மக்களவை தேர்தல் : அதிகம் அறியப்படாத அரிய நிகழ்வுகள் - 5 எமர்ஜென்சிக்கான காரணமும், இந்திரா படுகொலையும்...

  விசேஷா   | Last Modified : 19 May, 2019 05:31 pm
special-article-about-loksabha-election-part-5

காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், இந்தியாவின் இரும்பு பெண்மணி என்ற புகழுடன் திகழ்ந்த இந்திராவின் அரசியல் நடவடிக்கைகள், உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தின. 

எனினும், அவரின் ஆக்ரோஷமான அரசியல் நகர்வுகள், பிற கட்சித் தலைவர்களை வேதனையில் ஆழ்த்தியது. அதாவது, எதிர்க்கட்சிகளே இருக்கக் கூடாது என்ற வகையில் அவரின் செயல்பாடுகள் இருந்தன என்றால், அது மிகையாகாது.

காங்கிரஸ் கட்சியில் மட்டுமின்றி, ஆட்சி அதிகாரத்திலும் அவரது கை ஓங்கியே இருந்தது. இதன் உச்சமாய், நாட்டில் எமர்ஜென்சி நிலை பிரகடனம் செய்யப்பட்டது. 

அதற்கான காரணம் என்னவென்றால், 1971ல் இந்திரா தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என, அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனால், உடனடியாக, பிரதமர் பதவி விலக வேண்டிய சுழல் எழுந்ததால், இந்திரா, நாடு முழுவதும் எமர்ஜென்சி நிலையை பிரகடனம் செய்ய வைத்தார். 

தமிழகம் மற்றும் குஜராத் மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் ஆட்சியை கவிழ்த்து, அங்கு குடியரசு தலைவர் ஆட்சியை நிறுவினார். நாளடைவில் இந்த நிலை நாடு முழுவதும் விரிவடைந்தது. 

நாட்டில் கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டது. பத்திரிக்கைகளுக்கு கடும் நிபந்தனை விதிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர்கள் அதிக அளவில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டனர். 

பாகிஸ்தான் உடனான போரில் வெற்றி பெற்று, வங்க தேசம் என்ற புதிய நாடு உருவாக காரணமாக இருந்த இந்திராவை, நாட்டு மக்கள் எவ்வளவு போற்றினரோ, எமர்ஜென்சியின் போது, அதே அளவு துாற்றவும் செய்தனர். 

மக்கள் மத்தியில் பெற்றிருந்த செல்வாக்கை அவர் இழந்தார். இதன் காரணமாக, அவரது அமைச்சரவையில் இருந்த மொரார்ஜி தேசாய் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரும், அவரை விட்டு விலகினர். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, பிற கட்சிகளிலும், புதிய அமைப்புகளிலும் இணைந்தனர். 

இதையடுத்து, 1977ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. 492 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 154 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 

எதிரணியில் பல கட்சிகள் சேர்ந்து கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஜனதா கட்சி தனியாக, 295 இடங்களிலும், அந்த கட்சித் தலைமையிலான கூட்டணி, 345 இடங்களிலும் வெற்றி பெற்றது. 

இந்திரா அமைச்சரவையில் துணை பிரதமர் அந்தஸ்த்து பெற்றிருந்த மாெரார்ஜி தேசாய், பிரதமர் பொறுப்பேற்றார். சுதந்திர இந்தியாவில், காங்கிரஸ் கட்சி அல்லாத ஒருவர் பிரதமர் பதவி ஏற்றது அதுவே முதல் முறையாக அமைந்தது. 

பழுத்த அரசியல் அனுபவம் வாய்ந்த மாெரார்ஜி தேசாய், மிகத் திறம்பட ஆட்சி செய்தார். இவர் தான், தனக்கு உடல் உபாதைகள் ஏற்படாமல் இருக்கவும், நீண்ட நாட்கள் உயிர் வாழவும், தன் சிறுநீரையே மருந்தாக குடிப்பதாக கூறினார். இவரின் இந்த செயல் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இவர், 81வது வயதில் பிரதமர் ஆனார். தனது, 99வது வயது வரை உயிர் வாழ்ந்தார்.

மாெரார்ஜி தலைமையிலான அரசு, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கவில்லை. இவரை தொடர்ந்து, மதசார்பற்ற ஜனதா கட்சியின் சார்பில், செளத்ரி சரண் சிங் பிரதமர் ஆனார். ஆனால், இவரும், ஓராண்டு மட்டுமே பதவி வகித்தார். இவரது ஆட்சியும் கவிழந்தது. 

