மக்களவை தேர்தல் : அதிகம் அறியப்படாத அரிய தகவல்கள் - 3

  விசேஷா   | Last Modified : 19 May, 2019 05:27 pm
special-article-about-loksabah-election-part-3

இந்திராவின் எழுச்சியும், வீழ்ச்சியும்!

இதற்கு முன் நடைபெற்ற இரண்டு பொதுத் தேர்தல்களிலும், ஏறுமுகம் காட்டிய காங்கிரஸ், இம்முறை சற்று சரிவை சந்தித்தது. இதற்கு முந்தைய தேர்தலை விட, 10 இடங்கள் குறைவாகவே காங்கிரஸ் கட்சியால் கைப்பற்ற முடிந்தது. 1962ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி, 361 இடங்களில் வெற்றி பெற்றது. 

1962ல் நடைபெற்ற பொதுத் தேர்தலே, நாட்டின் முதல் பிரதமர் என்ற பெருமைக்குரிய நேரு போட்டியிட்ட கடைசி தேர்தலாகவும் அமைந்தது. 1964ல் நேரு மறைவுக்குப் பின், லால் பகதுார் சாஸ்திரி பிரதமரானார். எனினும், இரண்டு ஆண்டுகள் மட்டுமே, அவர் பிரதமர் பதவி வகிக்க முடிந்தது. 1966ல் அவர் இறந்தார். 

லால்பகதுார் சாஸ்திரியின் மறைவுக்குப் பின், நேருவின் மகள் இந்திரா, பிரதமரானா். அப்போது ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த இந்திரா, 1967ல் நடைபெற்ற தேர்தலில், ரேபரேலியில் போட்டியிட்டு வென்றார். 

இதற்கு முன், 300 இடங்களுக்கு குறையாமல் வெற்றி பெற்று வந்த காங்கிரஸ் கட்சி, இந்த முறை, 283 இடங்களில் மட்டுமே வென்றது. இந்த தேர்தலில், ராஜாஜியின் சுதந்திரா கட்சி, 44 இடங்களிலும், பாரதிய ஜனசங்கம், 35 இடங்களிலும், தமிழகத்தில், திமுக 25 இடங்களிலும் வெற்றி பெற்றன. சிபிஐ மற்றும் சாேசலிஸ்ட் கட்சிகள், தலா, 23 இடங்களில் வெற்றி பெற்றன. 

தேர்தல் நடைபெற்ற, 520 இடங்களில் 261 இடங்களில் வெற்றி பெற்றால் மத்தியில் ஆட்சி அமைத்துவிடலாம் என்ற நிலை இருந்ததால், காங்கிரஸ் கட்சி, முன்பு எப்போதையும் விட குறைவான இடங்களில் வெற்றி பெற்றாலும், அந்த கட்சி மத்தியில் ஆட்சி அமைப்பதில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. 

இந்த தேர்தலில் வெற்றி பெற்று, இந்திரா மீண்டும் பிரதமர் ஆனார். இதுவரை, ஆகப் பெரும் கட்சியாகவே இருந்து வந்த காங்கிரசின் வாக்கு வங்கி, மெல்ல மெல்ல சரிவதும், பாரதிய ஜன சங்கத்தின் வாக்கு வங்கி அதிகரித்ததும் வந்தன. 

1962 தேர்தலில், 6 சதவீத வாக்குகளை பெற்று, வெறும் 14 இடங்களில் வெற்றி பெற்ற ஜன சங்கம், 1967ல் நடைபெற்ற தேர்தலில், 9.31 சதவீதம் வாக்குகள் பெற்று, 35 இடங்களில் வெற்றி பெற்றது. 

1952ல் நடைபெற்ற முதல் பொது தேர்தலில், வெறும் இரண்டு எம்.பி.,க்களுடன் தன் கணக்கை துவக்கிய பாரதிய ஜனசங்கம், மெல்ல மெல்ல வளர்ந்து, 1967ல், 35 எம்.பி.,க்கள் பலத்தை பெற்றது. 

அதே சமயம், காங்கிரஸ் மட்டுமல்லாது, சிபிஐ மற்றும் சோசலிஸ்ட் கட்சிகளின் வாக்கு வங்கியும் குறிப்பிடத்தக்க அளவு சரிவை கண்டது. இந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி, 40 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்றது. 

அதற்கு அடுத்து, 1971ம் ஆண்டு நடைெபற்ற தேர்தலில், சிறிய மாற்றம் நிகழ்ந்தது. காங்கிரஸ் கட்சி, மீண்டும் எழுச்சி பெற்று, 352 இடங்களில் வெற்றி பெற்றது. பாரதிய ஜனசங்கம், வெறும், 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

இதற்கிடையே, 1975ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் இந்திரா, நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனம் செய்தார். இது, இரண்டு ஆண்டுகள் நீடித்தது. அப்போது, எதிர்க்கட்சிகள் ஒடுக்கப்பட்டன. பத்திரிக்கைகள் செய்தி வெளியிட கடும் கெடுபிடிகள் அமல்படுத்தப்பட்டன. 

இந்திராவின் இந்த அராஜக போக்கால், அடுத்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. சுதந்திர இந்தியாவில், முதல் முறையாக, காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி மத்தியில் ஆட்சியை கைப்பற்றியது. இது, இந்திய அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய மைல் கல்லாக அமைந்தது. எந்த கட்சி வென்றது, காங்கிரசுக்கு எத்தனை இடங்களில் வெற்றி கிடைத்தது என்பது குறித்து, அடுத்த தொடரில் விரிவாக பார்க்கலாம்...

தொடரும்...

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close