நீட் பெயர் மாற்றம் சமூக நீதியை நிலைநாட்டுமா?

  பாரதி பித்தன்   | Last Modified : 05 Apr, 2019 11:38 am
changing-the-name-of-neet-can-do-social-justice

தனியார் பள்ளி தாளாளர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது, சார் மெடிக்கல், இன்ஜினியரிங் படிக்க விரும்பும் பசங்கதான் எங்கள் பள்ளியில் சேர விரும்புகிறார்கள். நிர்வாக கோட்டாவில் தான் இடம் கிடைக்கும் என்றால் ஒரு கோடி ரூபாய் வரை நன்கொடை தர வேண்டும். எங்கள் மாணவர்கள் அரசு கோட்டாவில் சேருவார்கள். கட்டணம் குறைவு. பெற்றோருக்கு பல லட்சம் மிச்சம். அந்த அளவிற்காக நாங்கள் கட்டணம் வாங்குகிறோம் என்றார்.

முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர் இது குறித்து கூறுகையில், சார் அரசு பள்ளிகள் சாலையை ஒட்டித்தான் இருக்கும். பறக்கும் படையினர் தேர்வு நேரத்தில் ஏதோ திருடனை பிடிக்கப் போவது போல பள்ளிகூடத்தின் வாசலில் இறங்கிய உடன் ஒவ்வொரு வகுப்பறைக்கும் பாய்ந்து சென்று விடுவார்கள். இதானால் பிட்டு, காப்பி எல்லாம் அவ்வளவு சிரமம். 

தனியார் பள்ளிகளில் மெயின் கேட் அதை ஒட்டி வாட்ச்மேன் அறை அங்கிருந்து சுமார் அரைக்கிலோ மீட்டர் சென்றால் தான் வகுப்புகளே தெரியும். பறக்கும் படை மெயின் கேட்டிற்கு வெளியே நிற்பதை வாட்ச் மேன் பார்த்து தலைமை ஆசிரியருக்கு தகவல் சொல்லித்தான் கதவையே திறப்பார். அப்புறம் என்ன படையாவது, பறப்பதாவது இவர்கள் தேர்வு மையத்திற்கு செல்வதற்குள் அத்தனையும் மூடி மறைக்கப்பட்டிருக்கும். நல்ல டிபன் காப்பி, முடிந்தால் மட்டன் பிரியாணி, பெப்பர் சிக்கன் சாப்பிட்டு வர வேண்டியதுதான் என்றார். 

மருத்துப்படிப்பில் மாநிலத்தில் முதல் பத்து இடங்களை எடுத்த மாணவர்களில் பேட்டி எடுத்தபோது ஒருவர் கூறுகையில், நீங்க இப்போ வீடு தேடி வந்து பேட்டி எடுக்கிறீங்க, ஆனால் பிளஸ் 2 ரிசல்ட் வந்த போது எங்களை யாரும் சீண்டக் கூடவில்லை. கூடுதல் மதிப்பெண் அடிப்படையில் வேற பசங்களை தேடி ஓடினீர்கள், இப்போ பாருங்க அவங்க 40 இடத்தில் தான் இருக்காங்க. நாங்க 4 பாடத்தில் 200க்கு 200 எடுத்து முதல் இடத்தில் இருக்கோம் என்றார். பிளஸ் 2வில் மொத்த மதிப்பெண் 1190 என்றால் கூட மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காது. அதற்கு பதிலாக இயற்பியல், வேதியியல், உயிரியியல், கணக்கு பாடங்களில் 200க்கு 200, தமிழ் ஆங்கிலத்தில் 140 என 940 மதிப்பெண் பெற்றவன் டாக்டர் ஆகிவிடுவான். 

இந்த சம்பவங்கள் எல்லாம் பிளஸ் 2 மதிப்பெண் பற்றிய பல தரப்பினரின் பார்வை. இதன் அடிப்படையில் தான் மருத்துவம், இன்ஜியரிங் சேர்க்கை இருந்தது.

இந்த நிலையில் தான் கடந்த 2009ம் ஆண்டு பிரதமராக இருந்த மன்மோகன் சிங், மருத்துவக்கல்வியின் தரம் குறைந்து விட்டது அதனை உயர்த்த வேண்டிய வழிமுறையை கண்டுபிடிக்க வேண்டும் என்றார். இதைத் தொடர்ந்து நீட் என்று பெயர் இல்லாத நுழைவுத் தேர்வு முறை ஒன்றை காங்கிரஸ் அரசு அறிமுகம் செய்ய முயன்றது. ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான நிலையில் தனியார் கல்லுாரி நிர்வாகிகள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, நீதிபதிகளின் கவனத்தை ‘கவர்ந்து’ நுழைவுத் தேர்வுக்கு தடை வாங்கி விடுவார்கள். இந்த நிலை 2013ம் ஆண்டு வரை தொடர்ந்தது. அந்த ஆண்டில் கோர்ட் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று முடிவு கட்டியதும், நுழைவுத்தேர்வுக்கான வழிமுறைகளை மத்திய அரசு உருவாக்கி, கோர்ட் ஒப்புதலுக்கு அனுப்பியது. இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்படவே வெறும் நுழைவுத் தேர்வு பெயர் மாற்றம் பெற்று நீட் என வெளிப்பட்டது. 

இதற்கும் கூட தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இன்ஜினியரிங் கல்லுாரியில் 3 பேர் படித்தவர்களை கொண்ட ஒரு ஏழைப் பெண் டாக்டர் கனவு சிதைந்ததால் தற்கொலை செய்து கொண்டார். மேலும் தனியார் கல்வி நிறுவனங்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களிடம் மட்டுமே நிர்வாக கோட்டாவில் இடம் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை உருவானது. இதனால் அவர்களும் கல்லா கட்ட முடியவில்லை. இதனால் நீட் தேர்வு என்பதே அச்சுறுத்தும் வார்த்தையாகிவிட்டது. தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்த்தால் தான்  மாநில நலன் மீதும் ஒரு லட்சம் வரை கட்டி பிளஸ் 2 படிக்கும் ஏழைகள் மீது அக்கறை கொண்டவர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டனர். 

இதனால் இந்த தேர்வின் கருவை உருவாக்கிய காங்கிரஸ் கட்சியே அதை அழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. காங்கிஸ் தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று குறிப்பிட்ட அதே நிலையில் நிபந்தனைக்கு உட்பட்டது என்பது போல வேறு வகையில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கிறது. 

அதாவது நீட் தேர்வி்ன் பெயர் மட்டும் தான் மாற்றப்படுகிறதே தவிர்த்து, தேர்வு இருக்கும் என்பதை காங்கிரஸ் சுட்டிக்காட்டி உள்ளது. இதில் என்ன பெரிய வித்தியாசத்தை காட்டுகிறது காங்கிரஸ் என்று தெரியவில்லை. 

தேர்வின் பெயரை மாற்றிவிட்டால் மட்டும் அதன் பலன் மாறப் போவதில்லை. நீட் தேர்வில் சிக்கல் என்றால் அதை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளை மாற்ற வேண்டுமே தவிர்த்து அதற்கு பதிலாக பேரை மாற்றுவது ஏமாற்று வேலை. காங்கிரஸ் கட்சிக்கு ஏமாற்றுவதுதான் கைவந்த கலையாயிற்றே, அதைத் தான் இப்போது செய்து இருக்கிறார்கள். ஆனால் வாக்காளர்கள் ஏமாந்து விட்டார்களா என மே 23ம் தேதி தெரியும். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close