தேர்தலில் வெல்லப்போவது யார்? மக்களவை தேர்தல்: அதிகம் அறியப்படாத அரிய தகவல்கள் - 7

  விசேஷா   | Last Modified : 19 May, 2019 05:27 pm
who-will-win-in-this-election-special-article-about-loksabha-election-part-7

இந்திய அரசியல் அல்லது தேர்தல் வரலாற்றில், 1991ம் ஆண்டு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆம்... ராஜிவ் தலைமையில் மிகப் பெரிய எழுச்சி பெற்ற காங்கிரஸ், மக்கள் மத்தியில் அதன் செல்வாக்கை இழந்து தவித்த காலகட்டம் என்றே கூறலாம். 
 1989 பொதுத் தேர்தலில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களில் வெற்றி கிடைக்காததால், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்த காங்கிரஸ், அந்த படுதாேல்வியிலிருந்து மீண்டு எழவே முடியாத நிலை தான் தொடர்ந்தது. வி.பி.சிங் மற்றும் சந்திரசேகர் என, அடுத்தடுத்து காங்கிரஸ் அல்லாத இரு பிரதமர்கள் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்த பிறகும் கூட, பா.ஜ.,வின் வளர்ச்சியை, அந்த கட்சியால் தடுத்து நிறுத்த முடியவில்லை. 

1991ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவில், நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமான அலை வீசியாதாகவே , உளவுத்துறை, ஊடகங்களில் ரகசிய கருத்து கணிப்பில் தெரிய வந்தது. இது, காங்கிரஸ் கட்சிக்கு பெரும் வேதனை அளித்தது. 

அந்த நிலையில் தான், காங்கிரசை சேர்ந்த முன்னாள் பிரதமர் ராஜிவ், தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதுாரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க வந்தார். அதாவது, 1991ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு, மே 20ம் தேதி நடைபெற்ற நிலையில், மே 21ம் தேதி, ராஜிவ் ஸ்ரீபெரும்புதுார் வருகை புரிகிறார். 

ஏற்கனவே, ராஜிவ் பிரதமராக இருந்த போது, அவரின் நடவடிக்கைகளால், விடுதலைப் புலிகள் கடும் அதிருப்தியில் இருந்ததாகவும், அவர் மீது கடும் கோபத்தில் இருந்ததாகவும் கூறப்பட்டது. இந்த சூழலில் தான், தமிழகம் வந்த ராஜிவ், மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு ஆளாகி உடல் சிதறி பலியானார். 

அந்த தாக்குதலில், ராஜிவுடன் வேறெந்த அரசியல் தலைவர்களும் பலியாகவில்லை; வேறு யாருக்கும் காயம் ஏற்படவும் இல்லை. அவரின் மெய்க்காப்பாளர், அருகில் இருந்த போலீசார், பொதுமக்கள் என பலரும் இறந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களுக்கோ அல்லது அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கோ எந்த ஆபத்தும் நேரவில்லை.

எதிரியின் குறிக்கு தப்பாமல், சரியாக ராஜிவ் மட்டும் பலியானார் அல்லது பலியாக்கப்பட்டார். ராஜிவ் படுகாெலை தொடர்பான வழக்கில் இன்று வரை மர்மம் நீடிக்கவே செய்கிறது. உண்மை குற்றவாளிகள் யார், அதன் பின்னணியில் செயல்பட்டவர்கள் யார், அரசியல்வாதிகளுக்கோ, அதிகாரிகளுக்கோ இதில் தொடர்பு இருந்ததா என்பது குறித்த கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை. 

எனினும், ராஜிவ் படுகொலைக்குப் பின் நடைபெற்ற ஓட்டுப்பதிவின் போது, அனுதாப அலையின் காரணமாக, காங்கிரஸ் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்தன. இதன் காரணமாக, 1991ம் ஆண்டு, பாரதிய ஜனதா தலைமையிலான ஆட்சி அமைய பிரகாசமான வாய்ப்பு இருந்தும் அது பலிக்காமல் போனது. 

ராஜிவ் படுகொலை சம்பவத்துக்கு பின் நடைபெற்ற ஓட்டுப் பதிவுகளில், காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான அலை வீசிய போதும் கூட, அந்த கட்சியால், 244 இடங்களுக்கு மேல் வெல்ல முடியவில்லை. பாரதிய ஜனதா கட்சி, 120 இடங்களில் வெற்றி பெற்றது. 