அதன் பின், 1980ல் நடைபெற்ற, பொதுத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி மீண்டும் எழுச்சி பெற்றது. அந்த கட்சி, 353 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் முலம், இந்திரா மீண்டும் பிரதமர் ஆனார். தன் பழைய தவறுகளை உணர்ந்த அவர், அவற்றை மீண்டும் செய்யாமல் இருக்கும் வகையில் ஆட்சி செய்தார். 

எனினும், பஞ்சாப் மாநிலத்தில் தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி, நாசவேலைகளில் ஈடுபட்டு வந்த, காலிஸ்தான் பயங்கவராதிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க முயன்றார். 

எத்தனையோ ஆலோசகர்கள் எடுத்துக் கூறியும் கேளாமல், சீக்கியர்கள் புனித தலமாக கருதும், பொற்கோவிலுக்குள், ராணுவத்தை அனுமதித்தார். அவரின் இந்த செயல், சீக்கியர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

சீக்கியர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல், அவர்களை அவமதித்துவிட்டதாக ஒரு தரப்பினர் கோஷங்களை எழுப்பினர். இதன் விளைவாக, இந்திராவின் மெய்க்காப்பாளர்களாக இருந்த சீக்கியர்களே, அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

இந்த படுகொலை சம்பவம் நிகழ்ந்த, 1984 அக்., 31 அன்றே இந்திராவின் மகன் ராஜிவ் நாட்டின் பிரதமர் ஆனார். அதன் பின், மூன்று மாதங்கள் கழித்து நடைபெற்ற பொதுத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெற்றது. 

காங்கிரஸ் கட்சி, 404 இடங்களிலும், புதிதாக உருவாகியிருந்த பாரதிய ஜனதா கட்சி, 2 இடங்களிலும், ஜனதா கட்சி 10 இடங்களிலும் வெற்றி பெற்றன. 

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி இதுவரை இல்லாத வகையில், 49.1 சதவீத வாக்குகளை பெற்றது. பாரதீய ஜனதா கட்சி வெறும் 7.7 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. 

இந்திராவின் மறைவுக்குப் பின், அவரது மகனும், காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவருமான ராஜிவ், நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக பொறுப்பேற்றார். அவரது ஆட்சி காலத்தில் தான் சூப்பர் கம்ப்யூட்டர்கள் அறிமுகம் ஆயின. 

தொழில்நுட்பத்தில் நாடு புதிய பாதையில் செல்ல துவங்கியது. அவர் இளம் தலைவராக இருந்ததால், அதுவரை, எந்த பிரதமர்களும் தொட்டிராத புதிய துறைகளில் கவனம் செலுத்தினார். வெளியுறவுக் கொள்கையில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. 

இதன் மூலம், நாட்டு மக்கள் மத்தியிலும், அரசு உயர் அதிகாரிகள் மத்தியிலும் ராஜிவின் செல்வாக்கு உயர்ந்தது. அதே சமயம், அவரது ஆட்சி காலத்தில் நிகழ்ந்த போபர்ஸ் பீரங்கி பேர ஊழல், அவரது தலைமையிலான அரசுக்கு அவப்பெயரை பெற்றுத் தந்தது. 

இன்னும் பல துறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் ஊழல்கள் நடைபெற்றன. குறிப்பாக, இலங்கையுடனான வெளியுறவுக் கொள்கையில், அரவது நடவடிக்கைகள், அந்நாட்டை சேர்ந்த சிலருக்கு எரிச்சலை உண்டாக்கியது. 

விடுதலை புலிகள் விவகாரத்தில், ராஜிவின் நடவடிக்கைகள் ஒரு தரப்பினரால் வரவேற்கப்பட்டாலும், மற்றொரு தரப்பினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. 

அவரது சொந்த வாழ்வில் எடுத்த சில முக்கிய முடிவுகளால், உள்நாட்டு மக்களின் விமர்சனங்களுக்கு ஆளானார். அவை என்ன என்பது குறித்தும், அவரது ஆட்சி, அவர் படுகொலை செய்யப்பட்டது, அதன் பின் நாட்டில் நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகள் உள்ளிட்டவை குறித்து அடுத்தடுத்த கட்டுரைகளில் காணலாம்....

தொடரும்...

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close