செக்ஸ் வக்கிரங்களிலிருந்து தப்பிப்பது எப்படி?

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 13 Mar, 2019 12:04 pm
how-to-escape-from-the-onslaught-of-sexual-perversion

இரண்டு தலைமுறைக்கு முன்பு வரை கூட தமிழ்ச் சமூகத்தில், பொண்ணு பெரிய மனுஷி ஆகி ரெண்டு வருசம் ஆகியும் இன்னும் வீட்ல வச்சுட்டு இருக்காங்களே? இதெல்லாம் அடுக்குமா? கொஞ்சம் கூட பொறுப்பில்லாத பெத்தவங்களா இருக்காங்களே என்று ஆதங்கப்பட்டார்கள். அன்று முதிர்கன்னியின் வயது 18. முதிர்கன்னிக்கு அளவுகோல் 36 இன்று.

உலகில் எந்த ஜீவராசிக்கும் இல்லாத கொடுமை மனித இனத்திற்கு மட்டும் உண்டு. அது,  “தன் காமம் அடக்குதல்”. உண்பது போல உறங்குவது போல உறவு கொள்வதும் முழுக்க முழுக்க இயற்கையானதே! பசிக்கும் போது சாப்பிடும் மனிதனை, உறக்கம் வந்தால் உறங்கும் மனிதனையும் முழுமையாக ஏற்றுக் கொள்ளும் சமூகம் உடல் உறவுக்கு மட்டும் கட்டுப்பாடு விதித்து வைத்துள்ளது.

அதில் எந்தத் தவறும் இல்லை. கட்டுப்பாடு இல்லாமல் இருந்திருந்தால் மனிதப் பெருக்கம் ஏற்பட்டு உயிரியல் ரீதியாக மனித இனம் மற்ற எல்லா இனங்களையும் அழித்திருக்கும் உணர்வியல் ரீதியாகத் தனக்குத் தானே சண்டையிட்டு தானும் அழிந்து போயிருக்கும். இப்ப நாம பார்க்கப் போற விசயம் அதுவல்ல.


ஒரு காலை மட்டும் கடிக்கிறது என்று ஒரு செருப்பை மட்டும் மாற்றக் கூடாது. மாத்தினா ஜோடியா தான் மாத்தணும். இல்லாவிட்டால் அடுத்த காலும் கடிபடும்.

ஆண் பெண் திருமண வயதை நிர்ணயம் பண்ணும் போதே இயற்கையான உடல் வேட்கையைக் கடக்க / அடக்கத் தேவையான வழிகளையும் சட்டமாக்கியிருக்க வேண்டும். பெண்ணுக்கு 18 ஆணுக்கு 21 என்ற சட்டத்தை எல்லாம் சாதாரணமாக முழுங்கி விட்டது இன்றைய  சமூகப் பொருளாதார நிர்பந்தம்.

இருபத்தி ஐந்து வயதிற்குள் திருமணம் செய்து கொள்ளும் ஆண் விநோத ஜந்தாகி விட்டான் நகரவீதிகளில். நகர வாழ்வில், சராசரி திருமண வயது முப்பதைத் தாண்டியாகி விட்டது. அது வரை மனமும் உடலும் நரக வாழ்வில். தீர்த்துக் கொள்ள என்ன செய்வான்? கிடைக்கும் இடத்தில் பொறுக்கித் தின்கிறான். சில நேரங்களில் மனிதனாக. சில நேரங்களில் மிருகமாக. ஆனால், இது சமூக ஒழுங்கு இல்லையே!!!

தீர்வு…???
ஒன்று, கற்பொழுக்கம், ஆன்மிகம், உடற்பயிற்சியாக யோகா,  மனப்பயிற்சிக்கான நீதிக் கதைகள் மற்றும் தியானம் போன்றவற்றை வாழ்வியலாகக் கொண்ட சமூகமாக இருந்திருக்க வேண்டும். அல்லது மிகக் கடுமையான பாலியல் தொடர்பான சட்டங்களைக் கொண்ட சமூகமாக இருந்திருக்க வேண்டும். ரெண்டும்கெட்டான் சமூகத்தை உருவாக்கி வைத்தது நாம். ஆனால், குற்றம் சொல்வது பிறரை.

இன்றைய சமூகச் சூழல் என்ன?