இதனால், பிற கட்சிகளின் ஆதரவுடன், மைனாரிட்டி காங்கிரஸ் அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றது. அந்தக் கட்சியை சேர்ந்த, பி.வி.நரசிம்ம ராவ் பிரதமர் ஆனார். தென் மாநிலங்களில் ஒன்றான ஆந்திராவை சேர்ந்த நரசிம்ம ராவ், ஒரு கட்டத்தில், ராஜிவால் ஓரங்கட்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ராஜிவ் மறைவுக்குப் பின், சாேனியாவை, அந்த கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் காங்கிரஸ் கட்சியினர் ஏற்க மறுத்ததால், நரசிம்ம ராவ் பிரதமர் ஆனார். 

இவரது ஆட்சி காலத்தில் தான், 1992ம் ஆண்டு டிசம்பரம் 6ம் தேதி உத்தர பிரதேசத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. ஹிந்து கோவில் இருந்த இடத்தின் மேல் தான், பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளதாக கூறிய, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் மற்றும் ராமஜென்ம பூமி கரசேவகர்கள் மசூதி இருந்த இடத்தில், ராமர் கோவில் கட்டியே தீருவோம் என சபதம் ஏற்றனர்.

இதையடுத்து, நாடு முழுவதும்  பெரும் பதற்றம் ஏற்பட்டது. உத்தர பிரதேசத்தில் கவர்னர் ஆட்சி நிறுவப்பட்டது. அதன் பின் மைனாரிட்டி காங்கிரஸ் அரசால், மிகப் பெரிய, பலமான முடிவுகளை எடுக்க முடியவில்லை. அடுத்து வந்த தேர்தலிலும், அந்த கட்சியால், மக்கள் மத்தியில் நம்பிக்கையை பெற முடியவில்லை. 

1996ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி, தனியாக, 161 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு, 140 இடங்கள் மட்டுமே கிடைத்தது. இதையடுத்து, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன், பாரதிய ஜனதாவை சேர்ந்த அடல் பிஹாரி வாஜ்பாய், நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றார்.

எனினும், பார்லிமென்ட்டில் போதிய ஆதரவு இல்லாததால், ஒரு மாதம் கூட கடக்காத நிலையில், அவரது ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன், ஜனதாளத்தை சேர்ந்த தேவகவுடா, ஐ.கே.குஜரால் ஆகியோர் அடுத்தடுத்த ஓராண்டு இடைவெளியில் பிரதமர் பதவியில் அமர்ந்தனர். 

இவர்கள் இருவராலுமே, நிலையான ஆட்சியை தர முடியாததால், 1998ம் ஆண்டு மீண்டும் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில், பா.ஜ., 182 இடங்களிலும், காங்கிரஸ் 141 இடங்களிலும் வெற்றி பெற்றன. மாநில கட்சிகளின் ஆதரவுடன், வாஜ்பாய் மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றார். எனினும், அதிமுக தன் ஆதரவை வாபஸ் பெற்ற காரணத்தால், பார்லிமென்ட்டில் நடைபெற்ற நம்பிக்கை ஓட்டெடுப்பில், ஒரே ஒரு ஓட்டு குறைவால், 1999ல் வாஜ்பாய் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. 


இதையடுத்து, 1999ல் மீண்டும் ஒரு பொதுத் தேர்தல். 182 இடங்களில் வெற்றி பெற்றது பாரதிய ஜனதா. அதே சமயம், சாேனியா தலைமையில் தேர்தலை சந்தித்த காங்கிரசுக்கு, 114 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. மீண்டும் கூட்டணி கட்சிகளின் ஆதவுடன் மத்தியில் ஆட்சி அமைத்தது பா.ஜ.,

தேசிய ஜனநாய கூட்டணி அரசு, மிக வெற்றிகரமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது. சாலை வசதியே இல்லாத குக்கிராமங்களையும், நாட்டின் முக்கிய பகுதிகளுடன் இணைக்கும் வகையில், தங்க நாற்கர சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் புதிதாக போடப்பட்டு, பழைய சாலைகள் தரம் உயர்த்தப்பட்டன. மண் சாலைகள் தார் சாலைகளாக தரம் உயர்த்தப்பட்டன. 

