கருத்து கணிப்புகளா; கருத்து திணிப்புகளா?

  Newstm Desk   | Last Modified : 11 Mar, 2019 01:49 pm
special-article-about-loksabha-election-poll-survey

நாட்டில் எவ்வகை தேர்தல் அறிவிக்கப்பட்டாலும், உடனே, வாக்காளர்களின் மனநிலையை பிரதிபலிக்கிறோம் எனக் கூறி, கருத்து கணிப்பு முடிவுகள் என்ற பெயரில், பல்வேறு நிறுவனங்கள், கருத்து திணிப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. 

கடந்த, 10 ஆண்டுகளில் இந்த கருத்து திணிப்பு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. அரசியல் கட்சிகள், செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகள், கார்ப்பரேட்டுகளின் கைக்கூலியாக செயல்படும் சில தனியார் அமைப்புகள், ஒரு தலைபட்சமாக செயல்படும் சில கல்வி நிறுவனங்கள் போன்றவை, ஒவ்வொரு தேர்தலின் போதும், கருத்துக் கணிப்பு என்ற பெயரில், தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை மக்கள் மத்தியில் திணிக்கின்றன. 

அந்த வகையில், 2014ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின் போது, பா.ஜ.,வுக்கு இவ்வளவு இடங்கள், காங்கிரசுக்கு இவ்வளவு இடங்கள், மூன்றாவது அணி அல்லது வேறு சில அரசியல் கட்சிகளுக்கு இவ்வளவு இடங்கள் என, பல கருத்து கணிப்புகள் வெளியாயின. அவற்றில், 95 சதவீதத்திற்கும் மேலான கருத்துக் கணிப்புகள் பொய்யாயின. 

பல தனியார் நிறுவனங்கள், குறிப்பிட்ட அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்களுக்கு சாதகமாக, மக்கள் மனங்களை மாற்ற முயற்சித்து, இவ்வகை கணிப்புகளை வெளியிடுகின்றன. தொடர்ந்து பல தேர்தல்களில் இது போன்ற கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டு வந்துள்ளன. எனினும், வாக்காளர்கள் ஒரு போதும் குழம்பியதில்லை. அவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என தீர்மானித்தனரோ அவர்களுக்கே வாக்களித்தும் வந்துள்ளனர். 

கடந்த, 2014ல், லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, 240க்கும் குறைவான இடங்களே கிடைக்கும், காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி, 150க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். பிரதான கட்சிகள் இரண்டிற்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது. தொங்கு பாராளுமன்றம் ஏற்படும் என்றே, பல கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்தன. 

ஆனால், இவற்றை பொய்யாக்கும் வகையில், 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தது. சுதந்திரத்திற்குப் பின், காங்கிரஸ் அல்லாத வேறொரு கட்சி, முதல் முறையாக, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து வரலாறு படைத்தது. 

அதே சமயம், முன் எப்போதும் இல்லாத வகையில், காங்கிரஸ் கட்சி, வெறும் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதன் மூலம், லோக்சபாவில், எதிர்க்கட்சி தலைவர் பதவியை  கூட பெற முடியாமல் போனது. 

அதன் பின் நடந்த உத்தர பிரதேச மாநில சட்டசபை தேர்தலிலும், இதே கதை தான். அந்த மாநிலத்தில், சமாஜ்வாதி அல்லது பகுஜன் சமாஜ், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் என கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்தன. ஒருவேளை பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை பெற, பிற கட்சிகளின் ஆதரவு தேவைப்படும் எனவும் கருத்து கணிப்பு முடிவுகள் கூறின. 

அதற்கு நேர் எதிர்மாறாக, அப்போது நடந்த சட்டசபை தேர்தலில், மாெத்தமுள்ள, 404 இடங்களில், முன் எப்போதும் இல்லாத வகையில்,  பா.ஜ., மட்டும் தனியாக, 311 இடங்களை கைப்பற்றியது. கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து, 324 இடங்களில் வெற்றி பெற்று மிகப் பெரிய பெரும்பான்மை பலத்துடன், அந்த மாநிலத்தில் பா.ஜ., தலைமையிலான ஆட்சி  அமைந்தது. 

அதை தொடர்ந்து, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களில், அப்போது ஆளுங்கட்சிகளாக இருந்த பா.ஜ., வேட்பாளர்களே வெற்றி பெறுவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கு, எதிர்க் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். 

அதே போல், 2014 லோக்சபா தேர்தலில், நாடு முழுவதும், மாேடி அலை வீசிய போதும், தமிழகத்தில், அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்றது. யாரும் எதிர்பாராத வகையில், தி.மு.க., மற்றும் காங்கிரசுக்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி கிட்டவில்லை. 

அதன் பின், 2016ல் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில், ஆளும் கட்சி தோல்வி அடைந்து, எதிர்க்கட்சியாக இருந்த, திமுக வெற்றி பெறும் என்றே, பெரும்பாலான நிறுவனங்களின் கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்தன. ஆனால், எம்.ஜி.ஆர்.,க்குப் பின், தமிழகத்தில் ஆளும் கட்சியே தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்து வரலாறு படைத்தது. 