1, லைஃப்ல செட்டில் ஆகாம எப்படி கல்யாணம் பண்ணிக்கிறது என்று ஆணும், செட்டில் ஆகாதவனைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது என்று பெண்ணும் முடிவுடன் இருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால், இவர்கள் இருவருக்கும் எது “ லைஃப் செட்டில்” என்ற வரையறை கிடையாது / தெரியாது. 

2, ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று வேளை வயிராற சாப்பிட்டாலே வசதியானவர் என்ற காலத்திலேயே 14, 16 வயதில் திருமணம் செய்து கொடுக்க வேண்டிய அளவில் உடற்தேவை இருந்திருக்கிறது. இன்றைக்கு, காலை எழுந்தது கெலோக்ஸ், பத்து மணிக்கு பிஸ்கட், மதியம் மட்டன் பிரியாணி, மாலை ரசமலாய், இரவு இரண்டே இரண்டு நெய் ரோஸ்ட் என்று சாப்பிடும் இளைய தலைமுறையின் உடற்தேவை எவ்வளவு இருக்கும் என்று எப்பொழுதாவது நினைத்துப் பார்க்கிறோமா?

3, பூப்பெய்து விட்டால், தந்தைக்குச் சமமான தாய்மாமனை விட்டு குச்சு கட்டி, பிற ஆண்கள் கண்ணில் படாமல் / பாராமல் வாழ்ந்த பெண்ணிற்கு 14. 16 வயதில் திருமணம் தேவைப்பட்ட சமூகத்தில், பள்ளி, கல்லூரி, அலுவலகம் என எல்லா இடத்திலும் எதிர்பாலருடன் ஒட்டி உரசித் திரியும் வாய்ப்புள்ள ஆண்/ பெண்ணிற்கு முப்பது முப்பத்தைந்தில் திருமணம். 

நிஜமாகவே யோசித்துப் பாருங்கள் தவறு பாலியல் வரம்புகளைத் தாண்டும் இளைஞர்கள் மீதா? இத்தனையும் கொடுத்து வாழ்க்கை என்றால் என்னவென்று சொல்லிக் கொடுக்காத பெற்றோர்கள் மீதா?

அப்படி இல்லை, சமூக மாற்றத்திற்கேற்ப நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு படிப்பு, வேலை, வாழ்க்கை முறையைக் கொடுக்கிறோம். ஒரு குடும்பம் மட்டும் பழைமையிலேயே நின்று விட்டால் எல்லாரும் எங்கள் குழந்தைகளைக் கடந்து ஓடி விடுவார்கள் என்று அங்கலாய்ப்பவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி…

எல்லாரும் எங்கே ஓடுகிறார்கள் என்று யோசித்திருக்கிறீர்களா?

எல்லாரும் ஓடுவது மரணத்தை நோக்கி தான். உங்கள் குழந்தைகளாவது நிம்மதியாக நிகழ்காலங்களை அனுபவித்து நிதானமாகக் கடக்கட்டுமே? ஆன் சைட் மாப்பிள்ளை தான் வேண்டும் என்றில்லாமல், நல்ல ஆண்மையுள்ள மாப்பிள்ளையைத் தேடி பருவத்திலேயே மணமுடித்து வையுங்கள். ஐடி சம்பளகார மருமகள் தான் வேண்டும் என்று அடம்பிடிக்காமல், அடுக்களையிலும் கோலோச்சும் மகாலட்சுமியைத் தேர்ந்தெடுத்து மகன் வாழ்க்கையை மேம்படுத்துங்கள்.

கல்யாணம் பண்ணிய பிறகும் படிக்கலாம், சம்பாதிக்கலாம், சாதிக்கலாம். 
எல்லாம் முடிச்சுட்டு தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு அடம் பிடித்தால், உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை சந்ததிக்கு வழியில்லாமலும், சமூக வாழ்க்கை கட்டுப்பாடற்ற சாக்கடையாகவும் மாறிப் போகக் கூடும்.

 சமூக மாற்றம் வேறு கிரகத்திலிருந்து வந்து யாரோ மாற்றுவதில்லை. நாம் தான் மாத்திக்கணும்.

இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள அனைத்து கருத்துக்களும் கட்டுரையாளரின் சொந்த கருத்துக்களே. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close