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, முன் எப்போதும் இல்லாத வகையில் சிறப்பான முறையில் பின்பற்றப்பட்டது. கப்பல் போக்குவரத்தில் புதுமைகள் கொண்டுவரப்பட்டன. தேசிய நதிகள் இணைப்புக்கான திட்டங்கள் தீட்டப்பட்டன. நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.  புதிய ரக ஏவுகணை சாேதனைகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றன. 

விஞ்ஞானிகள் புதிய ஆராய்ச்சியில் ஈடுபட ஊக்குவிக்கப்பட்டனர். இவரது ஆட்சி காலத்தில் தான், அப்போதைய மூத்த விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாம் தலைமையில், பொக்ரான் அணு ஆயுத சாேதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. 
இதற்கு முந்தைய, வாஜ்பாய் தலைமையிலான அரசு தான், கார்கில் போரில், பாகிஸ்தான் படையை புறமுதுகிட்டு ஓடச் செய்தது. இவ்வளவு திறம்பட ஆட்சி செய்த பா.ஜ., அரசு அடுத்த, தேர்தலில் 138 மற்றும் காங்கிரஸ் 145 இடங்களிலும் வெற்றி பெற்றது. 

இரண்டு கட்சிகளுக்கும் மெஜாரிட்டி இல்லாத நிலையில், பிற கட்சிகளுடனான கூட்டணியுடன், காங்கிரஸ் கட்சி தலைமையில் மத்தியில், கூட்டணி ஆட்சி அமைந்தது. இந்த ஆட்சியில் தான், ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் வெளியாகின. நிலக்கரி ஊழல், 2ஜி அலைக்கற்றை ஊழல், காமன்வெல்த் போட்டிகள் ஏற்பாட்டில் ஊழல் என தொடர்ந்து பல ஊழல் குற்றச்சாட்டுகள் அதை தொடர்ந்து வழக்குகள் நடைபெற்றன. 

2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. நாட்டையே உலுக்கிய, 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில், திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி கைது செய்யப்பட்டார். 

அதே வழக்கு தொடர்பாக, திமுகவை சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அதே போல், ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு, சட்டவிரோத முறையில் பிஎஸ்என்எல் இணைப்பு வழங்கிய வழக்கு உள்ளிட்டவற்றில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. 

காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீதும் ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் தலைவர் ராகுல், அவரது தாய் சோனியா ஆகியோர் மீது, நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை நிறுவனம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. சோனியாவின் மகள் பிரியங்கா கணவர் ராபர்ட் வாத்ரா மீது, நில அபகரிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

மேற்கண்டோர் மீதான பல குற்றச்சாட்டுகளில், சில வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்டு, சி.பி.ஐ., அமலாக்கத்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பல வழக்குகளில், காங்கிரஸ் தலைவர்கள் ஜாமின் பெற்று, தேர்தலில் போட்டியிட மனுத் தாக்கல் செய்தும், பிரசாரம் செய்தும் வருகின்றனர். 

இந்த நிலையில் தான், 2014ம் ஆண்டு மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மாேடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். குஜராத் மாநிலத்தில் அவர் தலைமையிலான அரசு செயல்படுத்திய வளர்ச்சித் திட்டங்கள், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தின. 

இதன் காரணமாக, நாடு  முழுவதும் மாேடி அலை வீசியது. மாேடி அலையின் சூறாவளியில், தமிழகம் மட்டுமே தப்பியது என்றால் அது மிகையாகாது. நாட்டின் பிற பகுதிகளில், மாேடி அலை என்றால், தமிழகத்தில், அம்மா சூறாவளி வீசியது என்றே கூறலாம். தமிழகத்தின், 39 தொகுதிகளில், 37ஐ கைப்பற்றியது, அதிமுக. 

அகில இந்திய அளவில், பா.ஜ., தனித்து 282 இடங்களில் வெற்றி பெற்றது. சுதந்திர இந்தியாவில், காங்கிரஸ் அல்லாத ஒரு அரசியல் கட்சி, முதல் முறையாக தனிப் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்தது. இந்த தேர்தலில், பா.ஜ., தலைமையிலான கூட்டணிக்கு, 320க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி கிடைத்தது. 

அதே சமயம், காங்கிரஸ் கட்சி, இதுவரை சந்தித்திராத வகையில், படுதோல்வி அடைந்தது. அகில இந்திய அளவில், வெறும், 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, மக்களவையில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கூட பெற முடியாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது. அதன் கூட்டணி கட்சிகளும் படுதோல்வியை சந்தித்தன. 