வட கிழக்கு மாநிலங்களான அசாம், அருணாச்சல பிரதேசத்தில் நடந்த தேர்தல்களிலும், கருத்து கணிப்புகளுக்கு மாறாகவே தேர்தல் முடிவுகள் அமைந்தன. திரிபுராவில், பல ஆண்டுகள் கோலோச்சிய கம்யூனிஸ்ட், சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்தது. 

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த சட்டசபை தேர்தல்களில், ஆளும் கட்சியாக இருந்த பா.ஜ., தோல்வியை தழுவியது. மத்திய பிரதேசத்தில், பா.ஜ., படுதோல்வி அடையும் என கருத்து கணிப்புகள் கூறிய நிலையில், பெரும்பான்மைய பெற சொற்ப இடங்கள் இல்லாததால், அந்த கட்சி, தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சி அமைக்க முடியாமல் போனது. 

கர்நாடகாவில், பெரிய அரசியல் கட்சிகளாக திகழும் பா.ஜ., வோ, காங்கிரசாே ஆட்சி அமைக்க முடியாமல் போனது. சொற்ப இடங்களில் வெற்றி பெற்ற, மதசார்பற்ற ஜனதாதளம் தலைவர் குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்றார். 

இந்நிலையில், மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமையிலான ஐந்து ஆண்டு ஆட்சி காலம் நிறைவடைவதை அடுத்து, புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில், அடுத்தமாதம், 18ல் ஓட்டுப்பதிவு நடைெபறவுள்ளது. 

மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் ஓட்டுப்பதிவில் பதிவான ஓட்டுகள், மே 23ல் எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே, சி ஓட்டர்  எனும் தனியார் நிறுவனம், கருத்து கணிப்பு என்ற பெயரில் சில தவகல்களை வெளியிட்டுள்ளது. அதில், வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான கூட்டணிக்கு, மத்தியில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்காது என்றும், மேலும் சில கட்சிகளின் துணையுடன் மட்டுமே அந்த கட்சி ஆட்சி அமைக்க முடியும் எனவும் அதில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதாவது, பா.ஜ., தனியாக, 220 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகள் 44 இடங்களிலும் வெற்றி பெறும். காங்கிரஸ் கட்சிக்கு, 140க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி கிட்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியில் ஆட்சி அமைக்க, 272 தொகுதிகளில் வெற்றி தேவை எனும் போது, பா.ஜ., கூட்டணிக்கு மேலும் சில கட்சிகளின் ஆதரவு தேவைப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

அதே போல்,உத்தர பிரதேசத்தில், அகிலேஷ், மாயாவதியின் கூட்டணி வெற்றி பெறாவிட்டால், பா.ஜ.,வுக்கு, 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி கிடைக்கும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. 

இதன் மூலம், கடந்த தேர்தலை விட, பா.ஜ.,வுக்கு குறைந்த இடங்களே கிடைக்கும் என்றும், கடந்த தேர்தலை விட காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே, கணிப்பு என்ற பெயரில் மக்கள் மனதில் தங்கள் சொந்த கருத்துக்களை திணிக்கும் முயற்சியில், இது போன்ற நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாக, அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

கருத்து கணிப்பு என்ற பெயரில்,பா.ஜ., காங்கிரஸ் அல்லது வேறெந்த மாநில கட்சிகளுக்கு ஆதரவாகவும், எதிராகவும்,  திணிப்புகள் முன் வைக்கப்படலாம். ஆனால், அன்று முதல் இன்று வரை, வாக்காளர்கள் தெளிவான மனநிலையுடன் வாக்களித்து வருகின்றனர். 

ஓட்டுக்கு பணம் பெற்று ஓட்டளிப்போர், அரசியல் கட்சிகளின் சார்புடையோர், ஜாதி, மதத்தின் பெயரில் குறிப்பிட்ட கட்சிகளுக்கு அல்லது வேட்பாளருக்கு ஆதரவளிப்போர் என பலர் இருக்கலாம். அவர்கள் தங்களுக்கு பிடித்த கட்சிக்கோ, வேட்பாளருக்கோ ஓட்டும் போடலாம். 

ஆனால், நாட்டின் எதிர்காலம் கருதி, நடுநிலை தன்மையுடன் தங்கள் ஜனநாயக கடைமயாற்றும் வாக்காளர்கள் இன்றும் தங்கள் கடமையை சரி வர ஆற்றி வருகின்றனர். அவர்கள் தான், உண்மையான வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்றனர்.

எனவே, ஆயிரம் கருத்து கணிப்புகள் வெளி வந்தாலும், நடு நிலை வாக்காளர்கள் யாரை ஆதரிக்கின்றனரோ, அவரே தேர்தலில் வெற்றி பெற முடியும். அது போன்ற வெற்றி வேட்பாளர்களின் ஆதரவை பெற்ற கட்சியே, ஆட்சிக் கட்டிலில் அமரவும் முடியும் என்பது தான் நிதர்சனம். 

நம் நாட்டில் ஜனநாயகம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது என்ற நம்பிக்கை நம்மில் பலருக்கும் உண்டு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எனவே,எத்தனை கருத்துக் கணிப்புகள் குட்டையை குழப்பினாலும், நடுநிலை வாக்காளர்கள் தெளிவான மனநிலையுடன் தான் வாக்களிப்பர் என்பது திண்ணம். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close