வரலாற்றை படியுங்கள் ராகுல் ஜி

  பாரதி பித்தன்   | Last Modified : 14 Mar, 2019 06:51 pm
special-article-about-rahul-gandhi

இளைஞர்களிடம் தானே பேசுகிறோம், அவர்களுக்கு எங்கே வரலாறு தெரியப்போகிறது என்ற தைரியம் மேடையில் ஏறும் போது பல தலைவர்களுக்கு இருக்கும். ஆனால், அந்த அறையை விட்டு வெளியேறும் போது, அந்த தலைவர் எவ்வளவு அபத்தமாக பேசி இருக்கிறார் என்று தெரியவரும்.
 
அப்படி பட்டதலைவராகத்தான், சென்னையில் கல்லுாரி மாணவிகளிடம் பேசிய ராகுலும் தெரிகிறார். காஷ்மீர் விவகாரம் குறித்து அவர் பேசும் போது, ‛‛2004ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் முன்பு, பா.ஜ.க., காஷ்மீரில் பதட்டத்தை உருவாக்கி சென்றது. அந்த சமயத்தில் தீவிரவாதிகளை அணுகுவதற்கு சிறப்பான திட்டத்தை தீட்டினோம்.  அது பாகிஸ்தானை தனிமைப்படுத்துவது தான். 

அதே நேரத்தில் புதிய தொழில் தொடங்குவது உட்பட பொருளாதார ரீதியாகவும், காஷ்மீரை வலுப்படுத்தினோம், அதன் மூலம் மக்கள் ஆதரவைப் பெற்று நாங்கள் தீவிரவாதத்தை ஒடுக்கினோம். ஆனால் இப்போது மோடி செய்யும் அனைத்தும், தீவிரவாதத்தை துாண்டும் வகையில் உள்ளது. புல்வாமா விவகாரத்தில் 45 சிஆர்பிஎப் வீரர்கள் இறந்ததற்கு பதிலை தேடக் கூடாது. உரிய பாதுகாப்பு இல்லாததால் தான் அவர்கள் இறந்தது உண்மை’’ என அவர் கூறி உள்ளார். 

காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் யார் பிரதமர் பதவியில் அமர்வாரோ, அவர் இப்படி பேசுகிறார். சி.ஆர்.பி.எப்., வீரர்கள் தாக்குதலுக்கு பதில் தேடக்கூடாது என்கிறார். இந்த எண்ணம் கொண்டவர் பிரதமராக இருக்கும் 5 ஆண்டு காலத்தில், தீவிரவாதிகள் எந்த அளவிற்கு ஆட்டம் போடுவார்கள். 

அதனை நம் பிரதமர் எப்படி கையாள்வார் என்பதற்கு அவர் ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார். ஆட்டுக்குட்டியை விழுங்கிய மலைப்பாம்பு அசையக் கூட முடியாமல், அதே இடத்தில் படுத்து கிடக்கும். சிறுமி குச்சியால் அதை குத்தினால் கூட அது எதுவும் செய்யாது. 

இதை பார்த்து மலைப்பாம்பு பார்த்தாயா, அஹிம்சைவாதியாக மாறிவிட்டது. தன்னை தாக்கிய சிறுமியை கூட அது துன்புறுத்தாமல் மவுனமாக படுத்துக் கொண்டு இருக்கிறது என்று பாடம் போதிப்பது போல, ராகுல் காஷ்மீர் விஷயத்தை பேசி இருக்கிறார். 
இவர் சொல்லும் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் தான், காஷ்மீருக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. அதன் பின்னர் தேவை ஏற்பட்ட போது, கார்கில் போர் நடத்தி வெற்றியும் காணப்பட்டது.  ஆனால் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் நடந்த போர்களில் முடிவுக்கு வந்தனவே தவிர வெற்றி வரவில்லை. 

சியாசின் மலை உச்சியில் போர் நடத்த போது, நம் ராணுவ தளபதிகள் இன்னும் சில நாட்கள் போர் நடத்த அனுமதி தாருங்கள், பாகிஸ்தானே இல்லாமல் செய்கிறோம் என்று கெஞ்சிய போது, மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. 

மக்கள் ஒத்துழைப்புடன் தீவிரவாதிகளை அடக்கினேன் என்று சொல்லும் ராகுல், இவரது சொந்த ஜாதிகார்களான காஷ்மீர் பண்டிட்கள் இன்று வரை சொந்த நாட்டில் அகதிகளாக திரிவதற்கு என்ன காரணம் என்று சிந்தித்தாரா? அதற்கு அவர்கள் பிரச்னையை தீர்க்க ஏதாவது நடடிக்கை எடுத்திருப்பாரா? இல்லை, இதற்கு முன், அரை நுாற்றாண்டுகள் நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சிதான் ஏதும் செய்ததா?

காஷ்மீர் விவகாரம் தோன்றியது தொடர்ந்தது எல்லாமே காங்கிரஸ் ஆட்சியில் தான். 10 ஆண்டுகள் ஆட்சி செய்த பாஜக தான் இந்த பிரச்னையை  ஊதி பெரிதாக்கியது போல கூறுகிறார். 

இலங்கை தமிழர் பிரச்னையை பற்றி யாராவது கேள்வி எழுப்பி இருந்தாலும் இது போன்ற பதில் தான் கிடைக்கும். இந்திராவிற்கு இந்த நாட்டின் பிரதமர்  என்ற உணர்வு இருந்தது. அதன் காரணமாக வங்கதேசம் என்ற ஒரு நாடே உருவானது. மன்மோகன் சிங் போன்றவர்கள் நடிப்பு பிரதமர்கள். அதனால் சுற்றி உள்ள நாடுகளில் எது நடந்தாலும் கடிதம் எழுதுவார்களே தவிர்த்து அதற்கு மேல் எதுவும் செய்யமாட்டார். 

சரியோ தவறோ இந்தியாவிடம் வாலாட்டினால் தற்போதுள்ள அரசு உதைக்கும் என்ற எண்ணம் ஏற்பட்டு இருக்கிறது.  இத்தனைக்கும், நம்மால் அவர்களுக்கு எதுவும் நடக்கப்போவதில்லை. அந்த சூழ்நிலையில் கூட அவர்கள் இவ்வாறு பேசுகிறார்கள். 

மற்றவர்களை விட ராகுல் இந்த நாட்டின் வீழ்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றை பற்றி பேசுவதில் பல சங்கடங்கள் இருக்கின்றன. அதற்கு காங்கிரஸ் கட்சி தான் இவ்வளவு ஆண்டுகள் ஆட்சி செய்து இருக்கின்றன என்பது தான் காரணம். ராகுல் பாஜவை, தற்போதுள்ள மத்திய அரசை திட்டி தீர்ப்பதற்கு பதிலாக காங்கிரஸ் ஆட்சியில் இந்த இந்த தவறுகள் நடந்தன. அவற்றை இப்படி திருத்தி இருக்கிறோம். அதனால் நாடு இன்னும் வேகமாக வளரும்  என்று பேசுவது நல்லது. 

வரலாறு தெரிந்து பேசினால், ராகுலுக்கு மட்டுமல்ல எல்லா தலைவர்களுக்குமே வளமான எதிர்காலம் உண்டு. இதை அவர்கள் உணர்ந்து செயல்பட்டால் நாட்டுக்கும் நல்லது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close