அசகாய சூரன் அபிநந்தன்... வான்வெளியில் நடந்தது என்ன? திக்... திக்...தகவல்கள்

  Newstm Desk   | Last Modified : 03 Mar, 2019 05:38 pm
how-iaf-pilot-abhinandan-varthaman-brought-down-pakistan-s-f-16-jet-minute-by-minute-details

பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இயங்கி வந்த, பாக்., ஆதரவு பயங்கரவாத பயிற்சி முகாம் மீது, நம் விமானப்படை தாக்குதல் நடத்தியதற்கு அடுத்த நாள், அதாவது, பிப்., 27ல், அந்நாட்டு விமானப்படை, நம் வான் எல்லையில் நுழைய முயன்றது. 
அப்போது, அந்நாட்டு விமானங்களை விரட்டியதோடு, அதில் ஒன்றை விரட்டி சென்று சுட்டு வீழ்த்திய, நம் விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன், எதிர்பாராத விதமாக பாக்., ராணுவ பிடியில் சிக்கினார். அன்றைய தினம், வான்வெளியில் நடந்தது என்ன என்பது குறித்தும், அவர் பாக்., ராணுவத்தின் வசம் எப்படி சிக்கினார் என்பது குறித்த, திக்... திக்... தகவல்கள் நிமிட வாரியாக வெளியாகியுள்ளன. 

அதில் கூறப்பட்டுள்ளதாவது: 

பிப்., 27 காலை மணி 9:52:  பாலகோட் தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, பாகிஸ்தானில் உள்ள மூன்று வெவ்வேறு விமானதளங்களிலிருந்து,  எப்., 16 ரக போர் விமானங்களுடன், பாக்., விமானப்படை வீரர்கள், அந்நாட்டு வான் எல்லைக்குள் பறப்பதை, நம் விமானப்படை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

அவை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்  ஒருங்கிணைந்து, இந்திய எல்லைக்குள் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் தயாராகின. 

மணி 9:54 : பாக்., விமானப்படையினர், 10 போர் விமானங்களுடன் இந்திய எல்லை நோக்கி வரத்துவங்கினர். இதையடுத்து, அவர்களை விரட்டியடிக்க, இரண்டு மிக், 21 ரக போர் விமானங்கள் மற்றும் ஆறு சுகோய் எம்கேஐ ஜெட்டுகளுடன், நம் விமானப்படை தயாரானது. 

மணி 9:58 : இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைய வேண்டாம் என, பாக்., விமானிகளுக்கு, நம் விமானப்படை முதல் எச்சரிக்கை அளித்தது. 

மணி 9:59 : இந்திய எல்லைக்குள் ஊடுருவும் முயற்சியை கைவிடும் படி, இரண்டாவது முறையாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், பாக்., விமானிகள் நம் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் தொடர்ந்து முன்னேறினர். 

மணி 10:00 : இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த, பாக்., போர் விமானங்கள் 10ம், தாக்குதல் நடத்தும் விதத்தில் ஒருங்கிணைந்தன. 

மணி 10:01 :  இதை தொடர்ந்து, தரையிலிருந்தும், வானில் பறந்து கொண்டிருந்த நம் விமானப்படை விமானங்கள் மூலமும் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டது.  இந்திய வான் எல்லைக்குள், ஒரு கி.மீ., ஊடுருவிய பாக்., போர் விமானங்கள், நம் தாக்குதலை சமாளிக்க முடியாமல், அவற்றில் ஒன்பது பாக்., போர் விமானங்கள்  மீண்டும் பாக்., எல்லைக்குள் திரும்பிச் சென்றன. 

மணி 10:02 : அவற்றில் ஒரே ஒரு விமானம் மட்டும், நம் நாட்டு வான் எல்லையில், மூன்று கி.மீ., துாரம் வரை ஊடுருவியது. ராணுவத்திற்கு சொந்தமான எண்ணெய் கிடங்கை தாக்கி அழிக்கும் நோக்கத்துடன் அந்த விமானம் பறந்தது. 

மணி 10:03 :  பாக்., போர் விமானத்தை முன்னேற விமாமல், அதற்கு முன் பறந்து சென்றது நம் விமானப்படையை சேர்ந்த, மிக் 21 விமானம். இந்த விமானத்தை இயக்கியவர் தான் விங் கமாண்டர் அபிநந்தன். அத்துடன், பாக்., போர் விமானத்தை சுற்றி வளைக்கும் முயற்சியில், சுகோய் ரக போர் விமானம் அதை பின் தொடர்ந்தது. 

பாக்., விமானத்திற்கு முன் புறம் மிக்., 21ம் பின்புறம் சுகோயும் சுற்றி வளைத்ததால், அதனால், தாக்குதல் நடத்த முடியவில்லை. அப்போது, சுகோய் விமானத்தில் இருந்த பைலட், பாக்., விமானத்தின் மீது தாக்குதல் நடத்தினார். 

மணி 10:04 :  ராணுவ எண்ணெய் கிடங்கு தாக்கப்படாமல் இருக்க, அந்த பகுதியில் சுகோய் விமானம் பாதுகாப்பிற்காக வட்டமிட்டுக் கொண்டிருந்தது. மிக் 21 ரக விமானத்தில், பாக்., போர் விமானத்தை துரத்திச் சென்ற அபிநந்தன், அந்த விமானத்தை, இந்திய எல்லையிலிருந்து, பாக்., எல்லைக்குள் விரட்டியடித்தார். 

10: 08 : அவர் உயரே பறந்து கொண்டிருந்த போதே பாக்., விமானத்தை சுட்டு வீழ்த்த முயற்சித்தார். ஆனால், ரேடார் சிக்னல் கிடைக்காததால், அதில் சற்று தாமதம் ஏற்பட்டது. எனினும் துணிவுடன், பாக்., எல்லைக்குள் தாழ்வாக பறந்து,  பாக்., போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினார். 

அதன் பின், மிகப் பெரிய ஆபத்தான முறையில் விமானத்தை மேலெழுப்பி, அங்கிருந்து நம் நாட்டு எல்லையில் நுழைவதற்கான முயற்சி மேற்கொண்டார். அப்போது, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், அந்நாட்டு தரைப்படையினரால், அவரது விமானம் சுடப்பட்டது. 

இந்த எதிர்பாராத தாக்குதலில் சிக்கி, பாக்., எல்லையில் விழுந்த அபிநந்தன், அந்நாட்டு ராணுவத்தினரால் சிறை பிடிக்கப்பட்டார். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

பாக்., ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட பின்னரும், நம் நாட்டு ரகசியங்கள் எதையும் கூறாமல், உயிரே போனாலும் சரி, நாட்டின் ரகசியத்தை காப்பேன் என்ற உறுதியுடன் இருந்தார் அபிநந்தன். பின், மத்திய அரசின் நடவடிக்கை மற்றும் சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக, அபிநந்தன் விடுவிக்கப்பட்டு, தாயகம் திரும்பினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close