கர்நாடக மாநில தலைநகரமான பெங்களூருவிலிருந்து சுமார் 251 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சிக்மகளூர். சிக்மகளூர் என்ற அழகிய நகர் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக உள்ளது. சிக்மகளூர் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பசுமையான மலைப்பகுதிகளே ஆகும். சிக்மகளூர் கர்நாடகத்தில் மலைச்சார்ந்த சாதுப்பு நில பகுதியை அதிகமாக கொண்டுள்ள மலநாட் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.
இந்த நகருகென்று ஒரு தனிச்சிறப்பு உள்ளது. சிக்மகளூர் என்ற பெயருக்கு மகளின் ஊர் என பொருள். முன்பு ஒரு காலத்தில் வாழ்ந்த அரசர் ஒருவர் தனது மகளுக்கு இவ்வூரை கல்யாண பரிசாக அளித்ததாக கூறப்படுவதால் இப்பெயர் பெற்றது என கூறப்படுகிறது. இதே போன்று சிக்மகளூர் நகரத்தின் அருகிலேயே ஹைரேமகளூர் என்ற ஊரும் இந்த மாவட்டத்திலேயே அமைந்துள்ளது. மேலும் இந்த பகுதி சுமையான மலைப்பகுதி மட்டும் மல்ல இந்நகரில் வரலாற்று சிறப்பு மிக்க ஏராளமான கோயில்கள் அமைந்திருக்கிறது.
பழமையான மற்றும் பசுமையான அழகுடன் விளங்கும் சிக்மகளூரில் எண்ணற்ற காபி தோட்டங்கள் நிறைந்துள்ளதால் இது கர்நாடகாவின் காபி நகரம் என்று அழைக்கப்படுகிறது. சிக்மகளூர் நகரத்தின் முக்கிய சுற்றுலா தளமாக மஹாத்மா காந்தி பூங்கா அமைந்துள்ளது. தசரா திருவிழா மற்றும் அதையொட்டி வரும் நவராத்திரி திருவிழா கொண்டாட்டங்கள் நடைபெறும் நாட்களில் சுற்றுலா பயணிகள் சிக்மகளூருக்கு வருகை தர பெரிதும் விரும்புகின்றனர். திருவிழா நேரங்களில் இங்கு நடைபெறும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் பாரம்பரிய கொண்டாட்டங்களும் இங்கு வரும் சுற்றுலா பயணிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
வனபகுதிகளுக்கும் மிக பிரபலமான இந்த சிக்மகளூர் பகுதியில் தான் நம் நாட்டில் முதல் முதலாக காபி பயிரிடபட்டதாக சொல்லப்படுகிறது. சிக்மகளூரில் உள்ள மலைப் பகுதிகள் வெயில் காலத்திலும் குளிர்ச்சியாகவே இருக்கும். இந்தியாவிலேயே பன்முகம் கொண்ட சுற்றுலாத்தலங்களுள் சிக்மகளூரும் ஒன்று. சிக்மகளூரில் மலை பிரதேசங்கள், நீர்வீழ்ச்சிகள் கோவில்கள் என எண்ணற்ற பகுதிகள் இருப்பதால் இங்கு வன ஆர்வலர்கள் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.
சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் :
சிக்மகளூரில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் மாணிக்யதாரா என்ற ஒரு சிறு நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. அமைதியான இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு செல்ல விரும்புபவர்கள் இந்த நீர்வீழ்ச்சியை காணலாம்.
சிக்மகளூருக்கு அருகிலுள்ள கெம்மங்குந்தி எனும் இடம் மஹாராஜா நான்காம் கிருஷ்ணராஜா உடையாருக்கு மிகவும் பிடித்த மலை வாசஸ்தலமாம். இங்கு அழகிய ரோஜாத்தோட்டம் உள்ளது.
சிக்மகளூர் பகுதின் அருகில் குத்ரேமூக் என்றழைக்கப்படும் மற்றொரு மலை வாசஸ்தலமும் உள்ளது. இவை குதிரையின் முகம் போன்று தோற்றமளிக்கும் மலையை கொண்டுள்ளதால் குத்ரேமுக் என்று அழைக்கப்படுகிறது.
மலையேறுவதற்க்கு மிகவும் பொருத்தமான சிகரம் என்றால் அது முல்லயநகரி சிகரம் தான். இஞ்க்கு காளத்துகிரி நீர்வீழ்ச்சி அல்லது காளஹஸ்தி நீர்வீழ்ச்சி,என இரண்டு பிரிவுகளாக பிரிந்துள்ள ஹெப்பே நீர்வீழ்ச்சி உள்ளன. இதுமட்டும் மல்ல சிறு அருவிகளான ஷாந்தி மற்றும் கடம்பி உள்ளிட்ட அருவிகளும் சிக்மகளூர் நகரத்தில் அமைந்துள்ளது.
சிக்மகளூருக்கு இப்படியும் செல்லலாம் :
- சென்னையில் இருந்து கர்நாடக மாநிலம் பிரூர் ரயில் நிலையம் சென்று, அங்கிருந்து சிக்மகளூர் நகரத்திற்க்கு செல்லலாம்.
- கோவை, பொள்ளாச்சி பகுதிகளில் இருந்து சிக்மகளூருக்கு சாலை மார்க்கமாகச் செல்பவர்கள் மைசூர் வழியாக செல்லலாம்.
- சென்னையில் இருந்து செல்பவர்கள் பெங்களூரு, ஹாஸன் வழியாக சிக்மகளூருவை அடையலாம். கோவை,மைசூரு,பெங்களூரில் இருந்தும் சிக்மகளூர் செல்லலாம்.