நாட்டை கேவலப்படுத்தும் நாகரிக கோமாளிகள்!

  Newstm Desk   | Last Modified : 15 Mar, 2019 05:56 pm
congress-doing-cheap-politics-over-pm-modi-s-activities

ஜனநாயக நாட்டில் குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்தல் நடப்பதும், அதில், பல அரசியல் கட்சிகள்  போட்டியிட்டு, தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், தனிப் பெரும்பான்மையுடனோ, கூட்டணி அமைத்தோ ஆட்சி அமைப்பது காலம் காலமாக நடந்து வரும் வழக்கமான நிகழ்வு.

தொடர்ந்து பல ஆண்டுகள் நாட்டை ஆண்ட கட்சி, திடீரென தோல்வி அடைவதும், ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்த கட்சி, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதும் மக்கள் கையில் உள்ள ஒரு விரல் புரட்சியால் நிகழ்பவை. 

ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை வைத்தால், அவர்களுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கிய சம்பவங்களும் நடக்கத்தான் செய்துள்ளன. அப்படி இருக்கையில், எதிர்க்கட்சிகளுக்கு பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ, நாட்டு மக்களால், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கு என்ன கவுரவம் வழங்க வேண்டுமாே அதை கட்டாயம் வழங்கித் தான் ஆக வேண்டும். அது தான், ஜனநாயகத்திற்கு நாம் அளிக்கும் மரியாதை. 

ஆனால், இன்றைய அரசியல்வாதிகள் பலரும், தங்கள் சுயலாபத்திற்காக, மாற்றுக் கட்சியினரை தரம் தாழ்ந்து விமர்சிக்கத் துவங்கியுள்ளனர். அதிலும், வெறும் அரசியல் கட்சித் தலைவராக இருந்தால் பரவாயில்லை. நாட்டின் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை வாக்குகளாக பெற்று, நாட்டின் பிரதமராக இருக்கும் ஒருவரின் செயல்பாடுகளை, தரம் தாழ்ந்து விமர்சித்தால், அது, நம் தலையில் நாமே குப்பை கொட்டிக் கொள்வதற்கு சமமாகும். 

அது போன்ற செயலில் தான், காங்கிரஸ் கட்சியினர் தற்போது ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை வரவேற்று, அவரிடம் பல்வேறு திட்டங்கள் குறித்து பேசி, நம் நாட்டிற்கு வந்த விருந்தினரை உபசரித்த பிரதமர் நரேந்திர மாேடியின் செயல்பாடுகளை, இதற்கு மேல் கேவலமாக விமர்சிக்க முடியாது என்ற அளவில் விமர்சித்துள்ளனர் காங்கிரசார். 

காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், பிரதமர் மாேடியை கலாய்க்கும் வகையிலான பல வீடியோக்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் குறிப்பாக, சீன அதிபருடனான சந்திப்பு குறித்த வீடியோவில், பிரதமர் மாேடியை மிகவும் கொச்சைபடுத்தி விமர்சித்துள்ளனர். 

 

ஒரு நாட்டின் பிரதமர், அண்டை நாட்டின் அதிபரை சந்திக்கும் நிகழ்வை, அதே நாட்டை சேர்ந்த மற்றொரு பிரதான அரசியல் கட்சி, அதுவும், 50 ஆண்டுகளுக்கு மேல் நாட்டை ஆண்ட கட்சி இவ்வளவு தரம் தாழ்ந்து விமர்சிப்பது என்பது, உலகின் வேறெந்த நாடுகளிலும் இதுவரை நடந்திராத ஒன்றாகவே உள்ளது. 
அது தவிர, பல்வேறு நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மாேடி, அந்நாட்டு தலைவர்களை கட்டித்தழுவி, அவர்களுடன் நட்பு பாராட்டும் விதத்தை, இவ்வளவு கேவலமாகவா விமர்சிப்பர் எனத் தான் கேட்கத் தோன்றுகிறது. 

 

பயங்கரவாதத்திற்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளையே சந்தேகிக்கும் இவர்கள், நாட்டின் பிரதமரையா விட்டு வைப்பார்கள் என்ற கேள்வி இயற்கையாக எழத்தான் செய்கிறது. காங்கிரசாரின் இது போன்ற செயல்கள், நரேந்திர மாேடி என்ற தனி மனிதனை மட்டும் விமர்சிப்பதாக இல்லை. 

இந்தியா எனும் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமரை, அவரை நம்பி வாக்களித்த கோடான கோடி இந்திய பிரஜைகளை, உலக அரங்கின் முன் நிறுத்தி, அவர்கள் அசிங்கப்படுத்துவதற்கு சமம். 

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவரோ அல்லது வேறு எந்த கட்சியை சேர்ந்த ஒருவரோ பிரதமராக இருந்திருந்தால் கூட, வேறு யாரும் இவ்வளவு கேவலமாக விமர்சிக்க கூடாது; அது தான், நாகரிகம். 

நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்கள், நாடு சுதந்திரம் அடைந்தது முதல் நாட்டை ஆளும் பொறுப்பில் இருந்தவர்கள் என, மார்தட்டிக் கொள்ளும் காங்கிரசார், ஓட்டு வங்கி அரசியலுக்காக, ஜனநாயக நெறிமுறை தவறிவிட்டனரோ என்ற ஐயப்பாட்டை எழுப்பத்தான் செய்கிறது.

பிரதமர் மாேடியை கேவலப்படுத்துவதாக எண்ணி, நாட்டையும், நாட்டு மக்களையும் கேவலப்படுத்திய இவர்களை, ‛நாகரிக கோமாளிகள்’ என்று சொல்வதைத் தவிர வேறு எப்படி அழைப்பது என தெரியவில்லை. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close