தீரன் அபிநந்தனுக்கு வீரம் புகட்டிய தாய் ஷோபா!

  கிரிதரன்   | Last Modified : 03 Mar, 2019 06:54 pm
brave-mother-warrior-son

பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியிலிருந்து கெத்தாக நாடு திரும்பியுள்ள இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை தேசமே இன்று பெருமையாக பேசி வருகிறது. இந்தியர்கள் அனைவரும் அவரை ரியல் ஹீரோவாக கொண்டாடி வருகின்றனர். அவரின் தந்தை வர்த்தமான் கூட ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி (ஏர் -மாஷல்) என அறிகிறோம்.

ஆனால், அவரின் தாயை பற்றி இதுநாள்வரை வெளியுலகம் அவ்வளவாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த தேசம் அவரைப் பற்றியும் அவசியம் அறிய வேண்டும். ஏனெனில் ஒரு மருத்துவராக அவர், உலகின் பல்வேறு நாடுகளில், குறிப்பாக போர் மற்றும் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆற்றியுள்ள சேவைகள் அளப்பரியவை. 

அபிநந்தனின் அன்னையான ஷோபா, சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றவர். பிரிட்டனில் உள்ள "ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜனில்" மயக்கவியல் நிபுணருக்கான பட்டமேற்படிப்பும் முடித்தவர்.

டாக்டர்கள் என்றால், உள்நாட்டில் பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும் அல்லது சொந்தமாக மருத்துவமனை நடத்த வேண்டும். அதுவும் இல்லையா...வெளிநாட்டில் மருத்துவ தொழில் பார்த்துக்கொண்டு அங்கேயே குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட வேண்டும் என்பதுதான் பொதுவான வரையறை.

ஆனால், இந்த வரையறைக்கு முற்றிலும் மாறாக ஷோபா, தமது வாழ்க்கைப் பயணத்துக்கு மிகக் கடினமான பாதையை தேர்ந்தெடுத்தார்.

"Doctors Without Borders" எனும் சர்வதேச தன்னார்வ அமைப்பின் உறுப்பினரான அவர், உலகில் எங்கெல்லாம் போர் நடக்கின்றதோ, அங்கெல்லாம் ஓடோடிச் சென்று போரில் காயப்பட்டு உயிருக்கு போராடும் வீரர்கள், பொதுமக்கள் என எல்லோருக்கும் மருத்துவ சேவை அளிப்பதையே தன் வாழ்வின் முக்கிய நோக்கமாகக் கொண்டார்.

எப்போதும் துப்பாக்கிச் சத்தமே கேட்டுக் கொண்டிருக்கும் ஐவரி கோஸ்ட் நாட்டின் வடக்குப் பகுதியில் தான், ஷோபாவின் உன்னத வாழ்க்கைப் பயணம் கடந்த 2005 -இல் தொடங்கியது. அங்கு போரினால் பாதிக்கப்பட்டு அகதிகளாக திரிந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு இவர் நேரில் சென்று மருத்துவ சேவையாற்றினார்.

அடுத்து, நைஜீரியாவின் ஹார்கோர்ட் துறைமுகப் பகுதிக்கு சென்றார் ஷோபா. எண்ணெய் வளம் மிக்க அந்தப் பகுதியில், எண்ணெய் திருட்டு சம்பந்தமாக கிராமவாசிகளுக்கும், எண்ணெய் நிறுவனங்களுக்கும் சதா சண்டை நடைபெறுவது வழக்கம். அந்தப்பகுதியின் பூர்வீக குடிமக்களான பழங்குடியினருக்கு இடையே மோதல் நிகழ்வதும் அங்கு சர்வசாதாரணம்.

சண்டை. சச்சரவுகளில் சிக்கி ரணப்படுவோருக்கும், உயிருக்கு ஆபத்தான நிலைக்கு தள்ளப்படுவோருக்கும் சிகிச்சை அளிக்கும் நோக்கில், அங்கு ரத்த வங்கியுடன்கூடிய அவசர சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவை ஷோபா தொடங்கி தனது மருத்துவ சேவையை ஆற்றினார்.

ஈராக்கில் இரண்டாவது வளைகுடா போர் நடைபெற்று கொண்டிருந்த சமயம். ஈராக்கின் சுலைமேனியா எனுமிடத்தில் ஷோபா மருத்துவப் பணி ஆற்றிக்கொண்டிருந்தபோது, அங்கு நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் இருந்து மயிரிழையில் அவர் உயிர் தப்பினார்.

ஈரானில் ஷோபா தமது மருத்துவப் பணியின்போது நோயாளிகளுக்கு பிராணாயாமம் கற்றுக் கொடுத்ததன் பயனாக, அதனை முறைப்படி செய்து வந்தவர்கள் விரைவில் குணமடைந்த அற்புத நிகழ்வுகளும் அங்கு நடைபெற்றன.

அதைத்தொடர்ந்து தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸுக்கு ஷோபா பயணப்பட்டார். சாலை வசதிகளே இல்லாத கிராமங்கள், மருத்துவ வசதியே என்னவென்று அறியாத தொலைத்தூர இடங்களில் வசிக்கும் மக்கள் என,  1,800 கிலோமீட்டர் தொலைவுக்கு காரிலேயே பயணப்பட்டு தமது அளப்பரிய மருத்துவ சேவையை ஆற்றியுள்ளார்.

தமது இந்த சேவைகளுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல், வடஅமெரிக்க நாடான ஹைட்டியில்  2010 -இல் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின்போது,ஷோபா ஆற்றிய மருத்துவ சேவை அளப்பரியது.

 சுமார் 3 லட்சம் பேரை பலிக்கொண்டும், அதே அளவு மக்களை படுகாயமடையவும் செய்த அந்த கொடூர நிகழ்வின்போது,  அங்கு இடிப்பாடுகளுக்கு இடையே பல்லாயிரக்கணக்கானோருக்கு தேவையான மருத்துவ உதவிகளை அபிநந்தனின் அன்னை செய்ததை மருத்துவ உலகம் இன்றும் பெருமையுடன் நினைவுகூருகின்றது.

தந்தை விமானப்படை அதிகாரி (ஏர் -மார்ஷல்)... தாய் போரால் பாதிக்கப்படுவோருக்கு ஓடோடி சென்று சேவைப் புரியும் டாக்டர்... இப்போது புரிகிறதா... தேசப்பற்று அபிநந்தனின் மரபணுவிலேயே கலந்ததென்று... வீரமும், தீரமும் அவருக்கு அன்னை ஊட்டியதென்று... 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close