ஜனநாயகத்தை வலுப்படுத்தும் தேர்தல் கமிஷனுக்கு சல்யூட்!

  பாரதி பித்தன்   | Last Modified : 26 Apr, 2019 08:00 pm
election-commission-doing-a-great-job-to-reach-100-polling-in-all-elections


வாழ்க்கையில் திருமணத்திற்கும், வாக்குபதிவுக்கும் தான் அனுபவம் கேட்பதில்லை. திருமணத்தால் பாதிப்பு தனிப்பட்டவர்களுக்கானது என்பதால், யாரும் அதை கண்டு கொள்வதில்லை. ஆனால், கெஞ்சி கூத்தாடி ஒரே ஒரு முறை ஓட்டை பறித்து விட்டால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு எவ்விதமான பிரச்னைகளும் இல்லாமல் சொத்து சேர்த்து வாழலாம். 

இதனால் வாக்காளர்களிடம் இருந்து ஓட்டை பிடுங்குவதற்கு, அரசியல் கட்சிகள், ஆயிரத்து எட்டு வேலைகள் செய்கின்றன. நடிகர் மன்சூர் அலிகான் செய்தவற்றையெல்லாம் பார்த்தால், ஒரு ஓட்டுக்கு என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று அதிர்ச்சி, ஆச்சரியம் எல்லாம் ஏற்படுகிறது. 

இதைத் தவிர, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வழக்கம் வேறு. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அணா கணக்கில் பணம் கொடுத்து, வெங்கடாசலபதி படத்தின் மீது சத்தியம் வாங்கியது தொடங்கி, ஆர்.கே. நகரில் டோக்கன் கொடுத்தது வரை, ஓட்டுக்கு நோட்டு என்று கோடி கோடியாக கொட்டி விளையாடும் சூதாட்டமாக தேர்தல் மாறிவிட்டது. 

இந்த தேர்தலில், தமிழகத்தில் எங்களுக்கு பணம் வரவில்லை என்று வாக்காளர்கள் பஸ் மறியல் போராட்டம் நடத்தும் அளவிற்கு முன்னேறி விட்டார்கள். தேர்தல் கமிஷனும், இரவு பகல் பாராமல் விரட்டி விரட்டி அரசியல் கட்சிகள், வியாபாரிகள் என்று அனைத்து தரப்பினரிடம் சோதனை செய்ததில், தமிழகத்தில் உரிய ஆணவங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட (ஏப். 1ம் தேதி வரை) 78.12 கோடி பணம், 328 கிலோ தங்கம்,409 கிலோ வெள்ளி பிடிபட்டது.  

இதையெல்லாம் தாண்டிக் கூட, அதிமுக ஓட்டுக்கு 500; பணம் கொடுக்க கூடாது, பணம் விளையாடுது, பணம் வாங்குவது தவறு என்றெலாம் பேசிய திமுக, 300 என்று அள்ளி  வழங்கியதாகவும் பரவலாக பேசப்படுகிறது. இப்படி பணத்தை அள்ளி வீசயி அரசியல் கட்சிகள், அறுவடைக்கு காத்திருக்கும் விவசாயிகள் போல், காத்திருக்கின்றனர். 
 
100 சதவீத ஓட்டுப்பதிவுக்காக, தேர்தல் கமிஷனும், தேர்தல் குறித்தும், அதில் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் பல வகைகளில் பிரசாரம் செய்தது. அவ்வளவு செய்தும், 71 சதவீதம் தான் தமிழகத்தில் வாக்கு பதிவு நடந்துள்ளது.   
தமிழகத்தைப் போலவே, வேறு சில மாநிலங்களிலும் தேர்தல் கமிஷன் இதே முயற்சியை மேற்கொண்டுள்ளது. 

இதில் உச்சகட்டமாக, மஹாராஷ்டிர மாநில தேரதல் கமிஷன், ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த மாநிலத்தில், 4 கட்டமாக தேர்தல் நடக்கிறது.  மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் 31 தொகுதிகளுக்கு 3 கட்டமாக ஏற்கனவே தேர்தல் முடிந்துவிட்டது. 

மீதி 17 தொகுதிகளுக்கு 4 வது மற்றும் இறுதிகட்டமாக வரும் 29ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் ஒவ்வொரு சட்டசபைத் தொகுதிக்கும், ஒரு ‛சகி மத் தான் கேந்திரா’ என்ற பெண்களே பணியாற்றும் வாக்குசாவடிகள் அமைக்கப்படுகின்றன. 

இங்கு ஓட்டுப் போட வரும் அனைத்து பெண்களுக்கும், நாப்கின் வழங்க தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது. இப்படி பல வழிகளில், 100 சதவீத வாக்குப்பதிவு என்ற இலக்கை எட்ட, தேர்தல் கமிஷன் எத்தனையோ முயற்சி மேற்கொண்டு வருகிறது. 

தேர்தல் கமிஷனின் இப்படிப்பட்ட நடவடிக்கை வரவேற்கத் தக்கது. அதாவது, பெண்களுக்கென தனி வாக்குச் சாவடிகள் அமைப்பதுடன், வாக்குப் பதிவை ஊக்கப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பது ஜனநாயகத்தை மேம்படுத்தும் முயற்சியில் நல்ல அறிகுறி. 

தேர்தல் கமிஷனின் இது போன்ற நடவடிக்கைகளை, அரசியல் கட்சிகள் வழங்கும் இலவங்களோடு ஒப்பிவதில் துளியும் நியாயமில்லை. வாக்காளர்கள் வாக்களித்தால், அது அரசியல்வாதிகளுக்கு லாபம். ஆனால், அவர்கள் வாக்களித்தாலும், வாக்களிக்காவிட்டாலும், தேர்தல் கமிஷனுக்கு எந்த பிரச்னையும் இல்லை. 

மாதம் பிறந்தால் சம்பளம், இதர பணப்பலன்கள் என அரசு ஊழியர்களுக்கான அனைத்து சலுகைகளும், உரிமைகளும் கிடைக்கத்தான் போகிறது. எனினும், ஜனநாயகத்தை மேம்படுத்த, அதாவது, நாட்டில் உள்ள வாக்களிக்கும் உரிமை பெற்ற அனைவரையும், தங்கள் ஜனநாயக கடைமயாற்ற வைப்பதில், ஆகச் சிறந்த பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர், தேர்தல் கமிஷன் அதிகாரிகள், ஊழியர்கள். 

நாடு சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு, இன்று வரை, வாக்குப் பதிவு சதவீதம் சிறிது சிறிதாக உயர்ந்து தான் வந்துள்ளதே தவிர, எப்போதும் பின்னோக்கி சென்றதில்லை. அரசியலில் பெருச்சாலிகள் இருக்கத்தான் செய்வார்கள். இதே அரசியலில் தான், ஊழல் கரைபடியாத தற்போதுள்ள மத்திய ஆட்சியாளர்கள் போல், குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளும் இருக்கின்றனர். 

ஊழல் குற்றச்சாட்டே முன்வைக்க முடியாத படியான பிரதமர் மோடி போன்றோர், இன்றும் தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற முடிகிறதென்றால், அதை ஜனநானயகத்திற்கும், தேர்தல் கமிஷனுக்கும் கிடைத்த வெற்றி என்றே கூறலாம். 

100 சதவீதம் இல்லாவிட்டாலும், மிக விரைவில், 95 சதவீத வாக்குப்பதிவு என்ற இலக்கை, தேர்தல் கமிஷன் அடைந்துவிடும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்காது என்றே கருதுகிறேன். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close