தமிழகத்தில், திமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் படுதோல்வி அடைந்தது. அதற்கு அடுத்து, 2016ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும், அதிமுகவே வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது. தமிழக அரசியல் வரலாற்றில், எம்ஜிஆருக்குப் பின், ஆளுங்கட்சியே மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய சாதனையை, அப்பாேதைய முதல்வர் ஜெயலலிதா செய்து காட்டினார். 

தமிழகத்தில், ஆட்சியை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட திமுக எதிர்க்கட்சி வரிசையில் மட்டுமே அமர முடிந்தது. இதையடுத்து, ஜெயலலிதா மரணம், ஓபிஎஸ் பதவியேற்பு, சசிகலா சிறைவாசம், இபிஎஸ் முதல்வரானது என வரிசையாய் அரசியல் நிகழ்வுகள் அரங்கேறின. அந்தப் பக்கம், திமுக தலைவர் கருணாநிதி மறைந்தார். அவரது மகன் ஸ்டாலின், அந்த கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார்.

இதையடுத்து, 2019ம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, அதிமுக - பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகள் ஓர் அணியாகவும், திமுக - காங்., மற்றும் கூட்டணிக் கட்சிகள் மற்றொரு அணியாகவும் தேர்தலில் களம் இறங்கியுள்ளன. 

பொருளாதார முன்னேற்றம், நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறை, கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கை, தொழில் வளர்ச்சிக்கான திட்டங்கள், நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள், உள்நாட்டு உற்பத்தி பெருக்கம், இளைஞர் நலனுக்கான திட்டங்கள், பெண்கள் மேம்பாட்டு திட்டங்கள்...

 கிராம முன்னேற்றத்திற்கான திட்டங்கள், துாய்மை இந்தியா, மருத்துவ காப்பீட்டு திட்டம், சுய தொழில் துவங்குவதற்கான வங்கிக் கடன் வசதி திட்டம், நீர் நிலை இணைப்பு திட்டம், கங்கை துாய்மை திட்டம்...

புதிய துறைமுகங்கள் அமைக்கும் திட்டம், நாடு முழுவதும் எய்ம்ஸ் மருத்துவமனையை நிறுவுவதற்கான திட்டம் என, கடந்த ஐந்து ஆண்டுகளில் பா.ஜ., அரசு நிறைவேற்றிய திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்துக்கூறி, பா.ஜ., தலைமையிலான கூட்டணி ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளது. 

அதே சமயம் அவர்கள் கூறும் அனைத்து திட்டங்களிலும் குறைகள் இருப்பதாகக் கூறி, காங்., தலைமையிலான கூட்டணி தேர்தல் பிரசாரம் செய்து வருகிறது. 

இளம் வாக்காளர்கள், நடுத்தர வருவாய் பிரிவினர், ஏழைகள், பெண்கள் உள்ளிட்டோர், இந்த இரு கூட்டணியில் எந்த கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளனர் என்பது பிரம்ம ரகசியமே. ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தலின் முடிவுகள், மே 23ம் தேதி வெளியாக உள்ளன. 

பிரதமர் நரேந்திர மாேடியே மீண்டும் பிரதமர் ஆகப்போகிறாரா அல்லது வேறு யாரேனும் அந்தப் பதவியை பிடிக்கப்போகிறாரா என்ற கேள்விக்கு, மே 23ம் தேதி விடை கிடைத்துவிடும். 

வாக்காளர்களாகிய நாம் தவறாமல் நம் ஜனநாயக கடமையாக வாக்களித்து விட்டு, தேர்தல் முடிவுகளை அறிந்து காெள்ள, மே 23 வரை காத்திருப்போம்.

கடந்த கால தேர்தல் வரலாற்றை முன் வைத்தது போலவே, தற்போது நடைபெறும் மக்களவை தேர்தல் நிகழ்வுகளையும், வாக்குப் பதிவு சதவீதம், தேர்தல் கள நிலவரங்கள், தேர்தல் முடிவுகள் உள்ளிட்டவற்றை, Newstm உடனுக்குடன் பதிவு செய்ய உள்ளது. துல்லியமான தகவல்களுக்கு newstm.in உடன் இணைந்திருங்கள். 

தரவுகள் உதவி : சுந்தரம்.நாகராஜன், தேர்தல் கள ஆய்வாளர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close