மகாத்மா காந்தி பற்றிய முக்கிய ரகசியங்கள் வெளியீடு!

  Newstm Desk   | Last Modified : 29 Mar, 2019 12:50 pm
gandhi-s-health-records-revealed-for-the-1st-time

நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவரும், தேசத்தந்தை என அழைக்கப்படுபவருமான மகாத்மா காந்தியின் உடல் நலம் குறித்த பல்வேறு அம்சங்கள், முதல் முறையாக பொதுமக்களின் பார்வைக்காக, டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. காந்திக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்ததும், அவர் பல அறுவை சிகிச்சைகளுக்கு ஆளான தகவல்களும் அதில் இடம் பெற்றுள்ளன. 

அஹிம்சை, சத்தியம் ஆகியவற்றை உயிர் மூச்சாக கொண்டு வாழ்ந்தவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற இயற்பெயரை உடைய மகாத்மா காந்தி. பிரிட்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்ற அவர், வெளிநாட்டு வேலை உதறித் தள்ளிவிட்டு, நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர். 

அஹிம்சை வழியில் வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்த அவர், மாபெரும் இயக்கத்தை வழி நடத்தி, அறப்போராட்டத்தின் மூலம் மிகப் பெரிய நாட்டிற்கு விடுதலை பெற்றுத் தந்தார். இதன் மூலம், உலகின் ஒட்டுமாெத்த பார்வையும் அவர் பக்கம் திரும்பியது. உகல அரங்கில் இன்றளவும் அஹிம்சைக்கு மறு பெயராக பார்க்கப்படும் மகாத்மா காந்தியை பற்றி அறிவதில் பலருக்கும் ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. 

அந்த வகையில், அவர் உயிர் வாழ்ந்த காலத்தில், அவருக்கு என்னென்ன உடல் உபாதைகள் ஏற்பட்டன, எவற்றிற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டார் உள்ளிட்ட பல அம்சங்கள் அதில் இடம் பெற்றுள்ளன. 

ஐசிஎம்ஆர் எனப்படும், இந்திய மருத்துவ ஆராச்சி கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ‛‛Gandhi and Health @ 150’’ என்ற தலைப்பிலான புத்தகத்தை, தரம்சாலாவில் தலாய் லாமா வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

மகாத்மா காந்தியின் உயரம், 165 செ.மீ., 1939ம் ஆண்டு அவரின் உடல் எடை, 46.7 கிலோவாக இருந்தது. இது, அவரின் உயரத்திற்கு ஏற்ற எடையாக இல்லாமல் இருந்தது. 1925, 1936 மற்றும் 1944ம் ஆண்டுகளில், அவருக்கு மலேரியா உள்ளிட்ட கொடிய நோய் தாக்கம் ஏற்பட்டது. அதற்கு அவர் சிகிச்சையும் பெற்றார். 

இருந்தும் அவர், பல நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். இவ்வளவு குறைவான உடல் எடையுடன், பல நாட்கள் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்த போதிலும் சுதந்திர போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார். 

1940, பிப்ரவரி 19ம் தேதி, அவரின் ரத்த அழுத்தம், 220/ 110 ஆக பதிவானது. இவ்வளவு அதிக உயர் ரத்த அழுத்தம் இருந்த போதிலும், அவரது இதயம் எந்த பாதிப்புக்கும் ஆளாகவில்லை. அது, அவருக்கு எடுக்கப்பட்ட இசிஜியில் தெளிவாக தெரிய வந்தது. 

1919 மற்றும் 1924ம் ஆண்டுகளில், பைல்ஸ் எனப்படும் மூல நோய் சிகிச்சைக்காகவும், குடலிரக்க சிகிச்சைக்காகவும், இரு முறை அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அவர் மாட்டுப் பால் அருந்துவதை அறவே தவிர்த்தார்; அவரின் மனைவி கட்டாயப்படுத்தியதால், வேறு வழியின்றி ஆட்டுப் பால் குடித்து வந்தார். 

ஒரு நாளைக்கு சராசரியாக, 18 கி.மீ., நடைபயணம் மேற்கொண்டார். 1913 முதல் 1948ம் ஆண்டு அவர் இறக்கும் வரை, 79 ஆயிரம் கி.மீ., நடைபயணம் செய்துள்ளார். இது, பூமியை, இரு முறை நடந்தே வலம் வந்ததற்கு சமம். 

எத்தனையோ உடல் உபாதைகள் இருந்த போதும், அவரது மன வலிமை குன்றவில்லை. நேர்மை, சத்தியம், அஹிம்சை உள்ளிட்டவற்றை தாரக மந்திரமாக கொண்டிருந்து அவர், அந்த வழியில் நடப்பது தான் ராமராஜ்ஜியம் எனவும் விளக்கம் அளித்தார். தன் வாழ் நாளின் இறுதி மூச்சு வரை ராம நாமத்தை இடை விடாது ஜெபித்து வந்த அவர், மிகுந்த இறை நம்பிக்கை கொண்டவராகவும் திகழ்ந்தார். 

ஏழைகளுக்கு உதவுதல், அவரவர் வேலைகளை அவர்களே செய்து கொள்ளுதல், எந்த சந்தர்ப்பத்திலும் கோபப்படாமல் இருத்தல், எப்பாேதும், அஹிம்சையை கைவிடாது அற வழியில் நடத்தல் போன்ற கொள்கைகளை மகாத்மா காந்தி, தன் இறுதி மூச்சு வரை கடைபிடித்தார். 

இவ்வாறு அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close