போது, மறைந்த வீரரின் மகள் பேசிய பேச்சு, பிரதமர் மாேடியை கதறி அழ வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரிடையே நிகழ்ந்த உரையாடல் மற்றும் அது குறித்து அந்த சிறுமியின் பதிவு என்ற பெயரில், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

அந்த பதிவில் இடம்பெற்றுள்ளதாவது:

இன்றிலிருந்து சரியாக ஐந்து நாட்களுக்கு முன், என் வீட்டின் அக்கம் பக்கத்தார், உறவினர்கள், என் தாய் வழி மற்றும் தந்தை வழி தாத்தா, பாட்டிகள் உள்ளிட்டோர், எங்கள் வீட்டிற்கு வந்து, என் தாயிடம் ஆறுதல் கூறிக்கொண்டிருந்தனர். அவர்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வதாக கூறினர். 

ஆம்...புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் என் தந்தை வீரமரணம் எய்தினார் என்ற செய்தியை கேட்டதும், என் தாய் மூர்ச்சை அடைந்தார். சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்தாலும் அவரின் கதறலும், இடைவிடாத அழுகையும் நிற்கவேயில்லை. 

ஐந்து நாட்கள் கழித்து, என் தாய், என்னை பள்ளிக்கு செல்லும் படி அனுப்பி வைத்தார். அங்கு என்னை வரவேற்பதற்கென்றே பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் ஒன்று கூடியிருந்தனர். ஏற்கனவே, ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர், எங்கள் வீட்டிற்கே வந்து ஆறுதல் கூறி விட்டு சென்றிருந்ததால், பள்ளி மாணவர்கள் அனைவரும், எனக்கு ஆறுதல் கூறி தேற்றினர். 

பள்ளி மைதானத்தில், என் தந்தையின் படம் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு மாலை அணிவித்து, மலர்கள் துாவப்பட்டிருந்தன. தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அவருக்கு புகழஞ்சலியும், மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. உன் தந்தை உண்மையில் ஒரு ஹீரோ என்றனர். அவர்கள் கூறுவதற்கு முன்பே, நான் அவரை அப்படித்தான் நினைத்திருந்தேன்.

பயங்கரவாத தாக்குதலில் அவர் வீரமரணம் அடைந்ததும், என் மனதில் அவருக்கான இடம் மேலும் உச்சத்தை அடைந்தது. பள்ளி முடிந்து வீடு திரும்பியதும், பிரதமர் நரேந்திர மாேடி, என் தாயுடன் போனில் பேசயிருப்பதாக கூறினர். 

அப்போது, நானும் அவருடன் பேச வேண்டும் என கூறுங்கள் என்றேன். சரியாக சொன்ன நேரத்தில் தொலைபேசி மணி அடித்தது. ஒரு முனையில் என் தாய், மறு முனையில் பிரதமர் நரேந்திர மாேடி.
என் தந்தையின் வீர மரணத்திற்கு ஆறுதல் கூறிய அவர், எங்கள் குடும்பத்துடன் மத்திய அரசு துணை நிற்பதாக உறுதியளித்தார். கிட்டத்தட்ட, 15 - 20 நிமிடங்கள் என் தாயுடன் பேசினார். 

பிறகு, என் விருப்பத்தை அவரிடம் தாய் தெரிவித்ததும், என்னிடம் போனை கொடுக்கச் சொன்னார். 

நான்:  ஹலோ சார் 

பிரதமர் : ஹலோ மகளே, என்னிடம் என்ன பேச வேண்டும்? 

நான்: நீங்கள் எங்களுக்காக செய்த உதவிகளுக்கு மிக மிக நன்றி. எனினும், நான் உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்க விரும்புகிறேன். 

பிரதமர்: எனக்கு எதற்கு நன்றி. உன் தந்தை செய்த தியாகத்துடன் ஒப்பிடுகையில், நாங்கள் செய்வது ஒன்றுமே இல்லை. உனக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், உடனே, பிரதமர் அலுவலகத்திற்கு இ - மெயில் அல்லது போன் மூலம் தெரியப்படுத்து. உன் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். சரி ஏதோ கோரிக்கை என்றாயே, என்ன என்று கூறு. 

நான்: சார், சீருடைப் பணியில் சேவையாற்றுவது என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பது எனக்கு தெரியும். ஆனால், என் தந்தையின் உயிர் தியாகத்திற்குப் பின், அந்த பணி, சேவை மீதான மதிப்பும், மரியாதையும் என் மனதில் இன்னும் அதிகரித்துள்ளது. அது எவ்வளவு வீரமானது என்பதை புரிந்து கொண்டேன். நான் வளர்ந்ததும், என் தந்தையைப் போலவே, நானும் ராணுவத்தில் இணைய விரும்புகிறேன்.

பிரதமர் : பழி வாங்கும் எண்ணத்துடன் இந்த முடிவெடுத்துள்ளாயா? 

நான் : இல்லை சார், நம் நாட்டிற்கு சேவை புரிய வேண்டும் என்ற எண்ணத்தில்... 

சிறிது நேர மவுனத்திற்குப் பின், அந்தப் பக்கத்திலிருந்து தழுதழுத்த குரலில் பிரதமர் கேட்டார், ‛‛சொல் குழந்தையே, உனக்கு என்ன உதவி வேண்டும்?’’ 

நான் : என் தந்தையின் மறைவுக்குப் பின், எங்களுக்கு பலரும் உதவ முன் வந்துள்ளனர். என் தந்தை மட்டுமே தனியாக சம்பாதித்திருந்தாலும், அந்த பணம் கொஞ்ச நாட்களில் செலவாகியிருக்கும். இந்தத பணத்தை எங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளுங்கள். அதை, ஏதேனும் ஒரு ராணுவ பள்ளியில், கல்வி கட்டணமாக எனக்காக கட்டிவிடுங்கள். 

பிரதமர்: போதும் குழந்தை போதும்.... என்னை இதற்கு மேலும் வெட்கப்பட வைக்காதே. நான் பிரதமராக இருந்தாலும், இல்லாவிட்டாலும்; நான் உயிரோடு இருந்தாலும், இல்லாவிட்டாலும், ராணுவப் பள்ளியில் உனக்காக கல்விக் கட்டணம் நிச்சயம் செலுத்தப்படும். எப்போது வேண்டுமானாலும் நீ அங்கு சென்று கல்வி பயிலலாம். உன் வார்த்தைகளால் என்னை வென்று விட்டாய். உன்னை நினைத்து நான் மிகவும் பெருமை அடைகிறேன். ஜெய் ஹிந்த்!
எனக் கூறி தொலைபேசி இணைப்பை துண்டித்தார். 

ரிசீவரை கீழே வைத்துவிட்டு நான் என் தாயின் பக்கம் திரும்பினேன். கண்களில் நீர் வடிய, என்னை கட்டியணைத்த என் தாய், ‛நீ இவ்வளவு சிறு வயதிலேயே முதிர்ச்சி அடைந்து விட்டாய்’ எனக் கூறி கதறி அழத்துவங்கினார். 

இவ்வாறு அந்த பதிவில் இடம் பெற்றுள்ளது. 

உண்மையில் பிரதமர் மாேடி கதறி அழுதாரோ இல்லையோ, இந்த பதிவை படிக்கும் எவரின் கண்களிலும், ஒரு துளி கண்ணீராவது முட்டிக் கொண்டு நிற்கும் என்பதில் ஐயமில்லை. 


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close